அவுட் அவுட் நாக் அவுட்!

கடந்த சில நாட்களாக பாலிவுட்டையே கலக்கிக்கொண்டிருக்கும் 'ஏஐபி நாக்அவுட்' நிகழ்ச்சிக்கு நாளுக்கு நாள் எதிர்ப்பு அதிகமாகிக்கொண்டிருக்கிறது!

ஒரு பிரபலம் இன்னொரு பிரபலத்தை 'தரை டிக்கெட்' லெவலுக்கு இறங்கி வறுத்தெடுத்து ரசிப்பதுதான் 'ஏஐபி நாக்அவுட்' நிகழ்ச்சியின் அடிப்படை அம்சம். இப்படி கலாய்க்கும், கலாய்க்கப்படும் சுவாரஸ்யங்களை பதிவுசெய்து யூடியூபில் பதிவேற்றி காசு பார்ப்பதுதான் நிகழ்ச்சியின் நோக்கம். இதில் என்ன சர்ச்சை என்கிறீர்களா?

சில நாட்களுக்கு முன்பு மும்பையில் உள்ள ஒரு அரங்கில் நடைபெற்ற இந்த 'ஏஐபி நாக்அவுட்' நிகழ்ச்சியை பாலிவுட் இயக்குநர், நடிகர் கரண் ஜோஹர், நடிகர் ரன்வீர் சிங், அர்ஜுன் கபூர் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்பாளர்களாகவும், அலியா பட், தீபிகா படுகோனே, அனுராக் காஷ்யப் உள்ளிட்ட பிரபலங்கள் பார்வையாளர்களாகவும் பங்கேற்றனர்.

'காமெடி', 'கலாய்த்தல்' என்ற பெயரில் ஒருவரையொருவர் ஆபாசமாகப் பேசிக்கொள்வதும், கெட்டவார்த்தைகளை சகஜமாகப் பரிமாறிக்கொள்வதுமாக இருந்தனர். தவிர '18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் பார்க்கவும்' என்ற கேப்ஷனுடன் முழு நிகழ்வையும் யூடியூபில் பதிவேற்றியதுதான் இப்போது சர்ச்சைக்குக் காரணம்.

நிகழ்ச்சியைப் பார்த்த சிலர், 'இது ஆபாசத்தின் உச்சமான நிகழ்ச்சி' என கொந்தளித்ததுடன் 'ஏஐபி நாக் அவுட்' நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். மகாராஷ்டிர அரசும் விசாரணைக்கு உத்தரவிடவே, மூன்று பிரிவுகளின் கீழ் கரண்ஜோஹர், ரன்வீர்சிங், அர்ஜூன் கபூர், காமெடி நடிகர் அமித் மாத்யூ, நடிகை தீபிகா படுகோனே உள்ளிட்ட 14 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பரபரப்பில் இருக்கிறது பாலிவுட்!

- கே.ஜி.மணிகண்டன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!