பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்ஷன் சரிவு... ஷாரூக் படங்கள் தோல்வியடைவது ஏன்?

`பாலிவுட் பாட்ஷா', `லவ்வர் பாய்' என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் ஷாரூக்கின் சமீபகால படங்கள், பெரிய அளவில் வெற்றிபெறவில்லை. அதனால் பாக்ஸ் ஆபீஸிலும் தொடர்ந்து சுமாராகத்தான் கலெக்‌ஷன் ஆனது. இதற்கு உதாரணங்களாக, சமீபத்தில் வெளியான `ஜப் ஹாரி மெட் செஜல்', `ரயீஸ்' மற்றும் `டியர் ஜிந்தகி' ஆகியவற்றைச் சொல்லலாம். பாலிவுட்டில் எப்போதுமே ஷாரூக்குக்கு என தனி இடம் உண்டு. அவரது படங்கள், நிச்சயம் ஜாலி ரைடாகவே இருக்கும். நடிப்பில் சென்டிமென்ட்டும் நகைச்சுவையும் அவருக்கு பெரிதும் கைகொடுக்கும். இவைதான் ஷாரூக்கின் ப்ளஸ். அவரது உடல்வாகும் ஸ்டைலும் கூடுதல் பலம். இதனால் ரொமான்டிக் ப்ளஸ் ஆக்‌ஷன் படம் என்றால், ஷாரூக்குக்கு எப்போதுமே வெற்றிதான். ஆனால், இதுவரை அவருக்கு இருந்த வரவேற்பு தற்போது இல்லாததுக்கு என்ன காரணம்?

shah rukh khan

 

இந்த வருடம் மட்டுமல்ல, கடைசியாக பாக்ஸ் ஆபீஸைக் கலக்கிய ஷாரூக் கான் படம் என்றால், அது `சென்னை எக்ஸ்பிரஸ்'தான். 2013-ம் ஆண்டில் வெளியான இந்தப் படம் 230 கோடி ரூபாய் வசூல் செய்தது. அதற்குப் பிறகு வந்த ஃபரா கானின் `ஹேப்பி நியூ இயர்' 200 கோடி ரூபாய் ஈட்டியது. அதன் பிறகு வந்த படங்கள், வழக்கமாகப் பெறும் வரவேற்பைப் பெறவில்லை. 

2015-ம் ஆண்டில் பாலிவுட்டின் வெற்றி ஜோடிகளாகப் பார்க்கப்பட்ட ஷாரூக் கான் - கஜோலை வைத்து ரோஹித் ஷெட்டி `தில்வாலே' படத்தை எடுத்தார். பலத்த எதிர்பார்ப்புகளை இது கிளப்பியிருந்தாலும் 130 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்தது. அதன் பிறகு கெளரி ஷிண்டேவின் இயக்கத்தில் வெளியான `டியர் ஜிந்தகி' பெரும் வெற்றியைப் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. விமர்சனரீதியாகவும் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றிருந்தது. அந்தப் படத்தில் அலியா பட் நடிப்பும் பாராட்டப்பட்டது. ஆனால், ஷாரூக் கானுக்குக்கான படமாக அது இல்லை என்பதுதான், பாக்ஸ் ஆபீஸில் சுமாரான வசூலுக்குக் காரணம். அதாவது, 80 கோடி ரூபாய் மட்டுமே வசூலானது. பிறகு வெளிவந்த அவரது `பயோபிக் ஃபேன்' திரைப்படமும் சரியாக ஓடவில்லை. 85 கோடி ரூபாய் வசூல் செய்தது. 

கடைசியாக ஷாரூக் கான மெகா ஹிட் கொடுத்த `சென்னை எக்ஸ்பிரஸ்' படத்தில், பெரிய கதையெல்லாம் ஒன்றுமில்லை. பாலிவுட்டிலிருந்து தமிழ்ப் படங்கள் வரை பல படங்களின் காட்சிகளைக் கோத்து எடுத்த ஒரு மசாலா படம். அது ஈட்டிய தொகையோ 230 கோடி ரூபாய். ஆனால், தற்போதைய சூழலில் இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் அவசியமான ஒரு விஷயத்தைப் புரியவைக்க முயன்ற `டியர் ஜிந்தகி' படம் வெறும் 80 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்தது. 

படம் எப்படி இருக்கிறது என்பதைவிட, அதில் நடிக்கும் நடிகருக்கு அது பொருந்துகிறதா என்பதையே ரசிகர்கள் பார்க்கிறார்கள். ஷாரூக் கானை ரொமான்டிக்-ஆக்‌ஷன் ஹீரோவாகவே பார்த்துப் பழக்கப்பட்டுவிட்ட ரசிகர்கள், அவர் வெறுமனே வசனம் பேசிக்கொண்டிருப்பதை ரசிக்கத் தயாராக இல்லை என்பதுதான் உண்மை. `ரயீஸ்' படத்தில் அண்டர்வேர்ல்டு டானாக ஷாரூக் நடித்திருந்தாலும், அதில் அவரின் வழக்கமான அம்சங்கள் மிஸ்ஸிங். அவர் வாங்கவேண்டிய ஸ்கோர்களை எல்லாம் நவாஸுதீன் தட்டிச்சென்றார். பிரச்னை, அவரது நடிப்பில் இல்லை; அவர் தேர்ந்தெடுக்கும் கதையில்தான். தொடர்ந்து சராசரி மனிதன் போன்ற கதாபாத்திரங்களைக்கொண்ட கதைகளாகவே தேர்ந்தெடுத்து வருகிறார். ஆனால், அது அவருக்குக் கைகொடுக்கவில்லை. 

ரஜினிக்கு `லிங்கா'வும், `கோச்சடையா'னும் கொடுத்த தோல்வியைப்போலத்தான் ஷாரூக் கானுக்கும் அவரது சமீபத்திய படங்கள். ரஜினியின் `படையப்பா'வும், `லிங்கா'வும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான படங்கள் என்றாலும், இரண்டும் வெவ்வேறு காலகட்டங்களில் வெளியானவை. `படையப்பா'வை ஏற்றுக்கொண்ட மக்களால், `லிங்கா'வை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒரு நடிகன் தனது ஆரம்பகாலப் படங்களை எப்படி வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம். எல்லா ஜானர்களிலும் படங்களை நடிக்கலாம். எல்லாவிதமான கதாபாத்திரங்களிலும் நடிக்கலாம். ஆனால், சூப்பர் ஸ்டார் தரத்துக்கு உயர்ந்துவிட்ட பிறகு, தான் உருவாக்கியிருக்கும் பிம்பத்தைக் காப்பாற்றிக்கொள்ளவேண்டிய கட்டாயம் உண்டாகிவிடுகிறது. அவர்கள் தங்களின் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எப்படிப்பட்டதாக இருக்கிறது என்பதை அறிந்து படங்களைத் தேர்ந்தெடுக்கவேண்டிய நிலை உருவாகிறது. 

இதுதான் ரஜினிக்கும் ஷாரூக் கானுக்கும் நடந்திருக்கிறது. கலகலப்பான ரொமான்டிக்கான சென்டிமென்டான ஷாரூக் கானையே அவரது ரசிகர் வட்டம் விரும்புகிறது. ரஜினிக்கு ஒரு `கபாலி' கிடைத்தது, மீண்டு வந்தார். ஷாரூக் கானுக்கும் அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால்தான் அவராலும் மீண்டு வர முடியும். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!