வெளியிடப்பட்ட நேரம்: 14:43 (05/03/2015)

கடைசி தொடர்பு:16:34 (25/03/2015)

ஓடும் பேருந்தில் பலாத்காரம் செய்யப்பட்ட நிர்பயா குறித்த டாக்குமெண்டரி - தடையை மீறி ஒளிபரப்பு!

இந்திய அரசு தடையை மீறி நிர்பயா குறித்த ஆவணப்படத்தை பி.பி.சி. ஒளிபரப்பி உள்ளது.

டெல்லியை சேர்ந்த பிஸியோதெரபி மாணவி நிர்பயா, கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி இரவு, டெல்லியில் ஓடும் பேருந்தில் வைத்து கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். தனது நண்பருடன் திரைப்படம் பார்த்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த நிர்பயாவை, குடிகார கும்பல் ஒன்று பாலியல் பலாத்காரம் செய்ததுடன், கொடூரமாக தாக்கி சாலையோரம் வீசி சென்றது.

இந்த பாலியல் பலாத்கார வழக்கில் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளுள் ஒருவரான முகேஷ் சிங் என்பவனிடம் லெஸ்லி உட்வின் என்ற திரைப்பட தயாரிப்பாளர் பேட்டி எடுத்தார். ஆவணப்படமாக இப்பேட்டியை  லெஸ்லி தயாரிக்க, உலக பெண்கள் தினமான வருகின்ற 8 ஆம் தேதியன்று இந்த ஆவணப்படத்தை ஒளிபரப்ப பி.பி.சி. தொலைக்காட்சி திட்டமிட்டிருந்தது.

இந்த ஆவணப்படம் எடுக்க அனுமதி வழங்கியது குறித்தும், குற்றவாளியின் பேட்டி குறித்து விவாதிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதற்கு பதிலளித்தஉள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ''நிர்பயா கொலை குறித்த ஆவணப்படம் ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும், குற்றவாளியிடம் பேட்டி காண அனுமதி வழங்கிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

இந்தியா தடை விதித்துள்ள நிலையில், நேற்றிரவே நிர்பயா குறித்த 'இந்தியாவின் மகள்' என்ற ஆவணப்படத்தை பி.பி.சி. ஒளிபரப்பியது. பிரிட்டன் மற்றும் இதர நாடுகளில் இந்த ஆவணப்படம் ஒளிபரப்பாகியுள்ளது. ஆவணப்படத்தை பார்ப்பதற்கான விருப்பம் அதிகரித்ததால், முன் கூட்டியே ஒளிபரப்பியதாக பி.பி.சி. தெரிவித்து உள்ளது. இந்த ஆவணப்படம், பாதிக்கப்பட்ட நிர்பயா குடும்பத்தினரின் முழு ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்டதாகவும், அவர்களின் ஒப்புதலுடன்தான் தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்டது என்றும் பி.பி.சி. கூறி உள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்