ஷாருக்கின் ஃபேன்... உங்களுக்கு ஏன் பிடிக்கும் தெரியுமா?

'சுத்தேஸி ரொமான்ஸ்' படம் மூலம் பாலிவுட் இதயங்களைப் படபடக்க வைத்த மனீஷ் ஷர்மா இயக்கத்தில் ஷாரூக் மற்றும் ஷாரூக் நடிக்கும் படம் தான் ஃபேன்.

உலகின் மிகப் பெரிய சூப்பர் ஸ்டாரின், மிகப் பெரிய ஃபேன்' . ஃபேன் படத்தின் டேக் லைன் இது தான். படத்தின் ஒன் லைனும் கூட.

ஃபேன் படம் முக்கியமானது என்று கூற ஐந்து காரணங்கள் இருக்கின்றன.

1. 23 வருட ஷாரூக்கானின் திரைப்பயணத்தில் 'ஃபேன்' மிகவும் முக்கியமான படம். ஷாரூக் தன் கமர்ஷியல் படங்கள் தவிர்த்து 'டர்', 'ஸ்வதேஸ்', 'சக் தே இந்தியா', 'ரா ஒன்' என வித்யாசமான முயற்சிகள் செய்வது அவ்வப்போது தான். அந்த விதத்தில் இந்த முயற்சி தைரியமானதும் கூட. ஏனென்றால் ஃபேன் ரிலீஸ் ஆகும் முன்பு ரோஹித் ஷெட்டி இயக்கி ஷாரூக் - கஜோல் நடித்திருக்கும் 'தில்வாலே' வெளியாகிவிடும். ஃபேன் படம் வெளியான பின் 'ரயீஸ்' படம் வெளியாகும். இந்த இரண்டில் தில்வாலே ஷாரூக் ஸ்பெஷல் ரொமாண்டிக் படம். 'ரயீஸ்' ஆக்‌ஷன் த்ரில்லர் படம். உறுதியாக ஹிட்டாகும் என வெளிவரவிருக்கும் இரண்டு படங்களுக்கு இடையில் பரிசோதனை முயற்சியாக வரவிருக்கும் படம் 'ஃபேன்'. இதற்கு தைரியம் வேண்டும் தானே?

2. 50 வயதான ஷாரூக்கான் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். சூப்பர் ஸ்டார் ஆர்யனாக நடித்திருப்பது ஷாரூக் கான், அவரின் வெறிபிடித்த 25 வயது ரசிகன் கௌரவாக நடித்திருப்பதும் ஷாரூக் தான். தனக்குப் பிடித்த நடிகரின் சாயல் போல தன்னை வடிவமைத்துக் கொண்டவனின் கதாபாத்திரம் தான் அந்த கௌரவ் கதாபாத்திரம். அதற்கான மெனக்கெடல் தான், ஷாரூக்கின் முக்கியமான படமாக இதை மாற்றி இருக்கிறது.

3. படத்தின் இயக்குநர் மனீஷ் ஷர்மா. 'பேன்ட் பஜா பாரத்', 'லேடீஸ் VS ரிக்கி பாய்', 'சுத்தேஸி ரொமான்ஸ்' என காதல் படங்களில் ஹேட்ரிக் கொடுத்து வெற்றியும் பெற்றவர் மனீஷ். இந்த முறை காதல் சங்கதிகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஒரு சீரியஸ் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.

4. ஹாலிவுட் நடிகர் ப்ராட் பிட்டின் மேக்கப் மேன் தான் ஷாரூக்கின் மேக்கப்பை கவனிக்கிறார். ஏலியன் - 3, பேட்மேன் ரிட்டன்ஸ், தி மாஸ்க், டைட்டானிக் படங்களில் பணியாற்றியவரும், வித்தியாசமான மேக் அப் செய்வதில் கைதேர்ந்தவருமான க்ரீக் கெனம் இதற்குமுன், செவன் கூன் மாஃப் படத்தில் ப்ரியங்கா சோப்ராவின் மேகப்பிற்காக பாலிவுட் வந்தார். இப்போது ஷாரூக்கின் முகத்தையும் மாற்றி அமைத்திருக்கிறார்.

ஷாரூக்கானின் கௌரவ் கெட்டப் பற்றி ஒரு உதாரணம். ஷாரூக் வெற்றி பெற்ற ஹீரோவாக மாறிய நாட்களில் (இப்போதும்), எல்லா சலூன்களிலும் ஷாரூக் கட்டிங் பிரபலம். ஷாரூக்கானைப் போன்று தன் முடியை அலங்காரம் செய்து கொள்வான் கௌரவ். ஷாரூக்கே அவரின் ரசிகனாக நடிப்பதால் அசலை போலியாக மாற்ற வேண்டிய கடமை க்ரீக் கெனமிற்கு.

5. நீங்கள் தான். ஏதோ ஒரு நடிகரின் தீவிரமான ரசிகராக நீங்களும் இருப்பீர்கள். அது ஷாரூக்கானாக கூட இருக்கலாம். வாழ்வின் ஏதோ ஒரு தருணத்தில் உங்களை அந்த நட்சத்திரமாகவே நினைத்துக் கொண்டு ஒரு சின்ன புன்னகை புரிந்திருப்பீர்கள் தானே?. அப்படி என்றால் படத்தின் ஏதோ ஒரு காட்சியில் உங்களை நீங்கள் பார்ப்பீர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!