Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இயற்கையை இசையாக்கும் பாலிவுட் இசையின் காதலி சிநேகா கன்வாக்கர்!

தினமும் டிராஃபிக்கில் வரும்போது, அவனவன் காது கிழிய ஹாரன் அடிக்கிறப்ப, வர கோபத்துக்கு பின்னால வரவன் ஹாரனைப் பிடிங்கி, அவன் மண்டையிலயே மட்டு மட்டுனு அடிக்கத்தோனும் இல்லையா? அப்படிப்பட்ட இரைச்சலை, இசையாக்கி இன்று சாதனையின் உச்சத்தில் இருக்கிறார் ஹிந்தி சினிமாவின் டாப் மோஸ்ட் இளமையான பெண் இசைப்புயல் சிநேகா கன்வாக்கர். பாலிவுட்டில் மிகக்குறைந்த வயதில் மிகப்பெரிய அளவில் புகழ் பெற்றிருப்பவர்.

தமிழில் அனிரூத் மிகக்குறுகிய காலத்தில் மிகப்பெரிய உயரத்தைப் பெற்றிருக்கிறாரே, அதேபோலத்தான் அவரும் பாலிவுட்டில்! தானுண்டு, தன் இன்ஸ்ட்ரூமெண்ட் உண்டு என தனியே ஸ்டூடியோவில் உட்கார்ந்து விடிய விடிய கம்போஸ் செய்துபாடும் ஆள் அல்ல அவர். பிறகு என்னதான் செய்கிறார் என்று கேட்கிறீர்களா..? மேலும், படியுங்கள்... 2004ல் எல்லோரையும்போல இசையை நேசித்து, ரசித்து, தன்போக்கில் இசை அமைத்துக்கொண்டிருந்தவர்தான் சிநேகா. மத்திய பிரதேசத்தின் சில மலைவாழ் ஊர்களுக்கு சென்று வந்தவருக்கு கிடைத்த அனுபவம்தான் அவரை இந்த துறையில் சாதிக்க வைத்திருக்கிறது. அங்கு மக்கள் வாழும் வாழ்க்கை முறையில் கொஞ்ச நாள் ஒன்றிப்போயிருக்க... மீண்டும் சிட்டிக்கு வந்தவருக்கு அங்கு அவர் கேட்ட பொருட்களின் இசை அவரை தூங்க விடாமல் செய்திருக்கிறது. இந்த இசைத்தான் உன்னதமான இசை என்று அதில் ஐக்கியமாகி, ஒவ்வொரு சிற்றூர்களுக்கும் சென்று 'சப்தங்களை' திரட்டி இசைக்கான 'ஆசை'யை சேகரித்துக்கொண்டே இருந்தார்.

ரெக்கார்டரும் கையுமாக மும்பை, பஞ்சாப் போன்ற பல பகுதிகளுக்குச் சென்று, அங்கு இருக்கும் உள்ளூர் ரயில் வண்டியின் சத்தம், ரிக்க்ஷாக்காரரின் பெல் சத்தம், ஆட்டோக்காரரின் 'ஹாரன்' சத்தம், மலைவாழ்ப் பெண்களின் மெட்டுக்கள், வெற்றிலை-பாக்கு இடிக்கும் சத்தம், அடித்தட்டு மக்கள் பாடும் பாடல், திருநங்கைளின் பாடல்கள் என அனைத்து வகையான சத்தங்களையும் ரெக்கார்ட் செய்து கொண்டு, தன்னுடைய ஸ்டூடியோவில் எல்லாவற்றையும் போட்டு, கேட்டு அவருடைய பாடலுக்குத் தகுந்தமாதிரியான இசையினை இழைத்து இழைத்து உருவாக்குகிறார். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது... சிநேகா சிறந்த பாடகராக இருந்தபோதும்... தான் சந்தித்த இடத்தில் பாடும் பாடகரிடம் ரெக்கார்ட் செய்த கையோடு, அவரையும் ஸ்டூடியோவுக்கு அழைத்து வந்து கலவையாக்கப்பட்ட இசையை இவரின் பாடலோடு கலந்து நாம் எதிர்பாக்கவே முடியாத அளவுக்கு அவ்வளவு அருமையான வாழ்வியல் இசையை நமக்கு பாடலாக்கி விருந்து வைக்கிறார்.

கண்ணுக்கும் சரி, காதுக்கும் சரி அவர் பாடல் உருவாக்கியப் பின்னணியோடு ஒவ்வொரு காட்சியும் நகரும் விதம் ஃபென்டாஸ்டிக் என நம்மால் சொல்லாமல் இருக்க முடியவில்லை. கீழ்த்தட்டு மக்களின் சோகங்களை மறக்கடிக்கும் மரபு சார்ந்த இசைகளை பாடலாக்கி வழங்கும் இடத்தில், ஒவ்வொரு பொருளுக்குமான உரிமையாளர்களின் பெயரையும், எவ்வளவு வருடமாக இவற்றை பயன்படுத்தி வருகிறார் அல்லது இதில் வேலை செய்கிறார், அதை எப்படி ரசிக்கிறார் என்பதையும் வீடியோவாக பதிவு செய்து வெளியிடுகிறார். இவற்றை சினிமா பாடலாக்கி ஹிட் அடிக்கச் செய்வது இவரின் பாணி. ஹிந்தி சேனலான எம்.டி.வி.யிலும் - Sound trippin (திறத்தல்) என்கிற ஷோக்களிலும் இதுபோன்ற பழங்குடியினரின் இசையையும் அனைவருக்கும் தெரியும்படி செய்து கொண்டிருக்கிறார்.

பாலிவுட்டைப் பொறுத்தவரை 'Gangs of Wasseypur' படத்தின் 'ஓ வுமனியா.. (O Womaniya...)' பாடல் ஹிந்தியில் டாப் லிஸ்டில் இருக்கக்கூடிய பாடல்... இந்த படத்திற்கு இசை அமைத்தமைக்காக 58வது ஃபிலிம்ஃபேர்-ல் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதையும் பெற்றிருக்கிறார். இப்படத்தில் ஹீரோயின் ரீமாசென்னும் நடித்திருக்கிறார் என்பது கூடுதல் செய்தி. தற்பொழுது 32 வயதாகும் சிநேகா இசையைப்பற்றி சொல்லும் தாரகமந்திரம், 'நம்மில் பலரும் ஒவ்வொரு சப்தத்தையும் இரைச்சலாகத்தான் பார்க்கிறோம்; ஆனால், நான் அதை ஒரு இசையாகப் பார்க்கிறேன்' என்பதுதான்.

சிநேகா கன்வாக்கரின் making of music - https://www.youtube.com/watch?v=mGzpfi7A8cI

சிநேகா கன்வாக்கரின் பாடலைக் கேட்க - https://www.youtube.com/watch?v=vpZkgXYBxI0

 

- வே. கிருஷ்ணவேணி மாரியப்பன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்