50 வயது தொடக்கத்தில் இந்தி இசையமைப்பாளர் ஆதேஷ் ஸ்ரீவத்சவா காலமானார்!

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இந்தி திரைப்பட இசையமைப்பாளர் ஆதேஷ் ஸ்ரீவத்சவா காலமானார்.

இந்தித் திரையுலகில், 90களில் பாடகராக அறிமுகமான ஆதேஷ் ஸ்ரீவத்சவா, தன்னுடைய ஒப்பற்ற இசையறிவால் படிப்படியாக முன்னேறி, நூற்றுக்கும் மேற்பட்ட இந்தித் திரைப்படங்களில் பின்னணி இசை மற்றும் பாடல்களுக்கு இசையமைத்தவர்.

ஷகிரா, ஏகான் உட்பட பல்வேறு உலகளாவிய நட்சத்திரங்களுடனும் பணிபுரிந்தவர் 49 வயதான ஆதேஷ் ஸ்ரீவத்சவா. இவர், குழந்தைகள் பற்றிய குறும்படமும் இயக்கியுள்ளார். இவரது இசையமைப்பில் சல்தே சல்தே, பாக்பன் மற்றும் கபி குஷி கபி கம் போன்ற படங்கள் சூப்பர் ஹிட்டாக அமைந்தன. இவரது இசையமைப்பில் வெளியான ‘வெல்கம் பேக்’ படம் ஆதேஷின் பிறந்தநாளான நேற்று வெளிவந்து, விமர்சகர்களாலும், ரசிகர்களாலும் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது.

இதனிடையே கடந்த 2010 ஆம் ஆண்டு இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவருக்கு உடனடியாக ‘கீமோ தெரபி’ சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனளித்து அவர் வெகு விரைவாகவே குணமடைந்தார்.

இந்நிலையில், கடந்த 45 நாட்களுக்கு முன் மீண்டும்  புற்றுநோயின் தீவிரத்தால் பாதிப்படைந்து அவர்,  மும்பையின் அந்தேரி பகுதியில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும், சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று நள்ளிரவு சுமார் 12.30 மணியளவில் ஆதேஷ் ஸ்ரீவத்சவா உயிர் பிரிந்தது.

ஆதேஷ் ஸ்ரீவத்சவா மரணம், அவரது குடும்பத்தினர், திரையுலகினர் மற்றும் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!