அமிதாப்பச்சனுக்கு அமெரிக்க நீதிமன்றம் சம்மன்!

சீக்கியர்களுக்கு எதிராக கலவரத்தை தூண்டியதாக தொடரப்பட்ட வழக்கில், அமெரிக்க நீதிமன்றம் அமிதாப்பச்சனுக்கு சம்மன் வழங்கி உள்ளது.

1984 ஆம் ஆண்டு, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டவுடன், சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். இந்நிலையில், ‘ரத்தத்துக்கு ரத்தம்’ என்று கோஷம் எழுப்பி, இக்கலவரத்தை தூண்டி விட்டதாக, நடிகர் அமிதாப்பச்சனுக்கு எதிராக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் சீக்கிய உரிமை அமைப்பு வழக்கு தொடர்ந்தது.இந்த வழக்கில் லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றம், அமிதாப்பச்சனுக்கு சம்மன் அனுப்பி உள்ளது. அந்த சம்மன், அமிதாப்பச்சனின் ஆலிவுட் மேலாளர் டேவிட் ஏ.உங்கரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. அமெரிக்க சட்ட விதிகளின்படி, சம்மன் ஒப்படைக்கப்பட்ட 21 நாட்களுக்குள் சம்பந்தப்பட்டவர் பதில் அளிக்க வேண்டும்.

அதன்படி, வருகின்ற மார்ச் 17 ஆம் தேதிக்குள் அமிதாப்பச்சன் பதில் அளிக்க வேண்டும். அப்படி அவர் பதில் அளிக்க தவறும்பட்சத்தில், அவருக்கு எதிராக தண்டனை நடவடிக்கை மற்றும் இழப்பீடு உத்தரவு பிறப்பிக்கக் கோரி லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தை அணுகப் போவதாக சீக்கிய உரிமை அமைப்பின் சட்ட ஆலோசகர் தெரிவித்து உள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!