Published:Updated:

தங்கல் படத்துக்காக 30 கிலோ ஏற்றி இறக்கிய ஆமீர்கான் - வீடியோ ! #FATtoFIT

விகடன் விமர்சனக்குழு
தங்கல் படத்துக்காக 30 கிலோ ஏற்றி இறக்கிய ஆமீர்கான் - வீடியோ ! #FATtoFIT
தங்கல் படத்துக்காக 30 கிலோ ஏற்றி இறக்கிய ஆமீர்கான் - வீடியோ ! #FATtoFIT

ஆமீர்கானுக்கு வயது தற்போது 51  ஆகிறது. ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான 3 இடியட்ஸ் திரைப்படத்திற்காக அசல் கல்லூரி மாணவன் போல உடலை மாற்றியிருந்தார் ஆமீர்கான் . நல்ல உடற்கட்டுடன்  எப்போதும் ஃபிட்டாகவே  இருக்கும் ஆமீர் தற்போது தங்கல் திரைப்படத்திற்காக தொப்பை வைத்த, அப்பா கதாப்பாத்திரத்திற்காக சுமார் முப்பது கிலோ வரை உடல் எடையை  ஏற்றியிருக்கிறார். இது நடந்தது வெறும் நான்கு மாதங்களில். 

தங்கல் திரைப்படத்தின் கதை உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது. நம்மில் பலர் கீதா போகட், பபிதா குமாரி போன்ற பெயர்களை கேள்விப்பட்டிருக்கலாம், ஒரு சிலர் செய்தித்தாள்களின் ஓரத்தில் இடம்பெற்றிருக்கும் அந்த சாதனைச் செய்திகளை, படிக்காமலேயே கடந்து போயிருக்கலாம். சரி யார் இவர்கள்? 

காமென்வெல்த் போட்டிகளில் இந்தியாவுக்கு, மல்யுத்தத்தில் தங்கம் பெற்றுத் தந்த முதல் பெண் வீராங்கனை கீதா போகட். ஐம்பத்தைந்து கிலோ எடை பிரிவில் இந்தச் சாதனையை புரிந்தார் கீதா. இது நடந்தது 2010 ஆம் ஆண்டு காமென்வெல்த்தில் !

அடுத்த,  இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்ற இந்திய வீராங்கனையின் பெயர் பபிதா குமாரி. அதற்கடுத்த,  இரண்டே ஆண்டுகளில் அதாவது 2014 காமென்வெல்த் போட்டியில் இந்தியாவுக்காக தங்கம் வென்றதும் பபிதா குமாரி தான்.  கீதா போகட், பபிதா குமாரி  இருவரும் சகோதரிகள் என்பது நம்மில் பலருக்கு தெரிந்திருக்க  வாய்ப்பில்லை. 

இந்தியாவில்  பெண்களை விளையாட்டில் அனுமதிப்பது என்பதே அரிதான விஷயம் தான், அதிலும் மல்யுத்தம் போன்ற ஒரு விளையாட்டில் பெண்களை அனுமதித்து, அவர்களை சாதனையாளர்களாக உருவாக்குவது என்பது எந்தவொரு  பெற்றோருக்கும் கடினமான விஷயம். அதைச் செய்து முடித்தவர் தான் கீதா, பபிதாவின் தந்தையான மஹாவீர் சிங். இவரும் மல்யுத்த வீரர் தான் என்பது குறிப்பிடத் தக்கது. 

மஹாவீர் சிங்கின் வாழ்க்கையைத் தான்  தங்கல் எனும் படமாக எடுத்திருக்கிறார் நிதிஷ் திவாரி.  தயாரித்து, நடித்திருப்பது ஆமீர் கான். தூம்-3  திரைப்படத்தில் நடித்து முடித்திருந்த சமயத்தில் நிதிஷ், மஹாவீர் சிங்கின் கதையில் கதாநாயகனாக நடிக்க ஆமீர்கானை அணுகியிருந்தார். கிட்டத்தட்ட அறுபது வயது மதிப்புத்தக்க கதாப்பாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பதால் ஆமீர்கான் யோசித்தார், ஏற்கனவே  தனது வயதை விட குறைவான வயது கதாப்பாத்திர நாயகனாக திரையில்  தோன்றி அசத்திக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், இப்படி ஒரு ரிஸ்க் எடுக்க இன்னும் ஐந்து - பத்து வருடங்கள் தேவைப்படும் எனச் சொல்லியிருந்தார் ஆமீர்கான். ஆனால்  கதையின் கரு ஆமீரை தூங்க விட வில்லை, சில மாதங்கள் கழித்து மீண்டும் இயக்குனர் நிதிஷை அழைத்து கதைச் சொல்ல சொல்லியிருந்தார் ஆமீர். கதை கேட்டு முடித்தவுடன், நடிப்பது மட்டுமின்றி தானே தயாரிக்கவும் முன்வந்தார்  அமீர்கான். 

