அரவிந்த் சாமியின் “Dear Dad” - ஒரு ரசிகனின் பார்வை!

ருவம் தொட்ட மகன், பள்ளி செல்ல அடம்பிடிக்கும் குட்டிப்பாப்பா இருவருக்கும் தந்தையான அரவிந்த்சாமி, தன் மகன் ஹிமான்ஷூவை ஒரு போர்டிங் ஸ்கூலில் சேர்ப்பதற்காக காரில் செல்லும் வழியில், தன் அப்பாவை சந்திக்கச் செல்கிறார். அங்கே ஹிமான்ஷு, அப்பாவும், தாத்தாவும் பேசிக் கொள்வதை  கேட்டுவிடுகிறான்.

அதன்பிறகு தொடரும் பயணத்தில், மகனின் மௌனம் அரவிந்த்சாமியை கலங்கடிக்கிறது. ‘நீ இதை இவ்வளவு சீரியஸாக எடுத்துக் கொள்வாய் என்று நினைக்கவில்லை’ என்றபடியே தன்னைப் பற்றி விளக்க முற்படுகிறார். அது என்ன என்பதையும், அதன் விளைவுகளையும் 90 நிமிடங்களில் சொல்கிற படம்தான் டியர் டாட்.

தீமை தான் வெல்லும் என்று தமிழில் ஸ்டைலிஷாக கலக்கிய அரவிந்த் சாமி ஹிந்தியில் 'மனோரஞ்சனாக' பரிணமிக்கிறார். தன் வாழ்வில் புதைந்திருக்கும் மர்மத்தை அவிழ்க்க முயலும் ஒரு தந்தையின் மன அவஸ்தையை தன் திறமையான நடிப்பால் தூக்கிச் சுமக்க முயல்கிறார். மகனின் காதலுக்கு தூது செல்ல ஏணியில் ஏறும் காட்சியாகட்டும், பிரின்சிபாலிடம் வாங்கிக் கட்டிக் கொள்ளும் இடமாகட்டும், காரில் மகனிடம் தன் பிரச்னையை கூற முயன்று பல்பு வாங்கும் இடத்திலும், வாவ்... வீ ஸ்டில் லவ் யூ மேன்!

மகனாக நடித்திருக்கும் ஹிமான்ஷு ஷர்மா இன்னும் கொஞ்சம் நடிப்புப் பழக வேண்டும். வழியில் காரில் ஏறிக் கொள்ளும் டிவி செலிபிரிட்டி அமன் உப்பல், ஒன்றிரண்டு காட்சிகளில்  கைதட்டலை அள்ளுகிறார்.


 

முதல் பாதியில் பெரும்பாலும் காருக்கு உள்ளேயும் காரை சுற்றியும் சுழலும் முகேஷின் கேமரா இரண்டாம் பாதியில் அந்த ஒற்றை அறைக்குள்ளேயே அடைபட்டுக் கொள்கிறது, மலை உச்சியிலிருந்து கிராமத்தை பதிவு செய்யும் போது மட்டும் தாயிடமிருந்து கைகளை விடுவித்துக் கொண்டு ஓடும் குழந்தை போல சுதந்திரமாக காட்சிகளை பதிவு செய்து கண்களுக்கு விருந்தளிக்கிறது. பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது. வழியில் பாதியில், ஹிமான்ஷு, அரவிந்த்சாமியை விட்டுவிட்டுச் செல்லும்போது ஒலிக்கிற பாடல் டச்சிங்.

இந்திய சினிமாக்களைப் பொறுத்தவரை 'அம்மா' சென்டிமென்ட் ஒர்க் அவுட் ஆகும் அளவிற்கு அப்பா சென்டிமென்ட் ஹிட் அடித்ததில்லை. அதற்கு இந்தப் படமும் விதிவிலக்கல்ல. தந்தைக்கும் மகனுக்கும் இடையே இருக்கும் பிணக்கு மற்றும் பாசத்தை உத்தமவில்லனில் பத்து நிமிட எபிசோடில் கமலஹாசன் கவிதை போல வர்ணித்திருப்பார். இதில் 90 நிமிடங்கள் கடந்த பின்னும் நாம் குடித்த டயட் 'கோக்'கின் ஏப்பம் மட்டும் தான் வருகிறது. படம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே சடாரென்று முக்கியமான விஷயத்தைத் தொட்டுவிட்ட பின்னாலும், படம் வேகம் எடுக்கவில்லை. காரின் கியரை அரவிந்த்சாமி எத்தனை மாற்றினாலும், காட்சிகளில் டாப் கியரைத் தொடமுடியவில்லை.

படத்தில் குறிப்பிட்டுச் சிலாகிக்கிற மாதிரியான எந்த ஒரு காட்சிகளும் இல்லை. அரவிந்த்சாமியின் ஸ்பெஷலான குறும்புப் புன்னகையையும் அவர் கொடுக்க முடியாமல் இருப்பதால், அவரது ரசிகர்களுக்கும் ஏமாற்றமே.

படத்தின் கருப்பொருள் என்ன என்பதில் இயக்குனர் தனுஜ் பிராமருக்கு குழப்பம் இருந்திருப்பதை, நத்தை போல் நகரும் திரைக்கதை உணர்த்துகிறது. தந்தை மகனுக்கான பாசப் போராட்டமா, குடும்ப சென்டிமென்டா, அல்லது ஒரு தனிமனிதனின் உணர்வுகளா என்ற தெளிவு இல்லை. ஒரு சிறிய குறும்படத்திற்கான ஒரு அழகான ஒன்லைனை வைத்துக் கொண்டு திருவிழா ஜவ்வு மிட்டாய் போல இழுத்து வணக்கம் போடும் போது நமக்கு சொல்லத் தோன்றுவது ஒன்றே ஒன்று தான்,

'டியர் டாட், பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்!”

-ஆனந்த் விஜயராகவன்

Don't miss this

Do you like the story?

Please Appreciate the Author by clapping!