சர்வதேச இசை விருது பரிந்துரைப் பட்டியலில் பிரியங்கா சோப்ரா!

பாலிவுட்டின் டாப் நடிகை பிரியங்கா சோப்ரா, ஐரோப்பா மியூசிக் விருதுகள் 2015 காக  பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். 2000ல் உலக அழகி பட்டத்தை வென்ற இவர், நடிகர் விஜய்யுடன் இணைந்து "தமிழன்" படம் மூலம் திரைத்துறையில் தனது பயணத்தை தொடங்கினார்.எனினும் தமிழில் இவருக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு படங்கள் இல்லை. 

அதன் பிறகு பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர், பின் இந்தியாவையும் தாண்டி தனது திறமைகளை நடிப்பு, இசை, மாடலிங் என அனைத்திலும் காண்பித்தார். இந்நிலையில் அமெரிக்க ஆங்கில இசை சேனலான VH1 பிரியங்கா சோப்ராவின் பெயரை ஐரோப்பியாவின் இசை விருதுகள்  2015 கான  பரிந்துரை பட்டியலில் இணைத்துள்ளது. 2012 இல் வெளிவந்த " இன் மை சிட்டி" ஆல்பம் மூலம் பிரியங்கா, உலகளாவிய பாப் இசை உலகில் காலடி பதித்துத் தனது பயணத்தை தொடங்கினார்.

பின் பிரபல அமெரிக்க ராப் பாடகர் பிட்புல்லுடன் இணைந்து தனது இரண்டாவது ஆல்பம் "எக்ஸாடிக் என்ற பெயரில் 2013 இல் வெளியிட்டார். மேலும் ஜான் லென்னன்னுடன் இணைந்து 'இமாஜின்' என்ற ஆல்பத்திலும் தனது குரலை பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரியங்காவுடன், இந்திய வம்சா வழியை சேர்ந்த மோனிகா டோக்ராவும் இவ்விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

பிரியங்கா தற்போது அமெரிக்க தொலைக்காட்சியான ABC தயாரித்து வரும் "குவண்டிகோ" தொலைக்காட்சி தொடரில் நடித்து வருவது, மற்றுமொரு சிறப்பு. செப்டெம்பர் 27 ம் தேதி ஒளிபரப்பாக உள்ள இத்தொடர், இந்தியாவில் ஸ்டார் வேர்ல்டில் அக்டோபர் 3 முதல் ஒளிபரப்பப்பட உள்ளது.

- பிரியாவாசு-

Do you like the story?

Please Appreciate the Author by clapping!