இந்தியாவின் உயரிய விருது பெற்ற இளம்பெண்ணின் வீரக்கதை | neerja biopic movie Details

வெளியிடப்பட்ட நேரம்: 12:19 (04/01/2016)

கடைசி தொடர்பு:12:13 (05/01/2016)

இந்தியாவின் உயரிய விருது பெற்ற இளம்பெண்ணின் வீரக்கதை

23 வயதான ஒருவர் என்ன செய்து கொண்டிருப்பார். வேலை தேடிக்கொண்டு, பெற்றோரிடம் திட்டு வாங்கி கொண்டு, நண்பர்களுடன் ஊரைச் சுற்றி பொழுதைக் கழித்து கொண்டிருப்பார். ஆனால் நீர்ஜா பானோட்டின் கதை சற்று மாறுபட்டது.

கல்யாணம் ஆகி இரண்டே மாதத்தில், வரதட்சணைக் கொடுமையால் மீண்டும் வீட்டிற்கு வந்தவர் அதோடு முடங்கிவிடவில்லை. பேன் ஆம் விமான நிறுவனத்தில்  விமானப் பணிப்பெண்ணாகப் பயிற்சி எடுக்க மையாமி சென்றவர் திரும்பி வந்தது விமான குழு நிர்வாகி எனப்படும் பர்ஸராக. ஆனால் இவற்றை விடப் பெரிது,அவர் செய்த மாபெரும் விஷயம் தன் உயிரைப் பொருட்படுத்தாமல் 350 பயணிகளின் உயிரை காப்பாற்றப் போராடினார்.

எல்லா நாட்களையும் போல தனது விமானப் பணிக்குப் புறப்பட்டார் நீர்ஜா, அன்று செப்டம்பர் 5 - 1986. மும்பை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் கராச்சி வழியாக நியூயார்க் செல்லத்தயாரானது. வழக்கம் போல அந்த விமானம் சென்றிருந்தால் தனது பிறந்தநாளைக் கொண்டாட நீர்ஜா வீடு திரும்பியிருப்பார் ஆனால் அவர் வீடு திரும்பியது சவப்பெட்டியில் தான்.

கராச்சி விமான நிலையத்தில் இருந்த விமானத்தை அபு ஜின்டால் என்ற தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த நால்வர் கைப்பற்றினர். கையில் துப்பாக்கிகள் வெடிகுண்டுகளுடன்  அவர்கள் நுழைந்த மாத்திரத்திலேயே நீர்ஜா காக்பிட்டில் இருக்கும் ஓட்டுநர்களுக்குத் தகவல் சொல்ல ஓடினார்.  அதற்குள் அவரது முடியைப் பிடித்து தடுத்து நிறுத்த முற்பட்டனர் தீவிரவாதிகள் அவர்களது முயற்சிகளை மீறி ஹைஜாக் கோடை அவர்களுக்குச் சொல்லி தகவல் சொன்னார்.

ஹைஜாக் ஆனதை கன்ட்ரோல் ரூமிற்கு தெரிவிக்க வேண்டிய ஓட்டுநர்களூம் ஃப்ளைட் இஞ்சினியரும் காக்பிட் கதவு வழியாகத் தப்பித்துச் சென்றனர். கேபின் க்ரூ மேனேஜர் பொறுப்பில் இருந்த நீர்ஜா விமானத்தில் இருக்கும் அனைவருக்கும் பொறுப்பாகும் சூழ்நிலை நேர்ந்தது.

தீவிரவாதிகள் பயணிகளின் பாஸ்போர்ட்களை  சேகரிக்கச் சொன்ன போது, அமெரிக்கர்களை அவர்கள் குறிவைக்கும் ஆபத்தை உணர்ந்து பல அமெரிக்கப் பயணிகளின் பாஸ்போர்ட்களை ஒளித்து வைத்தார், சிலவற்றை குப்பை சேகரிக்கும் குழாய்க்குள் வீசினார். இந்த சின்ன சமயோசிதமான செயல் மூலம் பலரின் உயிரைக் காப்பாற்றினார்.

பல மணி நேரம் உள்ளேயே சிக்கி இருந்த பயணிகளுக்கு தன்னால் முடிந்த அளவுக்கு ஆறுதல் சொல்லி பதற்றமடையாமல் இருக்கச் செய்தார்.

தக்க சமயம் அமைந்த போது  அவசர வழிக் கதவைத் திறந்து பயணிகளைத் தப்பிக்கச் செய்தார். நினைத்திருந்தால் முதல் ஆளாக அவரே வெளியேறிருக்கலாம் ஆனால் பயணிகளின் பாதுகாப்பை மட்டுமே கருத்தில் கொண்டு அவர்களை மட்டுமே வெளியேற்றிக் கொண்டிருந்தார். தீவிரவாதிகள் துப்பாக்கி சூட்டை ஆரம்பித்த போது மூன்று குழந்தைகளின் உயிர் காக்க அவர்கள் முன்னே நின்று குண்டடி பட்டு வீர மரணம் அடைந்தார்.

அவரது மறைவிற்கு பின்பு இந்தியாவின் மிக உயரிய விருதான அஷோக் சக்ரா வழங்கப்பட்டது. இந்த விருதினைப் பெற்ற முதல் பெண்ணும் மிகக் குறைந்த வயதில் பெற்றவரும் இவரே. பாகிஸ்தான் மற்றும் அமெரிக்க  அரசும் அதன் உயரிய விருதுகளை வழங்கி கெளரவப்படுத்தியது.

நீர்ஜா பானோட்டின் கதையைப் படமாக எடுத்துள்ளது ஃபாக்ஸ் நிறுவனம். சோனம் கபூர் நடிப்பில் வெளியாக உள்ள படத்தின் ட்ரெயிலர் இப்போது வந்துள்ளது. “நீர்ஜா” திரைப்படம் பிப்ரவரி  2016 இல் வெளியாக உள்ளது.

- ஐ.மா.கிருத்திகா

மாணவர் பத்திரிகையாளர்
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close