நான் ஈ படத்தில் சல்மான்கான்.... ராஜமௌலியின் அப்பா தகவல்! | Salman Khan to do Naan E movie hindi remake... says Rajamouli's father

வெளியிடப்பட்ட நேரம்: 10:40 (07/04/2016)

கடைசி தொடர்பு:13:01 (07/04/2016)

நான் ஈ படத்தில் சல்மான்கான்.... ராஜமௌலியின் அப்பா தகவல்!

2012ல் இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான படம் நான் ஈ, தெலுங்கில் ஈகா. இப்படம் ஹிந்தியிலும் ஈகா என்ற பெயரிலேயே டப் செய்யப்பட்டு வெளியானது. மூன்று மொழிகளிலும் நன்கு வரவேற்பைப் பெற்ற இப்படம், ராஜமௌலியின் பெயரை தமிழ் மற்றும் தெலுங்கை தாண்டி ஹிந்தி திரையுலகிலும் பிரபலம் அடைய செய்தது.

முன்னதாகவே இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படும் என்று ராஜமௌலி கூறியிருந்த நிலையில், அவரது தந்தை மற்றும் பிரபல வசனகர்த்தா விஜயேந்திர பிரசாத், ஈகா 2 படத்தில் பிரபல பாலிவுட் முன்னணி நடிகர் சல்மான் கான் நடிக்க விருப்பமாக உள்ளார் எனக் கூறியுள்ளார். நேற்று சென்னையில் திரைப்பட மாணவர்களிடையே உரையாற்றிய போது இதனைத் தெரிவித்தார்.

சென்ற வருடம் சல்மான் நடிப்பில் வெளியான பஜிரங்கி பைஜான் படத்திற்க்குக் கதை எழுதியவர் விஜயேந்திர பிரசாத் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜமௌலி தற்போது பாகுபலி 2ம் பாகத்தினை எடுத்துவருகிறார். சல்மான் கான் தற்போது சுல்தான் படத்தில் நடித்து வருகிறார், இப்படம் இந்த வருடம் ரம்ஜானுக்கு வெளியாக உள்ளது. இதனையடுத்து சல்மான், கபீர் கான் படத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில் பாகுபலியின் 3ம் பாகமும் நிச்சயம் எடுக்கப்படும் என்று ராஜமௌலி கூறியுள்ளார். எனவே ஈகாவை பற்றிய மற்ற விபரங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை. மேலும் விஜயேந்திர பிரசாத் இவ்வாறு கூறியுள்ள பொதும் ராஜமௌலி, சல்மான் கானுக்கு ஓகே சொல்வாரா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஆனால் ஒரு விஷயம் நாம் ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். படத்தின் கதைப்படி நடிப்பும், வெயிட்டான கேரக்டரும் சுதீப்புக்கு தான். அந்த வகையில் சல்மான் எந்தக் கேரக்டரில் நடிப்பார் என்பது தான் இப்போது நமக்கு மிகப்பெரிய கேள்வி.. ஒரு பக்கம் நானி நடித்த நாயகன் கேரக்டர் ஆனாலும் படத்தில் நானிக்கு பெரிதாக வேலையே இல்லை. ஆனால் சுதீப்புக்குதான் நடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். 

வில்லன் கேரக்டரில் சல்மான் கான் நடித்தால் மட்டுமே படம் முழுவதும் தனது திறமையைக் காட்ட முடியும், மேலும் நானி கேரக்டரில் சல்மான் கான் நடித்தால் கண்டிப்பாக சல்மான் கான் ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமாகவே அமையும். 

- பிரியாவாசு -

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close