Published:Updated:

`மகனும் மகளும் செய்ததில்லை; நீதான் செய்கிறாய்...!' - கரீனா கபூரை மெச்சிய மாமியார்

கரீனா கபூர், ஷர்மிளா தாகூர்
கரீனா கபூர், ஷர்மிளா தாகூர் ( www.instagram.com/dotheishqbaby )

``புகழ் பெற்ற நடிகை என்பதை மறந்துவிட்டு, எங்கள் குடும்பத்தின் துக்கத்தில் பங்கு கொண்டாய். அப்போதே நான் உன்னை, என் குடும்பத்தில் ஒருத்தியாக நினைத்துவிட்டேன்.''

'மாமியார் மெச்சிய மருமகள்' என்பது இன்றைக்கும் 'நிஜமாகவா..?' ரக விஷயம்தான். தன்னுடைய சாட் ஷோவில், தன் மாமியாரின் வார்த்தைகளாலேயே இதை நிஜப்படுத்தியிருக்கிறார் கரீனா கபூர் கான்.

இஷ்க் ரேடியோ சேனலில் 'வாட் விமன் வான்ட்' (what women want) என்கிற சாட் ஷோவை நடத்தி வருகிறார் கரீனா கபூர். இந்த நிகழ்ச்சியில் சன்னி லியோன், மலைக்கா அரோரா, டாப்சி பன்னு, கரிஷ்மா கபூர், தன் கணவர் சயிஃப் அலிகான் என்று பலருடனும் உரையாடியவர், தன் மாமியார் ஷர்மிளா தாகூரையும் அழைத்திருந்தார். அந்த நிகழ்ச்சியில்தான் மாமியார் மெச்சிய மருமகள் தருணம் கரீனா கபூருக்கு நிகழ்ந்திருக்கிறது.

கரீனா கபூர் - சயிஃப் அலிகான்
கரீனா கபூர் - சயிஃப் அலிகான்
www.instagram.com/therealkareenakapoor

''என் மகன் சயிஃப் என்னுடைய டெக்ஸ்ட் மெசேஜ்களுக்கு எப்போதாவதுதான் பதிலளிப்பான். என் மகள் சோஹா அலிகான்கூட என் மெசேஜ்க்கு உடனே பதில் அனுப்ப மாட்டாள். ஆனால், நீ மட்டும்தான் என் மெசேஜ்களுக்கு உடனடியாகப் பதில் அனுப்புவாய். உன்னுடைய இந்த இயல்பு எனக்கு மிகவும் பிடிக்கும்'' என்று மருமகளைக் கொண்டாடியிருக்கிறார் ஷர்மிளா தாகூர்.

''நான் உங்கள் வீட்டுக்கு வருகிறபோதெல்லாம், எனக்குப் பிடித்த சமையலை கேட்டுக் கேட்டு சமைத்துக்கொடுத்திருக்கிறாய். அந்தத் தருணங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்'' என்று நெகிழ்ந்தவர்,

''சிலர் தங்களுடைய இயல்புகளால் தங்களைச் சுற்றியிருப்பவர்களை வருத்தப்பட வைத்துவிடுவார்கள். நீ என்றுமே அப்படி நடந்துகொண்டதில்லை. இந்த இயல்பை உன் வாழ்க்கையில் என்றுமே விட்டுவிடாதே'' என்று ஓர் அன்பு வேண்டுகோளையும் தன் மருமகளிடம் வைத்திருக்கிறார்.

கரீனா கபூர், ஷர்மிளா தாகூர்
கரீனா கபூர், ஷர்மிளா தாகூர்
www.instagram.com/dotheishqbaby

நிகழ்ச்சியின் ஹைலைட்டாக, ''என் கணவர் பட்டோடி எங்களைவிட்டுச் சென்ற தினத்துக்கு முந்தைய தினம்தான் உன்னுடைய பிறந்த நாள். அந்தக் கொண்டாட்ட நினைவுகளைப் புறந்தள்ளிவிட்டு, புகழ் பெற்ற நடிகை என்பதையும் மறந்துவிட்டு, எங்கள் குடும்பத்தின் துக்கத்தில் பங்கு கொண்டாய். அப்போதே நான் உன்னை, என் குடும்பத்தில் ஒருத்தியாக நினைத்துவிட்டேன்'' என்று நெகிழ்ந்திருக்கிறார் ஷர்மிளா தாகூர்.

டச் வுட்!

அடுத்த கட்டுரைக்கு