தற்கொலைக்கு மூன்று முறை முயன்றாரா பிரியங்கா சோப்ரா? - பாலிவுட் பரபரப்பு - முழுத்தகவல்களுடன்!

ஃபெமினா மிஸ் வேர்ல்ட் பட்டம் வென்றவர் ப்ரியங்கா சோப்ரா. விஜய்யுடன் ‘தமிழன்’ திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்து தன் திரையுலக வாழ்வைத் தொடங்கினார். அதன்பின் பாலிவுட்டில் ‘தி ஹீரோ’வில் ஆரம்பித்து பலபடங்களில் நடித்துப் பிரபலமானார். சமீபத்தில் இவர் நடித்த பாஜிராவ் மஸ்தானி வசூலில் சக்கை போடு போட்டது. 

இவர்  தன் சிறுவயதில் மூன்று முறை தற்கொலைக்கு முயன்றதாக வெளியான தகவலால் பாலிவுட் வட்டாரங்களில் பரபரப்பு நிலவுகிறது.


பிரியங்கா சோப்ராவின் முன்னாள் மேனேஜர், பிரகாஷ் ஜாஜு. அவர் தனது ட்விட்டர் அக்கவுண்டில் ‘பிரியங்கா சோப்ரா, இப்போது பிரபலமாக இருக்கிறார். நான் 2000ம் ஆண்டில் அவரை சந்திக்கும்போது மிகவும் குழந்தைத்தனமாகவும், எளிதில் உடைந்து போகக்கூடியவராகவும் இருந்தார். தனது இக்கட்டான காலத்தில் மூன்று முறை தற்கொலைக்கு முயன்றவர். அவரது நண்பராக இருந்த அசீம் மெர்ச்செண்டின் தாய் மறைந்தபோது, பிரியங்கா மிகவும் உணர்ச்சிவசப்பட்டவராக, அடுக்கு மாடிக் குடியிருப்பில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார். சரியான நேரத்தில் நான் ஓடிச்சென்று அவரை நாற்காலியில் கட்டிப்போட்டு, எல்லா ஜன்னல்கள், கதவுகளையும் அடைத்தேன்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்’

இதைக் கண்டித்திருக்கிற பிரியங்கா சோப்ராவின் தாய் மதுசோப்ரா ’அவர் ஒரு பொய்யர். தேவையில்லாமல் பரபரப்பு கிளப்புகிறார்’ என்றிருக்கிறார். 

 

பிரகாஷ் ஜாஜு, பிரியங்கா சோப்ராவின் மேலாளராக 2000 முதல் 2004ம் ஆண்டு வரை இருந்தவர். தனது சம்பள பாக்கி வராததால், பிரியங்கா மீது இவர் வழக்கு தொடர்ந்தார். இந்த விவகாரம் முற்றி, பிரியங்காவின் தந்தை கொடுத்த புகாரின்பேரில், பிரகாஷ் ஜாஜு இரண்டு மாதங்களுக்கு மேலாக சிறையில் இருந்தார். இதைத் தொடர்புபடுத்தியிருக்கிற பிரியங்காவின் தாயார், ‘பிரகாஷ் ஜெயிலில் இருந்தபோது, அவரது பெற்றோர்கள் என் மகளின் காலில் விழுந்து கதறியதை நினைக்க வேண்டும்’ என்றிருக்கிறார்.
இதற்கும் பதில் சொல்லியிருக்கிறார் பிரகாஷ் ஜாஜு.

‘எல்லோரும் மதுஜிக்கு (பிரியங்கா சோப்ராவின் தாயார்) நான் பதில் சொல்லவேண்டும் என்கிறார்கள். நான் பொய்யனாக இருந்தால் 39 வருடம் காலந்தள்ளி இருக்க முடியாது. தப்பாக இருந்தாலும், மது சோப்ரா இதைக் கொஞ்சம் மென்மையாக கையாண்டிருக்கலாம். பிரியங்கா சோப்ரா மிஸ். இந்தியா, உலக அழகி பட்டமெல்லாம் பெறுவது முன், மும்பையில் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். அப்போது மதுசோப்ரா மும்பையில் இல்லை. பிரியங்கா, தினமும் டிரெய்னில் இந்த பெரிய மும்பையில் தனியாக சுற்றிக்கொண்டிருந்தார். மூன்று பெண்களோடு ஒரு அறையைப் பகிர்ந்து கொண்டிருந்தார். அப்போது மதுசோப்ரா, பிரியங்காவுடன் இல்லை. அவர் மிஸ். இந்தியா, மிஸ். வேர்ல்ட் வாங்கிய பிறகு தமிழ்ப்படம் ஒன்றில் 45 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்துகொண்டார். அதற்குப் பின்னர்தான், மதுசோப்ரா தன் மகளுடன் வந்து இருந்தார்.

 

 

பிரியங்கா அவ்வாறு கஷ்டப்பட்டு கொண்டிருக்கும்போது, அவரது நண்பர் அசீம் மெர்ச்செண்ட்தான் அவருக்கு ஒரே உறுதுணையாக இருந்தார். நான் சொன்னது நடக்கும்போது மதுசோப்ரா, ப்ரியங்காவுடன் இல்லை. எப்படி என்னை பொய்யர் என்று அவர் சொல்லலாம்’ என்று கேட்டிருக்கிறார்.

மும்பைக்கு படவாய்ப்புக்காக பல பெண்கள் யார் துணையுமின்றி வருவதைக் கண்டித்தே அவர் இவற்றையெல்லாம் சொன்னார் என்பதையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

 

யார் துணையுமின்றி வருகிறவர்கள், தனியாக தங்கி இதுபோன்ற மனச்சிக்கல்களுக்கு ஆளாகிறார்கள். ஆகவே அப்படி வாய்ப்புக்காக வருபவர்கள் தங்கள்  பெற்றோர் அல்லது சகோதரனுடன் வருவதே சிறந்தது என்றிருக்கிறார்.

பிரியங்கா தற்போது  ஹாலிவுட் படமொன்றின் படப்பிடிப்பிற்காக லாஸ் ஏஞ்சலீஸில் இருக்கிறார். அவர் இந்தியா வந்தபின், இந்த விவகாரம் மீண்டும் சூடுபிடிக்கும் எனத் தெரிகிறது.

 .

Do you like the story?

Please Appreciate the Author by clapping!