வங்காளம் கொண்டாடும் அழகான காதல் படம்- தீன்கஹூன் திரைஅலசல் | Teenkahon review

வெளியிடப்பட்ட நேரம்: 14:58 (24/10/2015)

கடைசி தொடர்பு:17:42 (24/10/2015)

வங்காளம் கொண்டாடும் அழகான காதல் படம்- தீன்கஹூன் திரைஅலசல்

காதல் தான்... அதே காதல் தான்... ஆனா, கொஞ்சம் அழுக்கு கலந்த காதல். இது பெங்காலியில் வெளியாகி விமர்சகர்கள் கொண்டாடித் தீர்க்கும் 'தீன்கஹூன்' படத்தின் ஒரு வரி கதை.

இந்தப் படத்தைப் பற்றி தேடினால் ட்ரிப்திக் (triptych) என்ற வார்த்தையைக் காண நேரிடும். இதற்கு மூன்று விதமான எனப் பொருள் கொள்ளலாம். படமும் மூன்று கதைகளை உள்ளடக்கியது தான். கதை தொடங்குவது 1954 முடிவது 2013ல்.  படத்தில் மூன்று காதல் கதைகள்.

கதை 1. கல்கத்தா 1954;  ஷைலன் - நயன்தாரா:

நயன்தாரா (நம்ம நயன்தாரா இல்ல பாஸ்) மேல் ஆறு வயது சிறுவன் ஷைலனுக்கு காதல். நயன்தாராவுக்குத் திருமணம் ஆகிவிட்டது, அவள் கணவர் வெளியூரில் வேலை செய்து கொண்டிருக்கிறார். சிறுவன் ஷைலனுக்கு நயன்தாரா திருமணமாகி ஊருக்கு வந்தபோது பார்த்ததிலிருந்து ஒரு க்ரஷ். பள்ளி செல்வது பிடிக்காத ஷைலனுக்கு முழு நேர வேலையே வெளியூரிலிருக்கும் கணவன்மார்களுக்கு, மனைவிமார்கள் அனுப்பும் கடிதங்களை அஞ்சல்பெட்டியில் போடுவது தான். அதற்கு இனாமாக அவர்கள் தரும் பழங்கள் இனிப்பு பதார்த்தங்கள் அவனின் அன்றைய நாளை அத்தனை இனிமையாக மாற்றிவிடும். அவன், ஒரு பெண் கொடுக்கும் கடிதத்தை மட்டும் கிழித்துத் தூர எறிந்து விடுவான். அது நயன்தாராவினுடையது, அவளது கணவன் அனுப்பும் கடிதத்துக்கும் அதே கதிதான். ஒரு கடிதத்துக்குக் கூட பதில் வரவில்லை என கணவனே புறப்பட்டு ஊருக்கு வந்து விடுகிறார். அதன் பின் ஷைலன் செய்யும் குறும்புகள் (இந்த) படத்தின் மீதிக் கதை. சின்னவயது ஷைலனாக நடித்திருக்கும் பர்ஷன் நடிப்பு கொள்ளை அழகு. இது மொத்தமும் வளர்ந்து விட்ட ஷைலன் தன் பால்ய கால காதல் பற்றி நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதாக விரிவது இன்னும் சுவாரஸ்யம்.

கதை 2.  கல்கத்தா 1978;  சுகோமல் பாசு - மோஹா - கெனேஷ் மித்ரா:

ஒரு மழை நாளில் ஊரே வெள்ளத்தில் சிக்கிக் கொண்டிருக்கையில் சுகோமல் பாசுவின் வீட்டுக் கதவு தட்டப்படுகிறது. வந்திருப்பது அவருக்கு சற்றும் அறிமுகமில்லாத ஒருவர். உங்களுடன் சில விஷயங்களை பேச வேண்டும் என அவர் கூற வீட்டுக்குள் வர அனுமதிக்கிறார் சுகோமல். தன் பெயர் கெனேஷ் மித்ரா, தன் மனைவியின் பெயர் மோஹா என சொல்லும் போது சுகோமலுக்கு வந்திருப்பது யார் எனப் புரிகிறது. மோஹா சுகோமலின் முந்நாள் காதலி கெனேஷின் இந்நாள் மனைவி. 'என்னை மிரட்ட வந்திருக்கிறீர்களா?' என சுகோமல் கேட்க, இல்லை மோஹா தற்கொலை செய்துகொண்டு இறந்துவிட்டாள், நீங்கள் இருவரும் இன்னுமும் தொடர்பில் இருப்பது எனக்குத் தெரியும். அதனால் தான், அவள் இறந்ததன் காரணத்தை அறிய தான் உங்களைக் காண வந்தேன் எனக் கூறியதும், சுகோமலுக்கு நடுக்கம். தொடரும் விவாதங்களும், சண்டைகளுமாக முன்னேறும் காட்சிகள் மோஹாவின் மரணத்திற்கான காரணம் என்ன என்பதைத் தெரிந்து க்ளைமாக்ஸில் ஒரு ட்விஸ்டுடன் நிறைவடைகிறது.

