Published:Updated:

அலியா பட்டுக்கு ஷாருக் போல.. நம் வாழ்க்கைக்கு யார்? #DearZindagi படம் எப்படி?

விகடன் விமர்சனக்குழு
அலியா பட்டுக்கு ஷாருக் போல.. நம் வாழ்க்கைக்கு யார்? #DearZindagi படம் எப்படி?
அலியா பட்டுக்கு ஷாருக் போல.. நம் வாழ்க்கைக்கு யார்? #DearZindagi படம் எப்படி?

கைரா. கைராவை உங்களுக்கு நன்றாக தெரியும். பெற்றோர்களிடம் இருந்து இனம் புரியாத காரணங்களால் விலகியே இருப்பாள். நண்பர்களுடனே சுற்றுவாள். மனதுக்கு பிடித்த கிரியேட்டிவான வேலை யை செய்வாள். காதல், ரிலேஷன்ஷிப்பில் தடுமாற செய்வாள். நெருங்கி விலகுவாள். அழகாய் இருப்பாள். அவளை புரிந்துக் கொள்ள முயற்சி செய்யலாம். ஆனால், முடியாது. நமது உலகம் கைராக்களால் ஆனது. புரிந்துக்கொள்ள ஜஹாங்கீர் தேவை. ஆனால், நிஜத்தில் ஜஹாங்கீர் கிடையாது. அதை சினிமாவில் சாத்தியப்படுத்தி இருக்கிறார் கெளரி ஷிண்டே. இதை படித்துவிட்டு டிக்கெட் புக் செய்யலாம் என இருந்தால், புக் செய்துவிட்டு வந்து தொடருங்கள். Dear Zindagi, தவற விடக்கூடாத ஒரு படம். 

மும்பையில், ஒளிப்பதிவாளராக தனக்குப் பிடித்த வேலையை செய்து கொண்டிருக்கிறார் அலியா பட். சின்னச் சின்ன விளம்பரங்கள் செய்து கொண்டிருப்பவருக்கு ஒரு திரைப்படத்தை ஒளிப்பதிவு செய்ய வேண்டும் என்பது கனவு. ஒரு விளம்பரத்தின் தயாரிப்பாளரான, குணால் கபூரை இவருக்குப் பிடித்து விட, ஏற்கனவே காதலித்துக் கொண்டிருக்கும் அங்கத் பேடி-க்கு பை பை சொல்கிறார். ஆனால், குணாலிடமும் தெளிவாக தன் காதலைச் சொல்வதில்லை. ஒரு கட்டத்தில் அவரைப் பிரிந்துவிடுகிறார். குணாலுக்கு வேறொரு பெண்ணுடன் நிச்சயம் ஆகிவிட்டது என்று தெரிந்ததும் ஏமாற்றமடைகிறார். மும்பையிலிருந்து தனது ஊரான கோவாவுக்கு வருகிறார். பெற்றோருடனும் சரியான புரிதல் இல்லாமல் முறுக்கிக் கொண்டிருக்கும் அவர் பெரும்பாலும் தனது நண்பியின் வீட்டில்தான் கழிக்கிறார். 

ஒரு விளம்பர ஷூட்டிங்கிற்கு சென்ற இடத்தில் சைக்கியாட்ரிஸ்ட் ஷாருக்கானை சந்தித்து, அவரிடம் தனது பிரச்னைகளைச் சொல்கிறார். குறிப்பிட்ட நாள் வரை, தினமும் நேரமொதுக்கி அவருக்கு டிரீட்மெண்ட் வழங்குகிறார் ஷாருக். டிரீட்மெண்ட் நடந்து கொண்டிருக்கும்போதே, பாடகர் அலி ஜாபரை காதலிக்கத் தொடங்குகிறார். ஆனால் அவர் பாடிக்கொண்டே இருப்பது பிடிப்பதில்லை அலியாவுக்கு. ‘இதும் ஒத்துவரும் என்று தெரியவில்லை’ என்கிறார் ஷாருக்கிடம். அப்போதுதான் ஷாருக் கேட்கிறார்: ‘இதுவரைக்கும் எல்லா ரிலேஷன்ஷிப்பையும் நீதான் ப்ரேக் பண்ணிருக்க. அதுவா ப்ரேக் ஆகல. ஏன்... என்ன பயம் உனக்கு?”

அலியாவுக்கு வீட்டிலும் சரியான புரிதல் இல்லை. சகோதரனும், நண்பர்களும் மட்டுமே ஃப்ரெண்ட்லி. அதன்பிறகு தொடர்ந்து அவரிடம் பேசிப் பேசி, சில ஹோம் வொர்க்குகளைக் கொடுத்து அவரது பிரச்னைகளை அலசி சரி செய்கிறார். முடிவில் ஷாருக் மீது ஈர்ப்பு வருகிறது அலியாவுக்கு. என்ன செய்தார், உறவுச் சிக்கல்களை எப்படி சமாளித்தார் என்பதை முழுக்க முழுக்க வசனங்களாலே நிறைந்த படத்தின் மூலம் சொல்லியிருக்கிறார் கௌரி ஷிண்டே. 

