இந்தப் படத்தில் ஏன் இத்தனை வன்முறை? டிட்லி திரை அலசல்

ஒரு கணவனும் மனைவியும் கார் வாங்க ஷோரூம் செல்கின்றனர். காரை டெஸ்ட் டிரைவ் செய்ய வேண்டும் என கணவன் கேட்கிறான். மறுக்கும் டீலரிடம் மனைவி சண்டையிட கார் டெஸ்ட் டிரைவுக்கு அந்த சேல்ஸ் மேன் மற்றும் தம்பதியுடன் கிளம்புகிறது. அனுமதிக்கப்பட்ட தூரத்தைத் தாண்டியதும் காரை நிறுத்தச் சொல்கிறார் அந்த சேல்ஸ் மேன். கார் ஒரு ஆள் நடமாட்டம் இல்லாத பாலத்தில் போய் நிற்கிறது. அப்போது மறைந்திருந்த இரண்டு பேர் வெளியே வந்து அந்த சேல்ஸ்மேனை சுத்தியால் அடித்து கொலை செய்து பிணத்தை காரில் ஏற்றிச் சென்று வேறு இடத்தில் போடுகிறார்கள். பின்னர் திருடிய காருடன் கிளம்புகிறது அந்தக் கும்பல். இது டிட்லி படத்தின் ஒரு காட்சி.

டில்லியின் புறநகர் பகுதி, அங்கு விக்ரம், ப்ரதீப் மற்றும் டிட்லி தங்கள் தந்தையுடன் வசித்து வருகிறார்கள். டிட்லியின் அண்ணன்கள் இருவரும் பெட்ரோல் பங்க், செக்யூரிட்டி வேலைகளை பகுதி நேரமாகவும் திருட்டு, திருட்டு நிமித்தமான கொலைகளை முழு நேரமாகவும் செய்பவர்கள். சில நேரம் காக்கிகள் சொல்லும் வேலைகளும் இதில் அடக்கம். டிட்லிக்கு சொந்தமாக தொழில் துவங்கி அண்ணன்கள் போல் அல்லாமல் நல்ல வாழ்க்கை வாழ ஆசை. அதற்கு தேவையான பணத்தை வீட்டிலிருந்தே திருடி அகப்பட்டுக் கொள்கிறான். இவனுக்கு பொறுப்பு வர வேண்டும் என உடனடி திருமணத்துக்கு ஏற்பாடு செய்து நீலுவை திருமணம் செய்து வைக்கிறார்கள் அண்ணன்கள். நீலுவுக்கு தன் காதலனுடன் வாழ ஆசை. காதலனைச் சந்திக்க செல்லும் நீலுவை தடுத்து, ’நான் அவனுடன் உன்னைச் சேர்த்து வைக்கிறேன். ஆனால், நீ எனக்கு பணம் கொடு’ எனக் கேட்கிறான் டிட்லி. இது படத்தின் கதை அல்ல வெறும் களம்தான். படத்தில் கதை என்று எதுவும் இல்லை, வெறும் நிகழ்வுகள்தான். ஆனால் அதை அத்தனை அழுத்தமாக கூறியதன் விளைவுதான், 'டிட்லி' தவறவிடக்கூடாத படங்களின் பட்டியலில் இணைந்திருக்கிறது.

 

எந்த திட்டமிடலும் இல்லாமல் திருடுவது, போலீஸில் மாட்டிக் கொள்வது, கொலை செய்வது என எதிலும் இவர்களின் நோக்கம் பணமாக மட்டும் இருப்பதும், அவ்வளவு திருடியும், பணம் சேர்த்தும் குறுகிய வீட்டில் சப்பாத்தி குருமாவில் ஜீவித்திருப்பதும் நிஜத்தின் பிரதிபலிப்பு. யாரோ ஒருவர் வாழ்வதற்காக கொலை, கொள்ளை செய்து வாழ்க்கையை தொலைத்துக் கொள்ளும் கும்பல்களின் வாழ்க்கையை, ஒரு குடும்பத்தை வைத்து விளக்கியிருக்கும் இயக்குநர் கனு பாலின் திறமைக்கு சலாம். டிட்லி என்றால் என்ன? பட்டாம்பூச்சி!

இந்தப் படத்தின் அதிகபட்ச விமர்சனங்கள் சொல்லும் ஒரே விஷயம் படத்தின் ஒரு காட்சியிலாவது உங்கள் கண்களை மூடிக் கொள்வீர்கள். அதுதான் இந்தப் படத்தின் வெற்றி. படமும் வன்முறையின் அடர்த்தியை அவ்வளவு அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது. மனைவி அவளின் காதலனுடன் சேர தன்னை விவாகரத்து செய்ய வேண்டும். மனைவியைக் கொடுமைப்படுத்தினால் தான் விரைவாக விவாகரத்து கிடைக்கும் என்பதற்காக, வலி தெரியாமல் இருக்க அவளுக்கு ஊசி மூலம் மருந்து செலுத்தி விட்டு, டிட்லி அவளின் கையில் சுத்தியலால் அடித்து உடைக்கும் காட்சி இதற்கு ஒரு கொலவெறி உதாரணம்.

படம் கேன்ஸ், பெய்ஜிங், மெல்பார்ன், என பல திரைவிழாக்களிலும் பாராட்டைப் பெற்று, பல விருதுகளையும் வென்றுள்ளது.

இத்தனை வன்முறை உள்ள படம் எதற்காக என்று கேள்வி எழுகிறதா? இயக்குநர் நம்மைப் பார்த்து, ’டெல்லியின் நகர மக்கள் வாழ்வுக்கும் புறநகர மக்களின் வாழ்வுக்கு ஏன் இத்தனை குரூரமான வித்தியாசம்?’ எனக் கேட்கிறார்.

உங்களிடம் பதில் இருக்கிறதா?

பா. ஜான்சன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!