கதை 3. கொல்கத்தா 2013; குஹா - அனாமிகா

குஹா - அனாமிகா தம்பதிகளுக்கு இடையில் அடிக்கடி சண்டை, வாக்குவாதங்கள், வெறுப்புகள் என செல்கிறது. காரணம் அனாமிகாவின் தாயாக முடியவில்லை என்கிற ஏக்கம். அதை வெறுப்பாய் கணவனிடம் கொட்ட, திணறுகிறார் ஏ.சி.பி குஹா. ஒரு திருட்டு வழக்கை விசாரிப்பதற்காக பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்குச் சென்று விசாரித்து வருகிறார் அன்று இரவு குஹாவின் மொபைலுக்கு வரும் அந்த 'தேங்க்ஸ்' மெசேஜில் ஆரம்பிக்கும் அவர்களின் நட்பு சேட்டிங்கில் காதலாக மாறுகிறது. இடையில் செயற்கைகருவூட்டல் மூலம் மனைவி கர்ப்பமாகிறார். மனைவிக்கு துரோகம் செய்யும் குற்ற உணர்வில் 'அந்த' உறவை துண்டிக்கிறார் குஹா. குழந்தையும் பிறக்கிறது, மகிழ்ச்சியான வாழ்வில் மறுபடி வருகிறது உறவை துண்டித்த காதலியின் ஞாபகங்கள். மறுபடி அவளுக்கு போன் செய்து 'நீ இல்லாமல் வாழ முடியாது' எனக் கூற, 'உனக்கு நான் வேண்டுமா? இல்லை உன் மனைவி வேண்டுமா? என முடிவு செய்து கொள்' என சொல்லி போனை வைக்கிறார் அந்தப் பெண். பின் என்ன நடக்கிறது என்பது செம ட்விஸ்ட் க்ளைமாக்ஸ். அதிலும் குஹாவாக நடித்திருக்கும் ஆஷிஷ் வித்யார்த்தியின் நடிப்பு அவ்வளவு அழகு. காதலியா? மனைவியா எனக் குழம்பித் தவிக்கும் போதும், மகனுக்கு போலீஸ் உடை மாட்டி அழகு பார்த்து பூரிக்கையிலும் ஆஷிஷ் அசத்தல்.

மொத்தமாக நான் மேல் சொன்ன கதை வெறுமனே கதை மட்டும் தான். கதையாய் மட்டும் நின்று போகாமல் படம் நடக்கும் காலகட்டங்களுக்கு ஏற்ப இருக்கும் பின்னணிகளும், பேச்சு வழக்குகளும் என கல்கத்தாவின் நூறு ஆண்டுகால மாற்றத்தைப் பதிவு செய்திருப்பது இயக்குநர் புத்தயான் முகர்ஜியின் அசாத்தியம். மூன்றும் சம்மந்தம் இல்லாத அழுக்கு காதல் கதைகளாக இருந்தாலும், மூன்றும் ஒவ்வொரு கதையின் தொடர்ச்சியாக, அதாவது முதல் கதையில் பெண்ணைச் சந்திக்கும் ஆண், பெண்ணை இழக்கும் ஆண், பெண்ணுடன் மறுபடி இணையும் ஆண் என கதையில் ஸ்கெட்ச் போட்டு ஸ்க்ரீன் ப்ளே எழுதியிருக்கும் விதம் வாவ்.

இது கண்டிப்பாக கல்கத்தாவின் பின்னணியைப் பதிவு செய்த விதத்தில் முக்கியமான சினிமா என கொண்டாடுகிறார்கள் பெங்காலி விமர்சகர்கள். படத்தைப் பார்த்த 'ராக்ஸ்டார்', 'ஹைவே' படங்களின் இயக்குநர் இம்தியாஸ் அலி அசந்து போய் தானே படத்தை வெளியிட்டிருக்கிறார். பல திரைவிழாக்களில் கொண்டாடப்பட்டது ஓய்ந்து இப்போது பெங்காலி ரசிகர்களும் மாற்று சினிமாவை ரசிக்க, குஷியில் இருக்கிறது படக்குழு. விரைவில் எல்லா நகரங்களிலும் படத்தைக் கொண்டு செல்லும் வேலையில் தீவிரமாக இருக்கிறார் படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநரின் மனைவியுமான மோனலிஷா முகர்ஜி. எனவே விரைவில் நம்மையும் நெருங்கும் படம்.

பா.ஜான்ஸன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close