உறவுச்சிக்கல்களை படமாக்குவதில் பாலிவுட் திரையுலகம் எப்போதும் ஸ்பெஷல்தான். கரண் ஜோகரின் ‘ஏ தில் ஹை முஷ்கில்’ படமும் உறவுச்சிக்கலைப் பேசும் படம்தான். ஆனால், டியர் ஜிந்தகி முழுக்க முழுக்க பெண்ணின் உறவுகளை, ஒரு பெண் எழுதி இயக்கியிருப்பதால் முக்கியத்துவம் பெறுகிறது. இயக்குநரை விடவும், வசனகர்த்தாவாக ஜெயித்திருக்கிறார் கௌரி. ‘உன்னுடைய இறந்தகாலம் மூலம் நீயாக, நிகழ்காலத்தை ப்ளாக்மெய்ல் செய்வதன்மூலம் எதிர்காலத்தைப் பாழக்க விடாதே’, ‘ஃப்ரெண்ட்ஷிப் இவ்ளோ ஈஸியா இருக்கு. ஆனா ரொமாண்டிக் ரிலேஷன்ஷிப் மட்டும் ஏன் இத்தனை சிக்கலா இருக்கு?’, ‘We are all our own teachers in the school of life’ என்று பல இடங்களில் போகிற போக்கில் வசனங்கள் கவனம் ஈர்க்கின்றன. 

கதாபாத்திரங்களை வடிவமைத்ததிலும் கௌரி சபாஷ் வாங்குகிறார். ஒழுங்காக இருப்பவற்றை கன்னாபின்னாவென்று வைப்பதன் மூலம் அலியாவையும், அதே கன்னாபின்னாவென்று தூக்கி எறியும் பொருட்களை கண்ணாடி, இண்டீரியர் டெக்கரேஷன் என்று ரீ சைக்கிள் செய்யும் ஷாருக்கையும் வடிவமைத்ததிலிருந்தே சொல்லலாம். 

நடிப்பில் உட்தா பஞ்சாபில் செஞ்சுரி என்றால், இதில் டபிள் செஞ்சுரியே அடித்திருக்கிறார் அலியா பட். Tweet This ‘நான் ரொம்ப வித்தியாசமானவளாக்கும்’ என்று உணர்த்துகிற உடல்மொழியையும், குடும்ப நண்பர்கள் முன் ‘அச்சச்சோ.. இவங்க கல்யாணத்த பத்தி பேசுவாங்களே’ என்று பதறும் உடல்மொழியையையும், நண்பர்களோடு இருக்கும்போது ஜாலியான உடல்மொழியையும், ஷாருக் முன் வேறு விதம் என பின்னியிருக்கிறார். இந்தப் பெண் தொடப்போகும் உயரங்களுக்கு இந்தப் படம் ஓர் ஆரம்பம். படம் ஆரம்பித்து 50 நிமிடங்கள் கழித்துதான் ஷாருக் எனும் நிலையில் அதுவரை படத்தை தன் தோளில் சுமக்கிறார் அலியா. ஷாருக்குக்கு இந்த மாதிரி கதாபாத்திரமெல்லாம் ஜஸ்ட் லைக் ஊதித்தள்ளுகிறார். ஆனால், ஜஹாங்கீர் என்னும் அவர் கதாபாத்திரம் அவ்வளவு முக்கியமானது. இந்தியப் பெண்கள் பலருக்கும் ஜஹாங்கீர் முக்கியமானதொரு வழிகாட்டி. அலியாவின் தோ ழியாகவரும் அந்தப் பெண்ணும், அலியாவும் தம்பியும் தனித்து தெரிகிறார்கள்.

 படத்தின் குறை என்று பார்த்தால் பெரும்பாலும் அலியாவைச் சுற்றி இருப்பவர்கள்  அட்வைஸ் செய்யும் டோனிலேயே பேசிக் கொண்டிருப்பதுதான். அதைப் போலவே, ஒரு பெண் என்ன முடிவு எடுப்பது என்று குழம்பிக் கொண்டே இருப்பதாய் இருக்கிறது படம்.அந்தக் குழப்பம் யதார்த்தம் என உணர்ந்துக் கொள்ள முடிந்தாலே படத்துடன் பயணிக்க முடியும்.

அமித் திரிவேதி பின்னணி இசையிலும் பாடல்களிலும் குறைவைக்கவில்லை. டீசரில்  இளையராஜா இசையில் வெளியான ‘ஏ ஜிந்தகி’ பாடலை படத்தில் காணவில்லை.

சிங்கப்பூர், பாம்பே என்று கலர்ஃபுல்லாய் காட்டிய லக்‌ஷ்மண் உடேகரின் கேமரா, கோவா வந்த பிறகு வெளிப்புறங்களை விடவும், ஷாருக் வீட்டைப் படமாக்கிய விதத்தில் சபாஷ் வாங்குகிறது.     

ஆட்டோகிராஃப், பிரமேம் பட சாயலில் இறுதியில் எல்லா காதலர்களும் சங்கமிக்கும் ஒரு விழாவில், புதிய ஒரு நட்பு துவங்க... முடிகிறது படம்.   

ரசிக்கலாம். சிரிக்கலாம். அழலாம். வாழ்க்கையை புரிந்துக் கொள்ளலாம்... டியர் ஜிந்தகி அத்தனைக்கும் வாய்ப்பு தருகிறது. வாழ்த்துகள் டீம்!