Published:Updated:

``200 கோடி பிரமாண்டம், ஶ்ரீதேவியின் கடைசிப் படம், சாய்ரட் ரீமேக், சஞ்சய் தத் காதல்... `வாவ்' பாலிவுட் படங்கள்!" #Bollywood

சுஜிதா சென்

எதிர்பார்ப்பில் இருக்கும் பாலிவுட் படங்களைப் பற்றிய அறிமுகம்.

``200 கோடி பிரமாண்டம், ஶ்ரீதேவியின் கடைசிப் படம், சாய்ரட் ரீமேக், சஞ்சய் தத் காதல்... `வாவ்' பாலிவுட் படங்கள்!" #Bollywood
``200 கோடி பிரமாண்டம், ஶ்ரீதேவியின் கடைசிப் படம், சாய்ரட் ரீமேக், சஞ்சய் தத் காதல்... `வாவ்' பாலிவுட் படங்கள்!" #Bollywood

பாலிவுட் படங்கள் பிறமொழி ரசிகர்களையும் கவர்வதற்குக் காரணம், அவர்களின் கதைகளும், திரையில் காட்டப்படும் பிரம்மாண்டமும்தான். தமிழ் சினிமாக்கள் ரிலீஸாகும் எண்ணிக்கையைவிட பாலிவுட் சினிமாக்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாலோ, என்னவோ இவர்களின் படங்கள் எப்போதும் மோஸ்ட் வான்டட் படங்களாகவே இருக்கிறது. அடுத்து, ரசிகளால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் சில பாலிவுட் படங்களின் பட்டியல் இதோ...

தக்ஸ் ஆஃப் இந்துஸ்தான்  

19-ஆம் நூற்றாண்டில் வெளியான பிலிப் மெடோஸ் டெய்லர் எழுதிய, 'கன்ஃபெஷன் ஆஃப் அ தக்' ((Confession of the Thug) என்ற ஆங்கில நாவலை மையமாக வைத்து உருவாகிக்கொண்டிருக்கும் படம், 'தக்ஸ் ஆஃப் இந்தோஸ்தான்' (Thugs of Hindosthan). இதில், அமிதாப் பச்சன், அமீர்கான், கத்ரினா கைஃப், ரோனித் ராய் ஆகியோர் நடிக்கின்றனர். சுமார் 210 கோடி ரூபாய் பொருட்செலவில் உருவாகிக்கொண்டிருக்கும் இப்படம், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நடந்த பல மர்மமான சம்பவங்களுக்கு விடைகூறும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜோத்பூர், ராஜஸ்தான் மற்றும் தாய்லாந்து ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது. 1790-லிருந்து 1805-ஆம் ஆண்டு வரையில் நடந்த சம்பவங்களை மையமாகக்கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு 'சாய்ராட்' புகழ் அஜய்-அதுல் இசையமைக்கிறார். இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் எனத் தெரிகிறது. 

கோல்டு

சுதந்திர தினத்தன்று வெளியாகவிருக்கும் 'கோல்டு' (Gold) திரைப்படம், சுதந்திர இந்தியா முதல்முறையாக ஒலிம்பிக்கில் ஹாக்கி போட்டியில் தங்கம் வென்ற கதையைச் சொல்லவிருக்கிறது. 1948-ம் ஆண்டின் சிறந்த ஹாக்கி விளையாட்டு வீரரான சந்தீப் சிங் என்பவர்தான் அந்த ஆண்டு இந்திய ஹாக்கி அணியின் கேப்டனான இருந்தவர். இவரது கதாபாத்திரத்தில்தான் அக்‌ஷய் குமார் நடித்திருக்கிறார். 1948-ல் ஒலிம்பிக்கில் நடந்த பல உண்மைகளை மையப்படுத்தி 'கோல்ட்' படமாகியிருக்கிறது. 

