Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

”பாலிவுட் ராட்சஸிகள்” மகளிர் தின ஸ்பெஷல்

ம்பர் ஒன் நடிகைகளாக லைம்லைட்டில் இல்லை; கோடிகளில் முத்துக் குளிக்கும் பாலிவுட் பதுமைகளும் இல்லை. ஆனால், மாற்று சினிமாவோ, கமர்ஷியல் சினிமாவோ, இந்தியாவையும் தாண்டி உலகத் திரைப்பட விழாக்களில் கவனம் ஈர்த்த நடிப்பு ராட்சஸிகள் சிலரைப் பற்றி இங்கே...

ரிச்சா சத்தா

மாடலிங் பைங்கிளி. தேர்ந்த தியேட்டர் ஆர்ட்டிஸ்ட். திபாகர் பானர்ஜி, அனுராக் காஷ்யப் கண்டெடுத்த நடிப்பு முத்து! 'ஓயே லக்கி... லக்கி ஓயே’, 'கேங்ஸ் ஆஃப் வாஸேப்பூர்’ படங்களில் அசத்தல் நடிப்பில் அந்த கேரக்டராக மாறியவர். அந்தப் பட பெர்ஃபார்மன்ஸ் காரணமாக, 11 படங்கள் வாய்ப்பு வந்தது. ஆனாலும், வந்ததை வாரிக்கொள்ளாமல் செலக்டிவான படங்களில் மட்டுமே நடிக்கிறார். 'ஃபக்ரி’, 'கோலியோன் கி ராஸ்லீலா’ ஆகிய படங்களில் சின்ன ரோலாக இருந்தாலும், அப்படியே கேரக்டராக மாறிவிடுகிறார் என விமர்சகர்கள் பாராட்டினர். பெரிய பெரிய சினிமாக்களை மட்டும் பாக்கெட் செய்யாமல், 'நடிப்பு என்றால் எல்லாமே நடிப்புதான்’ என வீதி நாடகங்கள், 'எபிலோக்’ என்ற குறும்படம் எனப் பல தளங்களிலும் பட்டையைக் கிளப்பியிருந்தார். கண்டங்கள் தாண்டி கலக்கும் மீரா நாயர் உள்ளிட்ட 9 இயக்குநர்களின் இயக்கத்தில் ரிலீஸான, 'வேர்ட்ஸ் வித் காட்ஸ்’ என்ற படத்தில் மீரா நாயரின் 'காட் ரூம்’ என்ற குறும்படத்தில் பிரமாதமாக நடித்திருந்தார்.

இந்த ஆண்டு ரிலீஸான 'மாஸான்’ திரைப்படத்தில் பிரதான கேரக்டரில் நடித்து கேன்ஸ் வரை கொண்டாடப்பட்டார். காசி நகரத்து லாட்ஜ் ஒன்றில் காதலனோடு உறவுகொள்ளும்போது, போலீஸாரால் பிடிபட்டு, உளவியல் ரீதியாக டார்ச்சரைத் தாங்கி மேலே முன்னேறிவரும் பெண்ணாக யதார்த்த நடிப்பில் சிலிர்க்கவைத்தார். காத்திரமான காட்சிகளில் நடிப்பதற்காகவே, இப்போது எக்கச்சக்க பாலியல் தொழிலாளி பாத்திரங்கள் வருகிறதாம்.

'முத்திரை குத்த வேண்டாம். வேற... வேற’ என்கிறார். சபாஷ்!

ஹியூமா குரேசி

இவரும் அனுராக் ஸ்டூடன்ட்தான்! தியேட்டர் டு சினிமா ரூட் பிடித்தவர் 'கேங்ஸ் ஆஃப் வாஸேப்பூர்’ படத்தில் நவாஜுதீனுக்கு ஜோடி. அடுத்தடுத்த படங்களில் நெகட்டிவ் ரோல்களில் ஈர்த்தார். 'ஏக் தி தாயன்’ சூன்யக்காரி, 'தேத் இஸ்க்கியா’ சீட்டிங் கேர்ள், 'டி டே’ ரா அதிகாரி, 'பத்லாப்பூர்’ பாலியல் தொழிலாளி என வெரைட்டி ரோல்களில் வெறித்தனம் காட்டினார். அனுராக் தயாரிப்பில் வந்த 'ஷார்ட்ஸ்’ படத்தில் 'சுஜாதா’ என்ற ஷாக்கிங் ரோலில் கண்ணீர் சிந்தவைத்திருந்தார். அண்ணன் முறை கொண்ட ஒருவனால் தொடர்ந்து பாலியல் சித்ரவதைக்கு உள்ளாகி, கொதிக்கும் எண்ணெய் கொண்டு கொலை செய்பவராக மிரட்டியிருந்தார்.

