வெளியிடப்பட்ட நேரம்: 12:19 (20/06/2016)

கடைசி தொடர்பு:14:01 (20/06/2016)

வாவ்... அனுராக் காஷ்யபின் லைப்ரரியில் இவ்வளவு ஆச்சரியங்களா..?

'உட்தா பஞ்சாப்' படத்திற்காக சென்சாரிடம் போராடித் தோற்று, நீதிமன்றம் வரை போய் படத்தை வெளியிட்டார்கள் அதன் தயாரிப்பாளர்கள். அவர்களில் முக்கியமானவர் அனுராக் காஷ்யப்.  படம் ரெடி. வெள்ளியன்று ரிலீஸாகப் போகிறது என்கிற நேரத்தில் புதன் இரவு இணையங்களில் படம் வலம் வந்து கொண்டிருந்தது. யார் பரப்பினார்கள் என்று தெரியவில்லை. ப்ரின்டில், ‘Censor Copy' என்றிருந்ததால்  விவாதங்கள் எல்லாம் நடைபெற்றது. இந்நிலையில் அனுராக் காஷ்யப் முகநூலில் ஒரு நிலைத்தகவலை இட்டார்.


’நான் டோரண்டிலிருந்து எந்தப்படத்தையும் தரவிறக்கம் செய்ததில்லை. எப்படி செய்வதென்றும் தெரியாது. சில சமயங்களில் நண்பர்களிடமிருந்து தரவிறக்கம் செய்யப்பட்ட படங்களை வாங்கிப் பார்த்ததுண்டு. உடனேயே அந்தப் படத்தின் டிவிடியோ, ப்ளூ ரே-வோ காசு கொடுத்து வாங்கி நேர்செய்து விடுவேன். இதைச் சொல்வதன்மூலம், தரவிறக்கம் செய்து பார்க்கும் உங்கள் உரிமையைத் தடுக்க முடியாது. இந்தப் படத்திற்காக சென்சாரிடம் போராடியிருக்கிறோம். நீங்கள் தரவிறக்கம் செய்பவரானால், வேண்டாம் என்று சொல்ல இதை எழுதவில்லை. வழக்கமாய், வெள்ளிக்கிழமை படம் வந்து சனிக்கிழமைதானே அதைச் செய்வீர்கள்? இந்த சனிக்கிழமை வரை பொறுத்திருங்கள். வெள்ளியன்று படம் வரட்டும். அதன்பிறகு பணம் கொடுத்துப் பார்க்க முடியாது என்று நீங்கள் முடிவு செய்யுங்கள். இரண்டுநாள் பொறுங்கள்...’ என்கிறது அந்த நிலைத்தகவல்.

அதில் உடனே ஒருத்தர் கமென்ட் போடுகிறார்:


’ஒளறாதீங்க. நம்ம எல்லாருக்குமே பைரசி பிடிக்காது ஆனா அதைச் செய்வோம். நீங்க பண்ணினதில்லைன்னு சொல்லாதீங்க. நீங்க ஒரு நயவஞ்சகர்’
. இதற்கு அனுராக் பதில் போடுகிறார். ‘ஐயா... இந்த நாட்டிலேயே பெரிய ‘பெர்சனல் ஃப்லிம் லைப்ரரி’ வைத்திருப்பவன் நான்’

இதைப் படித்ததும் Andre Borges எனும் நிருபர் ஒருவருக்கு சந்தேகம் வருகிறது. ‘என்ன இருந்தாலும் ‘நாட்டிலேயே மிகப்பெரிய’ என்பதெல்லாம் உளறல்தான் என்று நினைக்கிறார். எப்படியோ அவரைத் தொடர்பு கொள்ள முயற்சிக்கிறார்.  தொடர்பு கொண்டதும் - அதிர்ஷ்டவசமாக - அனுராக், இவரை அழைக்கிறார். போய்ப் பார்த்தவர் பிரமிப்பில் ஆழந்துவிட்டாராம்.

அத்தனை பெரிய கலெக்‌ஷன் அனுராக் காஷ்யபிடம் இருந்திருக்கிறது. உலகத்திலுள்ள அனைத்து மொழி சினிமாக்களின் டிவிடி, ப்ளூ ரே என்று பல்லாயிரக்கணக்கானவைகளை அடுக்கி வைத்திருக்கிறார்.


‘பார்த்திருக்கிறேனா என்பதை விடுங்கள்.. அவற்றில் 77% படங்களைப் பற்றி நான் கேள்விப்பட்டதுகூட இல்லை. நிச்சயம் இவர் படங்களை தரவிறக்கம் செய்ததில்லை என்று நிரூபிக்க இதைச்செய்யவில்லை. ஆனால் இந்த மனிதன் சினிமாவிற்காக எக்கச்சக்கமாய் செலவு செய்கிற ஆசாமி என்பதை உணர்ந்தேன்’ என்கிறார் ஆண்ட்ரே.

அதனால்தான் அனுராக் காஷ்யப், போராடியாவது  உட்தா பஞ்சாப் போன்ற நேர்மையான, சமரசமற்ற படைப்புகளைக் கொடுக்கிறார்.


நன்றி: Andre Borges, BuzzFeed. 


 
  

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்