வெளியிடப்பட்ட நேரம்: 16:02 (03/01/2015)

கடைசி தொடர்பு:16:02 (03/01/2015)

இரண்டு வாரத்தில் ரூ.278 கோடி வசூல்: அமீர் கானின் பிகே புதிய சாதனை!

அமீர் கான் நடிப்பில், ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் வெளியாகி உள்ள 'பிகே' படம் இரண்டு வாரத்தில் ரூ. 278 கோடி வசூலித்து பாலிவுட் பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனையை படைத்துள்ளது.

கடந்த டிசம்பர் 19 ஆம் தேதியன்று நாடு முழுவதும் ரிலீஸான 'பிகே' படம், உலகெங்கும் 4000 அரங்குகளில் வெளியானது. வெளியான முதல் நாளில் ரூ 26.63 கோடியை வசூலித்த ’பிகே’, இரண்டாம் நாளில் ரூ 30.34 கோடியை ஈட்டியது. அடுத்த நாளில் ரூ 38.44 கோடியைக் குவித்து சாதனைப் படைத்தது.

முதல் ஞாயிற்றுக்கிழமையில் அதிக வசூல் ஈட்டிய படம் என்ற பெருமையைப் பெற்ற நிலையில், ஒரு வாரத்திலேயே ரூ. 150 கோடி வசூலை அள்ளியது 'பிகே'.

இந்நிலையில் 'பிகே' படத்தில் மத உணர்வுகள் புண்படுத்தப்பட்டிருப்பதாக கூறி டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பல்வேறு இந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டும், ’பிகே’ படம் திரையிடப்பட்ட சில திரையரங்குகள் மீது தாக்குதலும் நடத்தினர்.

இது படத்திற்கு கூடுதல் விளம்பரமாகிவிட, ’பிகே’ படம் ஓடும் திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் மேலும் கும்மியது. இதன் காரணமாக படம் ரிலீஸாகி முதல் இரண்டு வாரத்தில் ரூ. 278.52 கோடியை வசூலித்து பாலிவுட் பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனை படைத்துள்ளது.

மேலும் இதுவரை இருந்து வந்த 'தூம் 3' படத்தின் சாதனையை முறியடித்துள்ளது. 'தூம் 3' முதல் 2 வாரத்தில் வசூல் செய்த ரூ.271.82 கோடிதான் பாலிவுட் பாக்ஸ் ஆபிஸில் இதுவரை சாதனையாக கருதப்பட்டது. அதனைத் தொடர்ந்து சல்மான் கானின் 'கிக்' ரூ. 244 கோடி), ஷாரூக் கானின் சென்னை எக்ஸ்பிரஸ் ரூ.288 கோடி வசூலித்திருந்தது.

ஏற்கனவே இதே அமீர்கான் - ஹிரானி கூட்டணி இணைந்து பணியாற்றிய 3 இடியட்ஸ் படம், முதல் இரண்டு வாரத்தில் ரூ. 202 கோடி வசூலித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ட்விட்டர் பக்கத்தில் PK Highest Grosser Ever என்ற இந்த வார்த்தை டிரெண்டாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்