பட்சி விரைவில் தமிழுக்கு வருவார் என எதிர்பார்க்கலாம்!

ஸ்வேதா திரிபாதி

லேடி விஜய் சேதுபதி! இங்கே நாளைய இயக்குநர் சீஸன்கள் பட்டையைக் கிளப்பிய நேரத்தில், அங்கே குறும்படங்களில் நடித்துக்கொண்டிருந்தார். பாராட்டுக்கள் குவிய, நிறைய குறும்படங்கள் நடித்தார். 'கியா மஸ்த் ஹே லைஃப்’ என்ற டிவி சீரியல் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு 'த்ரிஷ்னா’ நல்ல பெயர் வாங்கிக் கொடுக்க, அனுராக்கின் சிஷ்யர் இயக்கிய 'மாஸான்’ படத்தில் அழகுக் குட்டிச் செல்லமாக ஹீரோயின் ரோலில் நெகிழவைத்தார். விடுவாங்களா பாலிவுட் டைரக்டர்ஸ்? ஸ்லோக் சர்மா என்ற நியூ ஏஜ் சினிமா இயக்குநரின் 'ஹராம்கொர்’ என்ற படத்தில் இவருக்கு சவாலை பெட்ஷீட்டாகப் போர்த்திக்கொண்டு தூங்கும் பாத்திரம். ஆம், ஆசிரியருக்கும் மாணவிக்கும் இடையே நிகழும் காதலைப் பேசுகிறது.

அப்படிப் போடு!

திலோத்தமா ஷோமே

கொல்கத்தா ரசகுல்லா. நியூயார்க்கில் நடிப்பு பயின்றவர். மீரா நாயரின் 'மான்ஸ¨ன் வெட்டிங்’ மற்றும் 'ஷேடோஸ் ஆஃப் டைம்’ போன்ற ஹாலிவுட் படங்களில் கலக்கியவர். பெங்காலி சினிமாவின் அதிர்ச்சி டைரக்டர் கௌஷிக் முகர்ஜியின் 'தாஷேர் தேஷ்’ படத்தில் பின்னியவர். பாலிவுட்டின் ஹிட் 'ஷாங்காய்’ படத்தில் இவர் நடிப்பு விமர்சகர்களால் ஏகத்துக்கும் பாராட்டப்பட்டது. 'கிஸ்ஸா’ என்ற இந்திய - ஜெர்மன் படத்தில் ஆணாக மாற விரும்பும் பெண்ணாக ஹீரோயின் பாத்திரத்தில் நடித்து, அனைத்து சர்வதேச படவிழாக்களிலும் பல விருதுகளை வாரிக்குவித்தார். திலோத்தமா இப்போது மாற்று சினிமாக்கள், குறும்படங்கள் என ஏகத்துக்கும் பிஸி!

கொங்கனா சென்

நடிப்பும் கலைவெறியும் ரத்தத்திலேயே ஊறிக்கிடக்கு. அம்மா அபர்ணா சென் 3 தேசிய விருதுகள், 9 சர்வதேச விருதுகளை பெங்காலி சினிமாவுக்காக வாரிக் குவித்த பன்முக சினிமா ஆளுமை. தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி பாயாதா? கமர்ஷியல் தாண்டிய மாற்று சினிமாவின் புதிய முயற்சி என்றால், கண்டிப்பாக அந்த ஸ்கிரிப்ட்டில் கொங்கனா இருப்பார். அம்மா அபர்ணா இயக்கத்தில் 'மிஸ்டர் அண்டு மிஸஸ் ஐயர்’ ஆங்கிலப் படத்துக்காக தேசிய விருதை வாங்கினார். 'ஓம்காரா’, 'லைஃப் இன் மெட்ரோ’ படங்களிலும் முத்திரை நடிப்பு. பல சர்வதேச விருதுகளை வீட்டில் குவித்துவைத்திருக்கிறார். 2007-ல் தன் காதலர் நடிகர் ரன்வீர் ஷோரேவை மணந்து, ஒரு குழந்தைக்கு அம்மாவாகியும் இன்னமும் போல்டான கேரக்டர்களாக பெங்காலி மற்றும் இந்தி சினிமாக்களில் கலக்கி எடுக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இந்தியில் ரிலீஸாகப்போகும் இந்தி 'மௌனகுரு’வான 'அகிரா’ படத்தில் தமிழில் உமா ரியாஸ் செய்த இன்ஸ்பெக்டர் கேரக்டரில் மிரட்டி எடுக்கப்போகிறார். 'மௌனகுரு’வைப் பார்த்துவிட்டு தமிழில் நடிக்கும் ஆர்வம் வந்திருக்கிறதாம்.

வெல்கம் டு கோடம்பாக்கம்!

ஆர்.சரண்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்