வெளியிடப்பட்ட நேரம்: 13:02 (28/11/2015)

கடைசி தொடர்பு:13:29 (28/11/2015)

ரன்பிர்கபூர், தீபிகாபடுகோனின் கெமிஸ்ட்ரியில் ஈர்க்கும் தமாஷா திரைஅலசல்

இயக்குநர் இம்டியாஸ் அலியுடன் ரன்பிர் கபூரின் இரண்டாவது இன்னிங்ஸ் தான் தமாஷா. புரிதலுடன் தீபிகா படுகோன், புதிருடன் ரன்பின் கபூர் இவர்களுக்கு இடையேயான காதலில் சதமடிக்கும் காட்சிகளின் கோர்வையே “தமாஷா” படம்.

சிம்லாவில் பிறந்து வளரும் நாயகன் ரன்பிர் கபூர் (வேத்), சிறுவயதிலிருந்தே புராணக் கதைகள் கேட்டே வளர்கிறார். கொல்கத்தாவைச் சேர்ந்தவர் தாரா (தீபிகா). இவர்கள் இருவரும் பிரான்ஸ் நாட்டின் கொர்சிகாவில் சந்திக்கிறார்கள். முதல் சந்திப்பிலேயே பாஸ்போர்ட்டை இழந்துவிட்டு அழுகாச்சி பெண்ணாகவே அறிமுகமாகியார் தீபிகா. இருவரும் பேசிப் பழகுகிறார்கள். கொர்சிகாவில் நடக்கும் காட்சிகளில் இருவரும் ஹிந்தி பட டயலாக்குகளால் தெறிக்கவிடுகிறார்கள்.

இந்தியா திரும்பும் தீபிகா, ரன்பிர்கபூருடன் இருந்த நாட்களை நினைத்து அவர் மேல் காதலில் விழுகிறார். ரன்பிர் டில்லியில் இருப்பதைத் தெரிந்து சந்திக்கச் செல்கிறார். இருவரும் காதலிக்கவும் ஆரம்பித்துவிடுகிறார்கள்.

தான் விரும்பும் எந்த ஒரு விஷயத்தையும் செய்ய முடியாமல் இந்த சமுதாயத்திற்காக தன்னை மாற்றிக்கொண்டு டில்லியில் வாழ்கிறார் ரன்பிர்கபூர்.  கொர்சிகாவில் பார்த்த ரன்பிர்கபூராக இப்போது இல்லையென்று அவன் மேல் ஆதங்கப்படுகிறார் தீபிகா. இருவருக்கும் இடையே சண்டையும் வருகிறது. அதன்பின் ரன்பிர்கபூருடனான காதல் கைசேர்ந்ததா என்பதே மீதிக் கதை.

சில காட்சிகளில் சுவரோவியங்கள் காட்சியை நிறைக்கின்றன. ஒவ்வொரு ஓவியமும் தனித்தனியே கதை சொல்லிச் செல்வது படத்தின் காட்சிக்கு மேலும் அழகு சேர்க்கிறது.

இந்தியின் ஹிட் படமான “பர்ஃபி”யில் நடித்த ரன்பிர்கபூரை மீண்டும் திரையில் ஒருமுறை கொண்டுவந்திருக்கிறார் இயக்குநர் இம்டியாஸ் அலி. ஜாலியான பையனாக இருக்க நினைக்கும் ரன்பிர், சமுதாயத்திற்காகவும், தன் அப்பாவுக்காகவும், தனக்குப் பிடிக்காத விஷயங்களைச் செய்துவரும் காட்சிகள், அதனால் ஏற்படும் மன அழுத்தம், தீபிகாவிடம் கோபத்தில் பேசும் இடமென்று அனைத்து இடங்களிலும் சிக்ஸர்களை விளாசுகிறார்.

ஒளிப்பதிவும், இசையும் இந்தப் படத்தின் ஸ்பெஷல் விஷயங்கள். படத்தின் லைட்டிங் மற்றும் கேமரா வேலைகளில் இந்தப் படத்திலும் வெரைட்டி காட்டியிருக்கிறார் ரவிவர்மன்.

படத்தின் பின்னணி மற்றும் பாடல்கள், படம் மெதுவாக நகரும் போதெல்லாம் கைகொடுத்து காப்பாற்றுவது போல அமைந்திருக்கிறது. இருப்பினும் காதலர்களுக்காக இன்னும் சில பாடல்களை டெடிகேட் செய்திருக்கும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தனி சல்யூட்.

ரன்பிர் கபூரும் தீபிகாவும் இணைந்து நடித்த ஏக் திவானி ஹய் ஜவானி படத்திற்குப் பிறகு மீண்டும் ஒரு முறை இருவரின் வேதியியல் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது.

இப்படத்தில் காதலை மட்டும் சொல்லாமல், காதலிலும், வாழ்க்கையிலும் நமக்கு என்ன பிடிக்குமோ அதைத் தான் செய்யணும், பிடிக்காத வாழ்க்கை நிச்சயம் நரகத்திற்குச் சமம் என்பதைக் கதையில் சொல்லிச் செல்கிறார் இயக்குநர்.

மொத்தத்தில் தமாஷா - மகிழ்ச்சியைத் தொலைத்துவிட்டுத் தேடும் காதலர்களை  மையப்படுத்திய அழகான காதல் படம்!

பி.எஸ்.முத்து

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்