சல்மான் கானுக்கு தண்டனை நிறுத்தி வைப்பு: ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்!

மது அருந்திவிட்டு காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய வழக்கில், பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு கீழ் நீதிமன்றம் வழங்கிய 5 ஆண்டு சிறைத் தண்டனையை மும்பை உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்ததோடு, ஜாமீன் வழங்கியும் உத்தரவிட்டுள்ளது.

2002ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி மும்பையின் பாந்த்ரா பகுதியில் சல்மான் கான் சென்ற கார் சாலையோரம் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஏறியது. இதில் நுருல்லா மெஹ்பூப் செரிஃப் என்பவர் உயிரிழந்தார். 4 பேர் காயமடைந்தனர். அன்றைய தினமே கைது செய்யப்பட்ட சல்மான் கான், மருத்துவ பரிசோதனைக்கு பிறகு விடுவிக்கப்பட்டார். பின்னர் 2002 அக்டோபரில் கைது செய்யப்பட்ட அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்த வழக்கு மீதான விசாரணை 2006ஆம் ஆண்டு பாந்த்ரா மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் தொடங்கியது. 2012ஆம் ஆண்டு வழக்கு மும்பை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு புதிதாக விசாரணை தொடங்கியது. 2013ஆம் ஆண்டு சல்மான் மீது மேலும் சில பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது. சல்மான் கான் மது அருந்தி கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக அரசு தரப்பில் வாதிடப்பட்டு சாட்சியங்களும் பெறப்பட்டன.

இந்நிலையில் சம்பவத்தின் போது தான் கார் ஓட்டவில்லை எனவும், தனது டிரைவர் அசோக் சிங் தான் கார் ஓட்டினார் எனவும் சல்மான் வாக்குமூலம் அளித்தார். அசோக் சிங்கும் நீதிமன்றத்தில் ஆஜராகி அதனை ஒப்புக்கொண்டார். இந்நிலையில், இந்த வழக்கில் சல்மான் கானுக்கு மும்பை அமர்வு நீதிமன்றம் கடந்த 6ஆம் தேதி 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டது.

இந்த தண்டனையை எதிர்த்தும், ஜாமீன் கோரியும் சல்மான் கான் அன்றைய தினமே மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, இரண்டு நாள் இடைக்கால ஜாமீன் வழங்கினார். இந்நிலையில், இந்த மனு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கீழ் நீதிமன்றம் வழங்கிய 5 ஆண்டு சிறைத் தண்டனைக்கு இடைக்கால தடை விதித்ததோடு, ஜாமீன் வழங்கியும் நீதிபதி உத்தரவிட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!