விருதை திருப்பித் தரமாட்டேன் என்று வித்யாபாலன் கூறுவதற்கான காரணம்? | Why Vidya Balan Won't be Returning Her National Award

வெளியிடப்பட்ட நேரம்: 12:26 (30/10/2015)

கடைசி தொடர்பு:15:38 (30/10/2015)

விருதை திருப்பித் தரமாட்டேன் என்று வித்யாபாலன் கூறுவதற்கான காரணம்?

புனேயில் உள்ள  இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவாகவும், வளர்ந்துவரும் சகிப்புத்தன்மையின்மைக்கு எதிராகவும் திரையுலகம் சார்ந்த பல்வேறு பிரபலங்கள் தாங்கள் வாங்கிய தேசிய விருதுகளை அரசிடம் திருப்பியளித்து வருகின்றனர்.

சுயாட்சி அதிகாரம் கொண்ட புனே திரைப்படக் கல்லூரியின் தலைவராக நடிகர் கஜேந்திர சவுகான்கடந்த ஜூன் மாதம் நியமிக்கப்பட்டார்.இதற்கு முன்னர் இந்தத் திரைப்படக் கல்லூரியின் தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்டவர்கள் திரைத்துறை சார்ந்த நிகழ்ச்சித் தயாரிப்பில் சிறந்து விளங்கியவர்கள். ஆனால் கஜேந்திர சவுகான்,பி.ஆர். சோப்டா தயாரித்த ‘மகாபாரதம்’ நெடுந்தொடரில் தருமபுத்திரனாக நடித்தவர் என்றாலும் திரைப்படத் துறையின் எல்லாத் துறைகளிலும் அனுபவம் பெற்றவர் எனச் சொல்ல முடியாது.சுயாட்சி அதிகாரம் உள்ள பதவிகளுக்குத் தலைவர்களை நியமிக்கும்போது, அத்துறையின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் அவர்கள் எந்த அளவுக்கு உதவுவார்கள் என்று பரிசீலித்து, பொருத்தமானவர்களை நியமிப்பதுதான் முறை. ஆனால் கஜேந்திர சவுகானை பாஜகவின் கட்சி உறுப்பினர் என்ற ஒரு தகுதியை மட்டுமே வைத்து புனே திரைப்படக் கல்லூரியின் தலைவராக நியமனம் செய்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதனால், கடந்த ஜூன் மாதம் முதல் 139 நாட்களாக புனே திரைப்படக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் .

அவர்களுக்கு ஆதரவாக திபாகர் பநேஜி,லிபிகா சிங் தரை,ஆனந்த் பட்வர்தன் உள்ளிட்ட 10 திரைப்பட இயக்குனர்கள் தாங்கள் பெற்ற தேசிய விருதுகளைத் திருப்பி அளித்துள்ளனர்.

இதற்கு இந்தி திரையுலக ஜாம்பவான்களான அனுபம்கேர் மற்றும் அசோக் பண்டிட் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், பாலிவுட்டின் பிரபல நடிகை வித்யா பாலனும் அந்த வரிசையில் இணைந்துள்ளார்.

மும்பை படவிழாவில் கலந்துகொண்ட வித்யபாலனிடன் இதுபற்றிக் கேட்டபோது, “ தேசிய விருது என்பது என்னுடைய திறமைக்காக என் நாடு கொடுத்த அங்கீகாரமே தவிர அரசாங்கம் தந்ததல்ல. அதனால் என்னுடைய தேசியவிருதை ஒருபோதும் திருப்பி அளிக்க மாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

இவர், 2012-ம் ஆண்டு வெளிவந்த 'தி டர்ட்டி பிக்சர்' என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்து, சிறந்த நடிகைக்கான தேசியவிருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 - சுசித்ரா சீத்தாராமன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close