”பாலிவுட்டின் தனி ஒருவன் “ அமீர்கான் பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு!

யக்குநர் ஷங்கர் ஒரு படப்பிடிப்பிற்காக வெளியூரில் இருந்த சமயம், இந்திப் படம் ஒன்றைப் பார்க்கிறார். அதன் தாக்கத்திலிருந்து விடுபட முடியாத அவர், அந்தத் திரைப்படத்தை நிச்சயம் தமிழ்ரசிகர்களுக்காக மறுஆக்கம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார். எப்பொழுதுமே சொந்தக் கதையையே திரைப்படமாக்க நினைக்கும் ஷங்கரைப் புரட்டிப்போட்ட அந்தப் படம்.. அமீர்கான் நடித்த "3 இடியட்ஸ்".

 அமீர்கான். நான்கு தேசிய விருதுகள். ஏழு ஃப்லிம் ஃபேர் விருதுகள். பத்ம ஸ்ரீ, பத்மபூஷன் என்று எல்லாவற்றையும் கையில் ஏந்திக்கொண்டு இன்னும் வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் குதிரை. தேர்ந்தெடுக்கும் கதைகள் மூலம் சமூகத்திற்கு ஏதேனும் ஒரு சேதி சொல்லும் ஆர்வமுள்ள நடிகர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர். 

 டிக்கெட் விலை 500 ரூபாயாக இருப்பினும், இவர் படமென்றால் முதல் நாள் முதல் காட்சி  களை கட்டும்.  அனேகமாக பல இளைஞர்களின் ஆதர்சமாக விளங்குபவர். பெண்களின் செல்லம். சமூக சேவைகளுக்கு பேர் போனவர். பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளை முறியடித்து கலெக்ஷன் கிங் என கூறும் அளவிற்கு திகழும் ஆமீர் கான், 14 மார்ச் 1965ல் பிறந்து - இன்றைக்கு அரை சதத்தை கடந்து 51 அகவையை எட்டுகிறார்.

மும்பையில் தயாரிப்பாளர் தாகிர் ஹுசெயின், சீனத் ஹுசெயின் தம்பதியினருக்கு பிறந்த இவர், இன்றைய தேதியில் பாலிவுட்டின்  மோஸ்ட் வாண்டட் நடிகர். இந்திய மொழிகள் எல்லாவற்றிலுமே தனக்கென ஒரு இடம் பிடித்திருப்பவர்.  நான்கு குழந்தைகளுள் மூத்தவரான அமீர் தனது முதல் திரையுலக பிரவேசத்தை 1973ஆம் ஆண்டு தனது உறவினரும், இயக்குனருமான நாசிர் ஹுசைனின் "யாதோன் கி பாரத்" படத்தில் குழந்தை நட்சத்திரமாக துவங்கினார். அதன் பிறகு 1988ல் இவர் நடித்த ‘கயாமத் சே கயாமத் தக்’ இந்திய அளவில் மாஸ் ஹிட்டடித்த படம். அதில் பல விருதுகளை அள்ளி, தனக்கென ஒரு சிம்மாசனத்தைப் பிடித்தார். பின், பல திரைப்படங்களிலும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து, ஏறக்குறைய அனைத்து தரப்பினரையும் தனக்கு ரசிகராக மாற்றியுள்ளார்.

ஒரு முழுமையான நடிகர் என கூறும் அளவிற்கு இவரது நடிப்பும், திரையில் இவரது செயல்பாடுகளும் அமைந்திருக்கும். ஒரே மாதிரியான கதாபாத்திரத்தில் நடித்து போர் அடிக்காமல், ஒவ்வொரு படத்திலும் ஒரு புதிய கதைக்களம், புதிய கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பவர் ஆமீர்.

