போலீஸால் தேடப்படும் குற்றவாளி துர்கா ராணி சிங் யார் ?

குற்றம் சுமத்தப்பட்ட அந்தப் பெண்ணை போலீஸார் தேடிவருகிறார்கள். அதற்காக அந்த பெண்ணின் புகைப்படத்துடன் போஸ்டர்கள் வெளியிட்டுள்ளனர். குற்றவாளி துர்கா ராணி சிங்கிற்கு 36 வயதிருக்கும். 5.4 அடி உயரமுடைய அந்த பெண்ணை கடத்தல் மற்றும் கொலை செய்த குற்றங்களுக்காக தேடிவருகிறார்கள்.  அவரைப் பற்றி தகவல் தெரிந்தால் தொடர்பு கொள்ளுங்கள் என்று நேற்று வெளியான புகைப்படம் ஒரு நிமிடம் அனைவரையும் திடுக்கிடவும், பதறவைத்திருக்கும். நிமிடங்கள் தாண்டி எதார்த்தத்திற்கு திரும்பும்போது தான் புரிகிறது, அது வித்யாபாலனின் புகைப்படம். கஹானி 2ம் பாகத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் என்பது .

வித்யாபாலன் நடிப்பில்  2012 மார்ச் 9ல் வெளியானது கஹானி. லண்டனிலிருந்து, கணவனைத் தேடி கொல்கத்தா வருகிறார் வித்யாபாலன். கர்ப்பிணிப்பெண்ணான இவர் இந்தியாவில் சந்திக்கும் சட்ட சிக்கல்களும், பிரச்னைகளுமே கஹானி. ரிலீஸாகி வெற்றியையும் விமர்சகர்கள் மத்தியில் வரவேற்பையும் பெற்றது. முதல் பாகம் வெற்றியென்றாலே, அது இரண்டாம் பாகத்தின் நுழைவுச்சீட்டு என்று தானே அர்த்தம்.  இரண்டாம் பாகத்தையும் தயார் செய்துவிட்டார் இயக்குநர் சுஜாய் கோஷ். 

படத்தின் முதல்பார்வை போஸ்டரே படத்திற்கான வேறலெவல் அறிமுகத்தை கொடுத்துவிட்டது. இதனால் எதிர்பார்ப்பும் எகிறிக்கிடக்கிறது. துர்கா சிங்கை போலீஸ் தேடுவதற்கான காரணம் தான் என்ன, இவர் யாரைகொலை செய்தார் என்பதற்கான கேள்வியை முன்வைத்து போஸ்டர் வெளியாகியிருப்பது சிறப்பு. 

நவம்பர் 25ல் வெளியிடவிருப்பதாக முதலில் அறிவித்திருந்தனர். ஆனால், அதே நாளில் ஷாரூக், அலியாபட் நடித்த “டியர் ஜிந்தகி” வெளியாகவிருப்பதால், இரு படங்களுக்கும் வசூலில் எந்தப் பிரச்னையும் வரவேண்டாம் என்பதற்காக டிசம்பர் 2ல் ரிலீஸ் செய்ய முடிவெடுத்திருக்கிறார் தயாரிப்பாளர் ஜெயந்திலால், அதற்கு காரணமும் இருக்கிறது.  

“பல வருடங்களுக்கு முன்னரே எனக்கு ஜெயந்திலால் காடாவைத் தெரியும். நாங்கள் ஒரே குடும்பம். கஹானி 2 மற்றும் டியர் ஜிந்தகி என இரு படங்களுமே வித்தியாசமாக கதைக்களம். நிச்சயம் இரண்டுமே தனித்தனியாகத்தான் வெளியாகும். ஒன்று, மற்றொன்றுக்கு போட்டியாக என்றுமே வெளியாகாது” என்று அலியாபட் தந்தையான மகேஷ் பட் தெரிவித்திருந்தார். அதையே நிஜமாக்கி காட்டிவிட்டார் கஹானி பட தயாரிப்பாளர். 

முதல் பாகத்தின் மொத்த தயாரிப்பு செலவு 8 கோடி தான். ஆனால் 50 நாளில் மட்டும் 100 கோடி வசூல் சாதனையை நிகழ்த்தியது. தவிர 3 தேசிய விருதுகளையும், ஐந்து பிலிம்ஃபேர் விருதுகளையும் கைப்பற்றியது. த்ரில்லர் படங்களில் புது ட்ரெண்டை உருவாக்கியது இந்த கஹானி.  “இரண்டாம் பாகமும் நிச்சயம் புதுவித அனுபமாக இருக்கும்” என்கிறார் வித்யாபாலன். 

-பி.எஸ்.முத்து 

Don't miss this

Do you like the story?

Please Appreciate the Author by clapping!