இரண்டாவது வாய்ப்புதான் ஜெயிக்கிறதுக்கான வாய்ப்பா? எபிசிடி 2 படம் பற்றி ஓர் அலசல்.

2013ல் வெளிவந்து ஹிட்டடித்த எனி படி கேன் டான்ஸ் படத்தின் இரண்டாம் பாகம் இந்த முறை 3டியில் வெளியாகியிருக்கிறது. முதல் பாகத்தைப் போலவே நடனத்தை மையமாகக் கொண்ட கதை தான். சென்டிமெண்ட் சங்கதிகள் மட்டும் கொஞ்சம் சேர்த்து படத்தை இயக்கியிருக்கிறார் ரெமோ டிசோசா.

மும்பை ஸ்டன்னர்ஸ் குழுவைச் சேர்ந்தவர்கள் வருண்தவான், ஷ்ரதாகபூர் மற்றும் சிலர். ஒரு சேனல் நடத்தும் ஹிப்-ஹாப் நடன போட்டியில் கலந்து கொள்கிறார்கள். ஆனால், நடனத்தை காப்பிஅடித்ததாக சொல்லி வெளியேற்றப்படுகிறார்கள். அப்போது பிரபுதேவாவின் அறிமுகம் கிடைக்க அவர் மூலம் நடனம் கற்றுக்கொண்டு லாஸ்வேகாசில் நடக்கும் நடனப் போட்டியில் கலந்து கொண்டு ஜெயித்துவிடலாம் என நினைக்கின்றனர். அதன் பிறகு என்ன? ஓரே ஆட்டம் தான்.

முதல் பாகத்தை விட படம் கலர்புல்லாக இருக்கிறது. சின்னச் சின்ன சென்டிமெண்டுகள் இருக்கிறது, ஆனால் எல்லாம் எதுவும் மனதில் நிற்காமல் செல்கிறது. கதைக்கு நடுவில் நடனம் வரும், இதில் நடனத்திற்கு நடுவில் கொஞ்சம் கொஞ்சம் கதைவருகிறது. அவற்றில் பிரபுதேவாவின் பின்னணிக் கதை மட்டும் லேசாக ஈர்க்கிறது.

இயல்பில் கோரியோகிராஃபரான ரெமோ டிசோசா 3டிக்கு ஏற்றபடி பிரம்மாண்டமான நடனங்களை அமைத்திருக்கிறார். ஹாலிவுட்டில் இதே போன்ற கதையம்சமுள்ள 'ஸ்டெப் அப்' வகையரா படங்களில் கையாண்டிருக்கும் அதே ஃபார்முலா படத்தில் நன்றாகவே தெரிகிறது. ஆனால் அந்தத் துள்ளல் படத்திலும் கொஞ்சம் இருந்திருக்கலாம்.

வருண்தவான், ஷ்ரதாகபூர் என அனைத்துக் கதாபாத்திரங்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலைகளைக் கச்சிதமாக செய்திருக்கிறார்கள். இடையில் பிரபுதேவாவின் கெஸ்ட் டான்ஸும் பிரமாதம்.

சச்சின்-ஜிகார் இசையும் பின்னணி இசையும் படத்தின் சூழல்புரிந்து இசைக்கிறது, விஜய் அரோரா ஒளிப்பதிவு படம் முழுக்க வண்ணங்களை நிறைத்து கேண்வாஸில் பூசி கலர்புல் அனுபவத்தை 3டியில் வழங்குகிறது.

'வாழ்க்கைங்கறது எப்போதுமே இரண்டாவது வாய்ப்பு கொடுக்கும், அது ஜெயிக்கறதுக்கான கடைசிவாய்ப்பு!' படத்தில் வரும் வசனம் இது. படத்தின் இரண்டாம் பாகம் அந்த அளவு வெற்றி பெற்றிருக்கிறதா என யோசித்தால்...பாதிக் கிணறுதான் பதிலாக கிடைக்கிறது.

பா.ஜான்ஸன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!