மன்மர்ஸியான்

பல்வேறு குழப்பங்களுக்கு இடையில் தனது படப்பிடிப்பை நடத்தி வருகிறது, 'மன்மர்ஸியான்' (Manmarziyan) படக்குழு. ஆரம்பத்தில் சமீர் ஷர்மா இப்படத்தை இயக்கிக்கொண்டிருந்தார். படத்தின் தயாரிப்பாளரான ஆனந்த் எல்.ராய் படப்பிடிப்பு திருப்திகரமாக இல்லை என்று எல்லாவற்றையும் நிறுத்திவிட்டார். பிறகு, அஷ்வினி ஐயர் திவாரியை இயக்கக் கூறி கேட்டனர். அது சரிவராத காரணத்தினால், தற்போது இப்படத்தை அனுராக் காஷ்யப் இயக்கிவருகிறார். மேலும், துல்கர் சல்மான் நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தில் அபிஷேக் பச்சன் நடித்து வருகிறார். ரொமான்டிக் டிராமா ஜானரில் உருவாகிவரும் இப்படத்தில் அபிஷேக் பச்சனுக்கு ஜோடியாக டாப்ஸி நடித்துக்கொண்டிருக்கிறார்.  

தடக்

2016-ஆம் ஆண்டு வெளியான சாய்ராட் (Sairat) திரைப்படத்தின் ரீமேக்தான், தடக் (Dhadak). இப்படம் பெரிதளவில் எதிர்பார்க்கப்படுவதற்கு காரணம், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் இதில் ஹீரோயினாக நடித்திருப்பதும், 'சாய்ரட்' திரைப்படம் நல்ல விமர்சனத்தைப் பெற்றதோடு, 66-வது பெர்லின் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பெரும் ஆதரவைப் பெற்றதும்தான். மகாராஷ்டிராவில் இருக்கும் சமூகப் பிரச்னைகளில் ஒன்றான ஆவணக் கொலையை மையமாக வைத்து உருவான 'சாய்ரட்' படம் 2016-ஆம் ஆண்டு வெளியானது. பல எதிர்ப்புகள் வந்தாலும், இப்படம் வெற்றிகரமாகத் திரையிடப்பட்டு 110 கோடி ரூபாய் வசூலித்தது. தவிர, 50 கோடி வசூல் செய்த முதல் மராட்டிய திரைப்படம் என்ற சிறப்பையும் பெற்றது. 'சாய்ராட்' படத்தின் இந்தி ரீமேக்கான 'தடக்' படத்தை சஷாங் கைத்தான் இயக்கியுள்ளார். 

சஞ்ஜு

வருடத்திற்கு ஒரு படம் என்று நடிக்கும் ரன்பீர் கபூரின் அத்தனை படங்களும் சிறப்புதான். அப்படியாக, இந்த வருடம் வெளியாகவிருக்கும் திரைப்படம் 'சஞ்ஜு (Sanju)'. நடிகர், தயாரிப்பாளர் மற்றும் அரசியல்வாதியான சஞ்சய் தத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் திரைப்படமான இது, அவரது வாழ்வின் முக்கியமான மூன்று காலகட்டங்களைப் பற்றிப் பேசவிருக்கிறது. அதாவது, போதைக்கு அடிமையாகியிருந்தது, காதல், ஜெயில் வாழ்க்கை... இம்மூன்றும் இப்படத்தில் பிரதானமாக இருக்குமாம். ராஜ்குமார் ஹிரானி இயக்கியிருக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான், ரோஹன் ரோஹன், விக்ரம் மான்ட்ரோஸ், சன்ஜய் வந்த்ரேகர், அதுல் ரனிங்கா ஆகியோர் இசையமைத்துள்ளனர். 

ஜீரோ

ஷாருக்கான் நடிக்கும் 'ஜீரோ (Zero)' திரைப்படம் ரொமான்டிக் டிராமா ஜானரில் உருவாகும் படம். இதில் ஷாருக்கானுடன் கௌரவத் தோற்றத்தில் சல்மான் கான், கத்ரினா கைஃப் மற்றும் அனுஷ்கா ஷர்மா ஆகியோர் நடித்துவருகின்றனர். இதில், அனுஷ்கா ஷர்மா மனநலம் பாதிக்கப்பட்டவராக நடிக்கிறார். கௌரவ வேடத்தில் ஶ்ரீதேவி நடித்த இந்தப் படம்தான், அவரின் கடைசிப் படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தீபிகா படுகோன், கஜோல், ராணி முகர்ஜி, கரிஷ்மா கபூர், ஜூஹி சாவ்லா எனப் பலரும் இப்படத்தில் சிறப்புத் தோற்றதில் நடித்திருக்கிறார்கள். வருகிற டிசம்பர் மாதத்தில் இப்படம் வெளியாகவிருக்கிறது.