கோடி ரூபாய் கொடுத்தாலும் தரமாட்டேன் - அமிதாப் ஓட்டிய ஸ்கூட்டருக்கு மவுசு!

ரிபு தாஸ்குப்தா இயக்கத்தில் அமிதாப் பச்சன், நவாசுதீன் சித்திக், மற்றும் வித்யா பாலன் நடிப்பில் ஜூன் 10ம் தேதி வெளியாக உள்ள படம் ‘டீன்’ . இப்படத்தில் அமிதாப்பச்சனின் நடிப்பும், கெட்டப்பும் அனைவராலும் ரசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எளிமையான கட்டம்போட்ட சட்டை, காக்கி பேண்ட், பழைய பஜாஜ் ஸ்கூட்டர் ஆகியனவற்றோடு இருக்கும்  அமிதாப்பின் தோற்றம் நம் ஆர்வத்தை அதிகம் தூண்டுகின்றன.

இந்தப் படத்தில் மிக முக்கிய பாத்திரமாக இந்த பழைய ஸ்கூட்டரும் இருக்கும் எனச் சொல்லப்படுகிறது. ஆனால் உண்மையாகவே இந்த ஸ்கூட்டர் அதன் உரிமையாளருக்கும் அவ்வளவு சிறப்பாம். இந்த ஸ்கூட்டர் உரிமையாளர் சுஜித் நாராயணன் படப்பிடிப்பிற்காக ஸ்கூட்டரைக் கொடுத்திருக்கிறார். படவிளம்பரங்கள் வந்த பிறகு அமிதாப் ஓட்டிய ஸ்கூட்டர் என்னும் புகழை அந்த ஸ்கூட்டர் பெற்றுவிட்டது. எனவே அதைச் சொல்லி ஸ்கூட்டரை விற்கலாம் எனக் கேட்டபோது கண்டிப்பாக முடியாது என நிராகரித்துள்ளார். இதற்கு படக்குழு ஒரு கோடி ரூபாய் கொடுக்கவும் முன்வந்துள்ளனர். ஆனாலும் வேண்டாம் என மறுத்துவிட்டாராம்.

இந்த ஸ்கூட்டர் குறித்து சுஜித் பேசுகையில், ”இது 20 வருடங்கள் பழைய ஸ்கூட்டர். நான் வாங்கும்போதே ஏற்கெனவே பயன்படுத்திய வண்டியாகவே வாங்கினேன். 13 வருடங்களுக்கு முன் இந்த வண்டியை நான் வாங்கினேன். இந்த வண்டியின் நீல கலர் படத்திற்கு பொருந்திப்போகவே வாங்கிச் சென்றார்கள். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.

இப்போது இந்த வண்டியை யாருக்கும் கொடுக்கும் எண்ணம் எனக்கு இல்லை. இதனை எனது வீட்டில் அமிதாப் பச்சனின் பெரிய அளவிலான புகைப்படத்துடன் வைத்துகொள்வேன். கோடி கொடுத்தாலும் அமிதாப் ஓட்டிய இந்த ஸ்கூட்டருக்கு ஈடாகாது. அதனால் விற்பனை என்னும் பேச்சுக்கே இடமில்லை” என நெகிழ்கிறார் ஸ்கூட்டர் உரிமையாளர்.

அமிதாப் பச்சன் ஸ்கூட்டரில் செல்லும் Te3n படத்தின் டிரெய்லர் இப்போது இணையத்தில் வைரலோ வைரலாகிக்கொண்டிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!