மலை மனிதன் – தசரத் மாஞ்சி!

வாசுதீன் சித்துக்கி -  ராதிகா ஆப்தே நடித்து தற்போது வெளியாகியிருக்கும் 'மாஞ்சி' படம்,  அருமை.. ஆஹா.. ஓஹோ.. என சினிமா வட்டாரம் புகழ்ந்து தள்ளுகிறது. சத்ருகன் சின்ஹா, சல்மான்கான் போன்ற திரையுலக பிரபலங்கள் நவாசுதீனின் நடிப்பை பற்றி சிலாகித்து வரும் சமயத்தில், நிஜமாக யார் இந்த மாஞ்சி? என தெரியாமல் இருந்தால் மண்டை வெடிச்சுடாதா?

'மாஞ்சி' படம் தசரத் மாஞ்சி எனப்படும் பீஹார் மாநிலத்தை சார்ந்த ஒரு ஏழை விவசாயியின் வாழ்க்கைக் கதை. இவரது கிராமமான கெஹலூரிலிருந்து வெளியே செல்வது' மலை ஏறுவதற்கு சமம். இது அவர்களுக்கு பெரிய இடையூறாக இருந்தது. ஒரு முறை அவரது மனைவி விவசாயம் செய்யும் தன் கணவருக்கு உணவு கொண்டு வரும்போது கால் இடறி கீழே விழுந்து விடுகிறார். சில நாட்களில் அவர் இறந்தும் போகிறார். இது மாஞ்சியின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை கொண்டு வருகிறது.

கையில் ஒரு சுத்தியலையும் உளியையும் எடுத்துக்கொண்டு மலையை உடைக்க புறப்பட்டார். பார்க்கிற அனைவருக்கும் பைத்தியக்காரத்தனம்போல தெரியலாம். ஆனால் கிராமத்தினரின் பேச்சுக்கெல்லாம் செவி கொடுக்கவில்லை மாஞ்சி. மருத்துவமனை, கடை வீதி என எங்கு செல்ல வேண்டுமானாலும் இந்த மலையை தாண்டி தான் செல்ல இயலும். இந்த மலையை ஏறி உயிரிழந்தோரின் எண்ணிக்கை மிக அதிகம். அரசாங்கமும் நடவடிக்கை எடுக்காமல் இருக்கவே, தனி மனிதனாக தனது கிராமத்திற்கு ஒரு பாதை அமைக்க புறப்பட்டார்.

ஒன்றல்ல இரண்டல்ல... 22 வருடங்களாக அயராது உழைத்து, இறுதியில் தான் நினைத்ததை சாதித்துக் காட்டினார். இந்த சாதனை மனிதன் கடந்த 2007 ஆம் ஆண்டு, பித்தப்பை புற்றுநோய் காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இப்படி ஒரு கதாபாத்திரத்தை தத்ரூபமாக திரையில் கொண்டு வருகிறார் நவாசுதீன். ஃபல்குனியாவாக நடிக்கும் ராதிகா ஆப்தே தான் கதையின் போக்கில் திருப்பத்தை கொண்டு வருகிறார். படத்தின் இறுதியில் வரும் வாக்கியம், பலமான கருத்தை வெளிப்படுத்துகிறது

அவர் மலையை உடைக்கத் தொடங்கிய 52 ஆண்டுகளுக்கு பின், அதாவது அவரது இறப்புக்கு 4 ஆண்டுகளுக்கு பிறகு இறுதியாக அரசாங்கம், கடந்த 2011 - ல் கெஹலூருக்கு சாலையை உண்டாக்கியது.

- ஐ.மா.கிருத்திகா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!