முதலில் தொப்பை வைத்த கதாப்பாத்திரத்துக்காக நடிக்க வேண்டும் என்பதால், நிறையச் சாப்பிட்டு, நான்கே மாதங்களில் தொப்பையும், தொந்தியுமாக வந்து நின்றார் ஆமீர். மஹாவீர் சிங்கின் அப்பா கதாபாத்திரம் பற்றிய காட்சிகள் எடுக்கப்பட்ட பின்னர், படத்தில்  குறைந்த நேரமே வரக்கூடிய இளம் மஹாவீர் சிங் கதாப்பாத்திரத்துக்காக தொப்பையில் இருந்து ஃபிட்டாகவும், அதே சமயம் இருபது வயது மல்யுத்த  வீரனாகவும் மாறினார் அமீர், அதைப் பற்றிய வீடியோ  தான் இது :- 

அப்பா கதாப்பாத்திரத்திற்காக கிட்டத்தட்ட 98 கிலோ ஆளாக மாறிய அமீர் கான், அதன் பிறகு அடுத்த சில மாதங்களில் கடும் உழைப்பால் ஃபிட்டான இளைஞனாக உருமாறினார். இந்த காலகட்டங்களில் அமீர்கான் கடுமையான டயட்டையும் கடைபிடித்தார். ஒருநாளைக்கு வெறும் 1800 கலோரி மட்டும் தான் உணவு. அதிலும் இனிப்புகள், சிம்பிள் கார்போஹைட்ரேட் போன்றவை இருக்காது, புரதச் சத்துள்ள உணவுகள் தான்  எடுக்க வேண்டும். குண்டாக இருந்து ஃபிட்டாக உருமாறிய அனுபவம் குறித்து அமீர் கான் இப்படிச் சொல்கிறார்

 " உடல் எடையை குறைப்பது எவ்வளவு கடினம் என்பதை உணர முடிந்தது, நாம் உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் உடற்பயிற்சி தீர்வு என நினைக்கிறோம், ஆனால நிஜத்தில் உடற்பயிற்சியை விடவும் முக்கியமானது கடுமையான டயட் தான், உணவில், உணவு முறையில் தகுந்த  டயட்டீஷியன்கள் உதவியோடு மாற்றம் செய்யாமல் உடல் எடையை குறைப்பது சாத்தியமற்றது".

சரி, ஆமீர்  ஏன் இவ்வளவு கஷ்டப்பட வேண்டும்? என்ன தான் கதை? 

கதை சிம்பிள் தான், அதை டிரைலரிலேயே சொல்லி விட்டார்கள். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் அவசியம் இந்தியர்கள் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய கதை  இது.

பதக்கம் பெற்றுத் தர வேண்டும் என நினைக்கும் ஆள் மஹாவீர் சிங், வயது கடந்து விட, தன்னுடைய பிள்ளைகளையாவது பதக்கம் பெற வைக்க வேண்டும் என ஏங்குகிறார் மஹாவீர். மல்யுத்தத்தில் சாதிக்க  ஆண் வாரிசு தான் வேண்டும் என நினைக்கிறார் மஹாவீர், ஆனால் நான்கு பெண் குழந்தைகள் பிறக்கின்றன. சரி கனவுகள் அவ்வளவுதான், என சோர்ந்திருந்த சமயத்தில், அவரது இரண்டு பெண்களுக்கும் இருக்கும் திறமை அவருக்கு ஒரு கட்டத்தில் தெரிய வருகிறது. இந்தியாவில் மல்யுத்தத்துக்கும், அதுவும் பெண்களுக்கு மல்யுத்தம் சொல்லித்தருவதற்கு போதிய அடிப்படை வசதிகளும் கிடையாது, நல்ல பயிற்சியாளர்களும் இல்லை, இந்தச் சூழ்நிலையில், மஹாவீர் , தானே தனது மகள்களை தயார் செய்து எப்படி சாம்பியன் ஆக்குகிறார் என்பது தான் மையக்கதை. 

- பு.விவேக் ஆனந்த்