பாலிவுட் நடிகர் திலிப் குமார் மருத்துவமனையில் அனுமதி!

இந்தி திரையுலகின் பழம்பெரும் நடிகர் திலீப் குமார் திடீர் உடல் நலக்குறைவால் இன்று அதிகாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்தி திரையுலகின் 93 வயது பழம்பெரும் கதாநாயகனான திலிப் குமாருக்கு இன்று அதிகாலை 2 மணியளவில் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கிறது. இதை தொடர்ந்து, மும்பை லீலாவதி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தற்போது அவரது உடல் நிலை சீரடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற ராஜ்யசபை உறுப்பினராக ஐந்தாண்டுகள் பதவி வகித்த திலிப் குமார், தனது இரண்டாவது மனைவி சாய்ரா பானுவுடன் மும்பையில் வசித்து வருகிறார். தற்போது பாகிஸ்தான் நாட்டின் ஒருபகுதியாக இருக்கும் பெஷாவர் நகரில் 1922-ம் ஆண்டு பிறந்த திலிப் குமார், 1944-ம் ஆண்டு வெளியான ‘ஜுவார் பாட்டா’ திரைப்படத்தின் மூலம் இந்தி சினிமாவில் அறிமுகமானார். ‘அந்தாஸ்’, ‘தேவதாஸ்’, ‘மொகலே ஆஸம்’, ‘ஆஸாத்’ உள்பட சுமார் 60 படங்களில் நாயகனாக நடித்த திலிப் குமார், தனது தனித்துவமான நடிப்புத்திறனால் ரசிகர், ரசிகைகளின் உள்ளங்களில் நீங்காத இடம் பிடித்தார்.

8 பிலிம்பேர் விருதுகளை ஒருசேர பெற்ற ஒரே நடிகர் என்ற சிறப்புக்குரிய இவர், பிலிம்பேர் அளித்த சிறந்த நடிகர் பட்டத்தை பெற்ற முதல் நபருமாவார். திலீப் குமாருக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பத்ம விபூஷன் விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்தது. அதேபோல், கடந்த 1991-ம் ஆண்டு சினிமா துறையில் அவர் ஆற்றிய மிகச்சிறந்த பங்களிப்புக்காக பத்ம பூஷன் விருதும் வழங்கப்பட்டது. 1994-ம் ஆண்டு தாதாசசேகப் பால்கே விருதையும், 1997-ம் ஆண்டு பாகிஸ்தான் வழங்கிய நிஷான் இ இம்தியாஸ் விருதையும் அவர் பெற்றுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!