Published:Updated:

"அக்‌ஷய், அனுராக், நவாஜுதீன்... கோலிவுட்டில் கலக்கவிருக்கும் பாலிவுட் பிரபலங்கள்!"

உ. சுதர்சன் காந்தி.

பாலிவுட் நடிகர்கள் பலர் கோலிவுட் படங்களில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அவர்களைப் பற்றிய கட்டுரை இது.

"அக்‌ஷய், அனுராக், நவாஜுதீன்... கோலிவுட்டில் கலக்கவிருக்கும் பாலிவுட் பிரபலங்கள்!"
"அக்‌ஷய், அனுராக், நவாஜுதீன்... கோலிவுட்டில் கலக்கவிருக்கும் பாலிவுட் பிரபலங்கள்!"

முன்பெல்லாம் ஒரு படம் வெளியாகி வெற்றிபெற்றால், 100-வது நாள், வெள்ளி விழா எனக் கொண்டாடுவார்கள். ஆனால், இப்போது படம் வெளியாவதே சாதனையாக இருக்கிறது. ஆனால், முன்பு இருந்ததைவிட இப்போது அதிகப்படியான தியேட்டர்களில் படங்கள் வெளியாவதால், வசூலில் பாதிப்பு எதுவும் இருக்காது (நல்ல படமாக இருந்தால்!). மற்ற மொழிகளில் பிரபலமான இருக்கும் நடிகர், நடிகைகளை தமிழ் படங்களில் நடிக்கவைத்தால், சம்பந்தப்பட்ட நடிகருக்காகவே அந்தந்த ஊர்களில் படத்தை ரசிப்பார்கள். வசூல் ரீதியாகவும் லாபம் கிடைக்கும் என்ற மார்கெட்டிங் உத்தியோடு இயங்கிவருகிறது, தமிழ்சினிமா. இம்முயற்சி, ஒருவகையில் தமிழ் சினிமாக்களை அடுத்தக்கட்டத்திற்கு அழைத்துச் செல்லவும் வாய்ப்பாக இருக்கிறது. 

உதரணத்திற்கு, ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்த படமாக இருந்தாலும் 'காலா'வில் நானா படேகரை ரஜினிக்கு வில்லனாக நடிக்க வைத்தது, சூர்யா - கே.வி.ஆனந்த் படத்தில் மோகன்லால் மற்றும் அல்லு சிரீஷை கமிட் செய்தது... என மற்ற மாநிலங்களில் தங்கள் படங்களுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கவேண்டும் என்பதை எதிர்பார்த்து இதுமாதிரியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இப்போது பல பாலிவுட் நடிகர்கள் தமிழுக்கு என்ட்ரி கொடுத்திருக்கிறார்கள். லிஸ்ட் இதோ! 

போமன் இராணி 

18 ஆண்டுகளாக பாலிவுட்டில் நடித்துவரும் போமன் இராணி, குணச்சித்திர கேரக்டர்களிலும் வில்லன் ரோல்களிலும் தனி இடத்தைப் பிடித்து கலக்கி வருகிறார். 'வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்' படத்தில் பிரகாஷ் ராஜ் நடித்த டீன் கேரக்டர், 'நண்பன்' படத்தில் சத்யராஜ் நடித்த வைரஸ் கேரக்டர் ஆகியவற்றின் அஸ்திவாரமே இவர்தான். பாலிவுட்டில் குணச்சத்திர வேடங்களில் புகழ்பெற்ற இவர், மராத்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் சில படங்கள் நடித்துள்ளார். தொடர்ந்து, கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, சாயீஷா நடிக்கும் படத்தில் முக்கியமான ரோலில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். ஏற்கெனவே, மோகன்லால், அல்லு சிரீஷ், சமுத்திரக்கனி ஆகியோர் உள்ளதால் இந்தப் படத்தில் இவருக்கு வில்லன் வேடமாக இருக்கலாம். 

அனுராக் காஷ்யப் 

குறும்படத்திலிருந்து சினிமா அல்லது சின்னத்திரையிலிருந்து சினிமா எனத் தனக்கான இலக்கை அடைந்தவுடன், அதில் தன்னை நிலைநிறுத்தப் போராடுவார்கள் சிலர். ஆனால், அனுராக் குறும்பட இயக்குநர், கதாசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர் எனத் தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட பிறகும், தொடர்ந்து, டிவி நிகழ்ச்சிகளை இயக்குவது, ஆவணப்படங்கள் தயாரிப்பது, குறும்படம் இயக்குவது, கூடவே நடிப்பது என ஆல்ரவுண்டராக ஜொலித்துக்கொண்டிருக்கிறார். பல முன்னணி நடிகர்களுக்கும் அனுராக் இயக்கத்தில் நடிக்கவேண்டும் என்பது கனவாக இருக்கிறது. முதல் முறையாக தமிழில் 'இமைக்கா நொடிகள்' படத்தில் நடித்திருக்கிறார். டிரெய்லரைப் பார்க்கும்போது, படத்தில் இவர் நடித்திருக்கும் 'ருத்ரா' கேரக்டர் மீதான ஆர்வம் அதிகரிக்கிறது.   

நவாஜுதீன் சித்திக்

அமீர்கானின் 'சர்ப்ரோஸ்' படத்தில் போலீஸிடம் அடிவாங்கும் கேரக்டரில் அறிமுகமாகி, சின்னச் சின்ன வேடங்களில் நடித்துவந்த நவாஜுதீனை அனுராக் காஷ்யப் தான் இயக்கிய 'பிளாக் ஃபிரைடே' படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கவைத்தார். அனுராக்கின் அடுத்தடுத்த படங்களில் முக்கியமான ரோலில் நடித்துப் புகழ்பெற்ற இவர், அனுராக் காஷ்யப்பின் ஃபேவரைட் நடிகர். எந்தக் கேரக்டரில் நடித்தாலும், அந்தக் கேரக்டருக்கு தன்னை நிலைநிறுத்திக்கொள்வதில் நவாஜுதீனுக்கு அதீத காதல். தன் எதார்த்த நடிப்பால் பாலிவுட்டில் தவிர்க்க முடியாத கலைஞராக இருக்கும் இவர், கார்த்திக் சுப்புராஜ் - ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகிக்கொண்டிருக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார். 

அக்‌ஷய் குமார்
 

பாலிவுட்டின் முன்னணி நடிகரான அக்‌ஷய் குமாருக்கு அறிமுகம் தேவையில்லை. இவர் ஷங்கரின் '2.0' படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்கிறார் என்பது ஊரறிந்த செய்தி. ஆரம்பத்தில் கமல், விக்ரம், அர்னால்ட் ஆகியோரில் ஒருவரை படத்தின் வில்லன் கேரக்டரில் நடிக்கவைக்கலாம் என முயன்ற படக்குழு, இறுதியில் அக்‌ஷய் குமாரை ஓகே செய்தது. வித்தியாசமான கெட்டப்பில் மிரட்டும் அக்‌ஷய் குமாரின் முழு ரெளடித்தனத்தைப் பார்க்க வெயிட்டிங்!

இவர்களைத் தவிர, சிவகார்த்திகேயன் நடிக்கும் சயின்ஸ் ஃபிக்‌ஷன் படத்தின் நடன இயக்குநராக பாலிவுட்டின் பரேஷ் சிரோத்கர் கமிட்டாகி உள்ளார். விஜய் சேதுபதியின் 'ஜுங்கா' படத்திற்குப் பாலிவுட் ஒளிப்பதிவாளர் டட்லி ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.