எழுபதுகளில் இருந்த இளம்பெண்கள் முதல் இந்தக் கால இளம்பெண்கள் வரை அனைவரின் கனவு நாயகனாகவும், ஆண் ரசிகர்களுக்கு நல்ல நடிகனாகவும் , குழந்தைகளுக்கு ஒரு முன்மாதிரியாகவும், திரைத்துறையிலேயே பலருக்கு சிம்ம சொப்பனமாகவும் விளங்கும் அவர் திரையுலகிற்கு அளித்த திரைப்படங்கள்  57. நடிகராக மட்டுமல்லாமல் ஒரு தயாரிப்பாளர், உதவி இயக்குனர் என பல முகங்களைக்  கொண்டுள்ளார் அவர்.
 

'அமீர் கான்' எனும் பெயரைக் கேட்ட உடன் பலரது மனதிற்கும் வரும் சில திரைப்படங்கள் "லகான், மங்கள் பாண்டே, தாரே ஜமீன் பர், 3 இடியட்ஸ், பிகே"  ஒவ்வொன்றிலும் தனது நடிப்பால் பல கோடி ரசிகர்களையும், பல கோடிகளில் கலெக்ஷனையும் ஈர்த்தவர்.

 


இவர் நடித்த 3 இடியட்ஸ் திரைப்படம், இந்திய மாணவர் சமூகத்தில் பெரிய தாக்கத்தை உண்டாக்கியது அதன் பிறகு அநேகமாக பலர் தங்கள் கனவுகளை நோக்கி பயணிக்கத் துவங்கினர். பிகே படத்தில் அவரது கதாபாத்திரமும், நடிப்பும் பலராலும் பாராட்டப்பட்டது.  மதம் என்ற பிடியில் நம் இந்தியா எப்படி குழம்பிப் போயுள்ளது என்பதை  தைரியமாகவே  சொன்னார். இப்படி சமூக சிந்தனைகளோடு கூடிய கமர்ஷியல் படங்களைக் கொடுப்பதில் அமீர்கான், எப்போதும் முன்னணியில் இருக்கிறார்.

தமிழில் தயாரான கஜினி படத்தை ஹிந்தியில் நடித்துக் கொடுத்த அமீரின் 3இடியட்ஸ் திரைப்படம் தமிழில் விஜய் நடிப்பில் வெளியானது. இப்படி தமிழ்நாட்டிற்கும் அவருக்குமான தொடர்பு இருந்து கொண்டு இருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேல் தமிழில் வெளியான  தனது தூம் 3 படத்தை புரமோட் செய்ய முதல்முதல் தமிழ் நாட்டுக்கு வந்த இந்தி நடிகர் அமீர்கானாகத் தான் இருப்பார். அவருக்குப் பிறகு ஹ்ருத்திக் ரோஷன், அமிதாப் பச்சன், ஷாருக்கான் என பலரும் இங்கே வந்து சென்றது குறிப்பிடத்தக்கது.

திரைப்படங்கள் மட்டுமல்லாது சின்னத்திரையில் அவர் நடத்திய 'சத்தியமேவ ஜெயதே' எனும் தொடர் அவருக்கு வெள்ளித்திரையில் கிடைத்திராத, பெயரையும், புகழையும், எல்லாவற்றிற்கும் மேல் அவர் மீது ஒரு பெரிய மரியாதையையும் மக்களிடையே ஏற்படுத்தியது. சமூகத்தில் நமக்கு ஏற்படும் இன்னல்களைப் பற்றியும், அதை மாற்றும் வழிமுறைகளையும் காட்டிய அந்தத் தொடரால் உண்மையிலேயே பல மாறுதல்கள் ஏற்பட்டன.

எப்பொழுதும் புதிய கதாபாத்திரத்தை தேடிச் சென்று நடித்து அதனுடன் சேர்த்து சமூக சேவைகளையும் செய்யும் அமீர் கானுக்கு நமது பிறந்த நாள் வாழ்த்துகள்.


பா.அபிரக்ஷன்

(மாணவப் பத்திரிகையாளர்)

Do you like the story?

Please Appreciate the Author by clapping!