'நீங்க மன்னிப்பு கேட்கலையே? சினிமாக்காரங்கதான் கெடைச்சாங்களா?!' - மோடியிடம் கேள்வி கேட்ட இயக்குநர்


பாலிவுட்டின் பிரபல இயக்குநர் கரண் ஜோகரின் இயக்கத்தில் ஏ தில் ஹே முஷ்கில் #ADHM படம் படப்பிடிப்பு முடிவடைந்து தீபாவளி அன்று திரைக்கு வரத்தயாராக இருக்கிறது. ரன்பீர் கபூர், ஐஸ்வர்யா ராய் ஆகியோருடன் பாகிஸ்தான் நடிகர் ஃபவாத் கானும் நடித்துள்ளார். 

'உரி' அட்டாகிற்குப் பிறகு, பாகிஸ்தான் நடிகர்கள் மீதான பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது. படத்தில் பாகிஸ்தான் நடிகர் நடித்ததற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இயக்குநர் கரண் ஜோகர் வீட்டிற்கு முன்பு ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. பாகிஸ்தான் நடிகர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர். 

இந்நிலையில் கடந்த வெள்ளியன்று, COEAI (Cinema Owners Exhibitors Association of India) இந்தப் படத்தை திரையிட மாட்டோம் என அறிவித்துவிட்டது. ‘உரி’யில் நடந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரச்சினைகளைத் தவிர்க்கும் வண்ணம், மஹாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, கோவா ஆகிய மாநிலங்களில் இத்திரைப்படம் திரையிடப்படாது என்று திட்டவட்டமாக அறித்தது. 

இந்த முடிவுக்கு பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப், தன் அதிருப்தியை ட்விட்டரில் பகிரங்கமாக தெரிவித்திருக்கிறார். பிரதமர் மோடியிடம் ட்விட்டரில் கேள்விகேட்டிருக்கிறார். கடந்த டிசம்பரில் நவாஸ் ஷெரிஃபை சந்திக்க அவர் பயணித்ததைக் கேள்வி கேட்டிருக்கிறார்.

“உங்களைப் புண்படுத்துவது என் நோக்கமல்ல. கடந்த டிசம்பர் 25 அன்று நீங்கள் மக்களின் வரிப்பணத்தில் பாகிஸ்தான் சென்றீர்கள். அதே நாளில் கரண் ஜோகர், ஒரு தயாரிப்பாளரின் சொந்தப் பணத்தில் இந்தப் படத்தை ஷுட் செய்து கொண்டிருந்தார். நீங்கள் அன்று நவாஸ் ஷெரிஃபை சந்திக்கப்போனதற்கு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை’ என்று கேட்டிருக்கிறார்.  டிசம்பர் 25 அன்று நவாஸ் ஷெரிஃப் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.    

மேலும் நாம் எல்லா பிரச்னைகளையும் சினிமாக்காரர்களைக் குற்றம் சொல்லியும், படங்களைத் தடை செய்தும் தீர்க்க முயல்கிறோம்’ என்றிருக்கிறார். கரண் ஜோகருக்கு ஆதரவும் தெரிவித்திருக்கிறார். இந்தத் தொழிலுக்கு பாதுகாப்பு தேவை என்றும், கேள்வி கேட்பது என் உரிமைதான் என்றும் சொல்லியிருக்கிறார். எந்தப் பிரச்னை என்றாலும் தனது கருத்தை நேர்மையாக எடுத்துவைப்பதில் அனுராக் காஷ்யப் என்றைக்குமே தயங்கியதில்லை. சென்னை வந்திருந்தபோதுகூட, தயாரிப்பாளர்கள் பயத்தை விடவேண்டும், அப்பொழுதுதான் விருதுகளை அள்ளமுடியும் என்று மேடையிலேயே சொன்னவர் இவர்.  

அனுராக் காஷ்யப் மட்டுமல்லாது, ஓம் புரி, ஷ்யாம் பெனகல், சென்சார் போர்ட் தலைமையில் இருக்கும் பஹலஜ் நிஹானி உட்பட பலரும் இந்தத் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.
   

-சத்ரியன்
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!