கில்லாடி ரன்பீர்.. பத்திரிகையாளர் காத்ரினா கைஃப் துப்பறியும்.. ‘ஜக்கா ஜசூஸ்’ - படம் எப்படி?

ரோம்-காம், மியூசிக்கல், அட்வெஞ்சர் டிராமா எனக் கலவையான ஒரு ஜானரில் பயணிக்கிறது `ஜக்கா ஜசூஸ்' படம். சென்ற வருடம் ஹாலிவுட்டில் வெளியான `மோனா' படம் பார்த்திருக்கிறீர்களா? அதில் பெரும்பாலான வசனங்கள் பாடல்களாகவே இருக்கும். அதுபோன்ற ஒரு வகையில் அட்வெஞ்சர் படம் இருந்தால்..? 

ஜக்கா

வளர்ப்புத் தந்தை பக்சி (சாஸ்வதா சடர்ஜி) உதவியுடன் போர்டிங் ஸ்கூலில் படிக்கிறான் ஜக்கா (ரன்பீர் கபூர்). அவனின் தந்தை வேலைக்காக வெளிநாட்டுக்குச் சென்றாலும், ஜக்காவின் பிறந்த நாளன்று ஒரு வி.சி.ஆர் டேப் மூலம் பிறந்த நாள் வாழ்த்து அனுப்புவார். ரன்பீருக்கு சிறுவயதிலிருந்தே துப்பறியும் வேலைகளில் ஆர்வம் அதிகம். பள்ளியின் அருகில் நடக்கும் மர்மமான மரணம், `கொலையா... தற்கொலையா...' எனக் கண்டுபிடித்துச் சொல்லும் அளவுக்குக் கில்லாடி. பிறகு, ஸ்ருதி (கத்ரீனா கைஃப்) என்கிற பத்திரிகையாளருடன் இணைந்து, ஊரில் தொடர்ந்து நிகழும் மர்மமான மரணங்களைப் பற்றிக் கண்டுபிடிக்கிறார். வழக்கமாக, தன் பிறந்த நாளுக்கு வந்துவிடும் அப்பாவின் வி.சி.ஆர் டேப் வரவில்லை. பிறகுதான் அவர் இறந்துவிட்டதாகச் செய்தி வருகிறது. தந்தையின் மரணத்தை விசாரிக்க, ரன்பீர் கிளம்பும் பயணத்தில் கத்ரீனாவும் சேர்ந்துகொள்கிறார். அந்தப் பயணத்தில், உலகளவில் நடக்கும் சட்டத்துக்குப் புறம்பான ஆயுதக் கடத்தல் பற்றி தெரியவருகிறது. ஒரு பக்கம் அப்பாவைத் தேடி, இன்னொரு பக்கம் ஆயுதக் கும்பல் துரத்த என ஓட ஆரம்பிக்கிறார்கள் ரன்பீரும் கத்ரீனாவும். 

Jagga Jasoos

ரொமான்டிக் மியூசிக்கல் பார்த்துப் பழகியிருப்போம். சமீபத்தில் வந்த `பேபி டிரைவர்' படத்தில் மியூசிக்கல் ஆக்‌ஷன்கூட பார்த்தோம். இந்த முறை மியூசிக்கல் அட்வெஞ்சர். ஜக்காவுக்குத் திக்குவாய் பிரச்னை உண்டு. எனவே, மற்றவர்களிடம் சொல்ல நினைப்பதைப் பாட்டாகவே பாடிவிடுவார். அதையே கதை சொல்லும் கருவியாக எடுத்து, படத்தை நகர்த்துகிறார் இயக்குநர் அனுராக் பாசு. அமிதாப் பட்டாச்சார்யாவின் ரைமிங் வசனப் பாடல்கள் அமைந்திருந்தவிதமும் பாராட்டப்படவேண்டியது. அதற்குப் பக்காவாக அமைந்திருக்கும் ப்ரீத்தம் இசையும் கவர்கிறது. இந்த முறையில் ஒரு கதை சொல்லல், கூடவே ரவிவர்மனின் வசீகரமான ஒளிப்பதிவு படத்தை ரசிக்கவைக்கிறது. நிறைய சோர்வையும் தருகிறது.

Ranbir

ரன்பீரின் நடிப்பைப் பொறுத்தவரை `குறை' என ஒன்றுமில்லை. அவருக்கும் இந்த ரோல் கஷ்டமானதும் இல்லை. `டுட்டி ஃபுட்டி' என்பதைத் திக்கித் திணறியபடி `ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு' எனச் சொல்வதும், பேசுவதற்கு வசதியாக ஒரு தாளத்தைப் பிடித்துக்கொண்டு பாட்டாகப் பாடும்போது காட்டும் ரியாக்‌ஷன்களும் என க்ளாப்ஸ் அள்ளுகிறார். `ராக்ஸ்டார்', `பர்ஃபி'-யில் நடித்ததில் பாதி நடித்தாலே போதும் என சர்வசாதாரணமாக நடித்துவிட்டுப்போகிறார். ஹீரோயின் ரோல் என்பதைவிட, டிடெக்டிவ் டைப் கதைகளில் டிடெக்டிவுக்கு என அசிஸ்டென்ட் இருப்பார். அதுபோன்ற ரோல்தான் கத்ரீனாவுக்கு. ரன்பீருடன் போகிறார், வருகிறார், ஓடுகிறார், தாவுகிறார், ரன்பீர் திக்கும்போது, என்ன என மற்றவர்களுக்கு விளக்குகிறார். படம் முடிந்ததும் நன்றி வணக்கம் சொல்கிறார். ரன்பீரின் வளர்ப்புத் தந்தையாக வரும் சாஸ்வதா சடர்ஜி, ரன்பீரைத் துரத்தும் சௌரப் சுக்ளா என, சில கதாபாத்திரங்கள் மட்டும் நினைவில் நிற்கின்றன. 

ரன்பீரின் திக்குத் திக்கு பெர்ஃபாமன்ஸ், பாடல்களால் கதை நகர்த்துவது இவை தவிர, புதிதாக, சுவாரஸ்யமாக எதுவும் இல்லாததால் படம் பார்த்துக்கொண்டிருக்கும் உற்சாகமே குறைந்துவிடுகிறது. மொத்த கதையும் ரன்பீரின் சிறு வயது, பள்ளிக் காலம், அப்பாவைத் தேடும் பயணம் என மூன்று பகுதிகளாகப் பிரித்து அதற்கு அமைக்கப்பட்டிருந்த திரைக்கதை நல்ல ஐடியா.  `டின் டின்' காமிக்ஸ்போல வரிசையாக நடக்கும் சாகசங்களும் துப்பறியும் காட்சிகளுமாக விரிகிறது படம். ஆனால், பளிச் என நம்மை ஆச்சர்யப்படவைக்கும் ஒரு சம்பவமும் நடக்காமல், `ஓ பாட்டாவே பாடிட்டியா..!' எனப் பாடல்களால் நகர்த்தப்படும் காட்சிகளாக மட்டுமே இருப்பது பெரிய மைனஸ். 

வலுவான திருப்பங்களுடன் இன்னும் சுவாரஸ்யமான பயணத்தைக் கொடுத்திருந்தால், பக்கா ஹிட்டடித்திருப்பான் `ஜக்கா'.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!