மாற்று சினிமா மாற்றும் சினிமாவாகுமா?

அம்ரிகா... ஆஸ்கர் விருதினைத் தட்டிய ‘லைஃப் ஆஃப் பை’ படத்தின் நாயகன் சூரஜ் சர்மா நடிப்பில் அடுத்து வரப்போகும் பாலிவுட் படம். அதே படத்தில் சூரஜுக்கு அப்பாவாக நடித்திருந்த ஆதில் உசைனும் அம்ரிகாவில் நடித்திருக்கிறார். படத்தை மாற்று சினிமா இயக்குநரான பிரசாந்த் நாயர் இயக்கி இருக்கிறார். இவர் ‘டெல்லி இன் எ டே’, ‘மேக்ஸ் அண்ட் ஹெலீனா’ போன்ற மாற்று சினிமாக்களை இயக்கி இருப்பதன் மூலம் உலக அளவில் சீரியஸ் சினிமா இயக்குநர்கள் மத்தியில் அதிகம் பரிசயம் ஆனவர்.உலகப்புகழ்பெற்ற ‘சன்டேன்ஸ் ஸ்கிரிப்ட் ரைட்டர்ஸ் லேப்’ மூலம் இந்தப் படத்தின் இயக்குநர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கான நிதியுதவி அளிக்கப்பட்டு இந்தப் படம் போனவருடம் எடுக்கப்பட்டது. உலகத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு இப்போது முழுமையாகத் தயாராகி உள்ளது. வரும் ஜனவரி 22-லிருந்து பிப்ரவரி முதல் தேதி வரை அமெரிக்காவின் சன்டேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட இருக்கிறது. 12 ஆயிரத்து 166 மாற்று சினிமாக்கள் லிஸ்ட்டில் இந்தியா சார்பாக முதலிடம் பிடித்த படம் ‘அம்ரிகா’தான்!
அதென்ன அம்ரிகா? படத்தின் இயக்குநர் பிரசாந்த் நாயரே சொல்கிறார்...

‘‘அமெரிக்காவை இந்தியாவின் பின் தங்கிய மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இளைஞன் அம்ரிக்கா என்றுதான் அழைப்பான். கதைப்படி தன் சகோதரன் அமெரிக்காவுக்கு போய்விட்டதாக தன் ஊரும் உறவுகளும் நம்புவதைப்போல தானும் நம்பிக்கொண்டிருக்கிறான் நாயகன். ஆனால், ஒருநாள் தன் சகோதரன் இந்தியாவிலேயே காணாமல் போய்விட்டான் என்பதைக் கண்டுபிடிக்கிறான். எவ்வளவு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. சகோதரன் அமெரிக்காவில் இருப்பது போன்ற தோற்றத்தை மிகுந்த பிரயத்தனப்பட்டு உருவாக்கி தன் தாயாரையும் தன் கிராமத்து மக்களையும் நம்ப வைக்கிறான். ஒரு கட்டத்தில் தன் சகோதரன் இந்தியாவில் உயிரோடு இருப்பது அவனுக்குத் தெரியவருகிறது. தன் சகோதரனை அழைத்துவர அவன் அடுத்து என்ன முயற்சி எடுக்கிறான். கண்டுபிடிக்க முடிந்ததா என்பதே க்ளைமாக்ஸ்''


சூரஜ் சர்மாவோடு அவரின் தம்பியாக டோனி ரெவலொரி, ஸ்மிதா டாம்பே, ஆதில் உசைன், ராஜேஷ் தயாளங் மற்றும் பிரதீக் பாப்பர் போன்ற நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.
போன வருடம் இதே ‘வேர்ல்டு சினிமா டிராமடிக்’ பிரிவின் கீழ்தான் பொம்முக்குட்டி அம்மாவுக்கு படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த கீது மோகன்தாஸ் இயக்கிய ‘லயர்ஸ் டைஸ்’ படம் முதலிடம் பிடித்து விருதுகளைத் தட்டியது. அதன் பிறகு தேசிய விருதினையும் தக்க வைத்து இந்தியாவின் சார்பாக ஆஸ்கருக்கும் பரிந்துரைக்கப்பட்டது. ‘அம்ரிகா’வும் தேசிய விருதினையும், ஆஸ்கர் விருதினையும் தட்டிப்பறிக்கும் என இப்போதே ஆரூடம் சொல்கிறார்கள் மாற்று சினிமா ஆர்வலர்கள்.
பொறுத்திருந்து பார்ப்போம் அம்ரிகா அமெரிக்கர்களைக் கவருமா என்று!

- ஆர். சரண் -

Do you like the story?

Please Appreciate the Author by clapping!