Published:Updated:

இது, அனைவரும் பகிர்ந்துகொள்ளவேண்டிய லன்ச் பாக்ஸ்! #FourYearsOfLunchBox

இது, அனைவரும் பகிர்ந்துகொள்ளவேண்டிய லன்ச் பாக்ஸ்! #FourYearsOfLunchBox
இது, அனைவரும் பகிர்ந்துகொள்ளவேண்டிய லன்ச் பாக்ஸ்! #FourYearsOfLunchBox

சினிமாவில் யதார்த்தவாதத்தோடு ஒன்றிபோய் நுண்ணர்வுகளைக் கலையாக்கிச் சொல்லும் படைப்புகள் வருவது மிக அரிது. அப்படியாக இந்திய சினிமாவின் முக்கியப் படைப்பாக வந்தது, `லன்ச் பாக்ஸ்' (Lunch Box). இந்தியச் சமூகம் - இந்தியப் பெருநகர வாழ்க்கையைப் பற்றிய மிகச்சிறந்த பதிவுகளில் இந்தப்படத்துக்கு முக்கிய இடமுண்டு.

மும்பையின் அரசு அலுவலகம் ஒன்றில் குமாஸ்த்தாவாக வேலைசெய்கிறார் சாஜன் ஃபெர்னாண்டஸ் (இர்ஃபான் கான்). அவர், மனைவியை இழந்து... குழந்தைகளின்றி தனியே வாழ்ந்துவருகிறார். இன்னும் ஒரு மாதத்தில் ஓய்வுபெறப்போகும் அவருக்குபதில் அந்த வேலையை ஏற்கவும் பயிற்சிப் பெறவும் வருகிறார் ஷேக் (நவாஸுதின் சித்திக்). 

இன்னொருபுறத்தில், தன் கணவனுக்காக மேல் வீட்டு ஆன்ட்டியின் ஆலோசனைப்படி மதிய உணவு சமைத்து, அதை தன் கணவன் அலுவலகத்துக்கு `டப்பா வாலா' மூலம் அனுப்பிவைக்கிறாள் இலா (நிம்ரத் கவுர்). இவர், யாஷ்வி என்கிற குழந்தைக்குத் தாயான முப்பது வயது மதிக்கத்தக்க பெண்.

அந்த `லன்ச் பாக்ஸ்' தவறுதலாக சாஜனிடம் போய்விடுகிறது. மெஸ்ஸிலிருந்து வழக்கமாக வரும் உணவு (சாஜனுக்கு, மெஸ்ஸிலிருந்து மதிய உணவு வரும்) இன்று சுவையாக இருப்பதைக் கண்டு மகிழ்கிறார். லன்ச் பாக்ஸ் காலியாகத் திரும்பி வந்தது, இலாவுக்கு உற்சாகமளிக்கிறது. வீடு திரும்பிய கணவனிடம் விசாரிக்கையில்தான் தெரிகிறது, தவறான விலாசத்துக்கு லன்ச் பாக்ஸ் சென்றிருப்பது.

`யாரோ ஒருவராவது தன் சமையலை ருசித்துச் சாப்பிட்டிருக்கிறாரே!' என்ற மனதிருப்தியில், அடுத்த நாளும் மதிய உணவு அனுப்புகிறாள், ஒரு கடிதத்தோடு! அந்தக் கடிதத்திலிருந்து மலர்கிறது இருவரின் உரையாடலும் உறவும்.

இருவருக்குமிடையிலான கடிதப் போக்குவரத்தில், இலா - சாஜன் இருவரும் என்னவெல்லாம் பகிர்ந்துகொண்டார்கள் என்பதில் நீள்கிறது கதை. கடைசியில், தன் கணவனைப் பிரிந்து குழந்தையுடன் பூட்டானில் வாழப்போவதாக இலா முடிவெடுக்கிறாள். சாஜன், நாசிக் செல்வதைத் தவிர்த்துவிட்டு, டப்பாவாலாக்கள் உதவியோடு ரயிலும் பாடலுமாக இலாவைத்தேடி வருவதோடு லன்ச் பாக்ஸ் நிறைகிறது.

நிஜத்தில் கடக்கும் தருணங்களை யதார்த்தத்தன்மையில் காட்சிப்படுத்திய ஒளிப்பதிவு - மைக்கேல் சைம்மண்ட்ஸ், உணர்வால் மட்டுமே உணர முடிகிற இசை - மாக்ஸ் ரிச்செர், படத்தின் இயல்பைப் பூர்த்திசெய்த படத்தொகுப்பு - ஜான் லியொன் மற்றும் எழிலோடிய எழுத்தும் இயக்கமும் - ரித்தேஷ் பத்ரா என அருமையான திரையாக்கம்.

ஆரம்பத்தில் நெருடலுடனான நட்பில் ஷேக்கிடம் (நவாஸுதின் சித்திக்) தொடர்ந்தாலும், ஒருகட்டத்தில் சாஜன் - ஷேக் இருவரும் வெளிக்காட்டிக்கொள்ளத பரஸ்பரமும் ஆறுதலும் பகிர்ந்துகொள்கிறார்கள். வெறும் குரல் மட்டுமே கொடுக்கும் மேல் வீட்டு தேஷ்பாண்டே ஆன்ட்டியுடன் இலா வைத்திருக்கும் புரிதலும் அழகானதாகவே காட்டப்பட்டிருக்கும். 

பதினைந்து வருடக் கோமாவிலிருந்து எழுந்தும் பழைய ஓரியன்ட் மின்விசிறியிடம் விழித்திருப்பதில் தன் வாழ்வைக் கழித்துக்கொண்டிருக்கும் தேஷ்பாண்டே அங்கிள், மனைவியைத் தவிர வேறு ஒருவரோடு தொடர்புவைத்துள்ள இலா, இன்னொரு குழந்தை கேட்கையில் உதாசீனப்படுத்தும் இலாவின் கணவன் ராஜீவ், தன் பாரம்பர்யத்தை விட்டுக்கொடுக்காது வாதாடும் டப்பாவாலா... என ஒவ்வொரு கதாபாத்திரமும் உளவியல் வடுக்களாகவே படத்தில் பதிந்துள்ளனர்.

கணவன் இறந்துகிடக்கும் தருணத்தில் தன் வாழ்க்கை இத்தனை காலமும் எப்படிப்போனது என்று புரியாது, `இப்போது நான் பசியோடு மட்டுமே இருக்கிறேன்' என்று சொல்லும் இலாவின் அம்மா கதாபாத்திரமும் சரி, எந்த நேரமும் படுக்கையில் கிடக்கும் கணவனுக்கு டையபர் மாற்றிவிடுவத்தில் கவனம் காட்டும் மேல் வீட்டு தேஷ்பாண்டே ஆன்ட்டி கதாபாத்திரமும் சரி, தன்னிருப்பு (Self-Existence) குறித்து அடிமனதில் கீரிட்டுக்கொண்டே இருக்கும்.

இலா - கதாபாத்திரம், வாழ்க்கையின் பிடிப்பின்றி ஏதோ இனம்புரியாத ஒன்றுக்கு ஏங்கிக்கொண்டிருக்கும் பெண்களின் அடையாளம். நிம்ரத் கவுர் அதில் வாழ்ந்திருப்பார். நவாஸுதின் சித்திக் கதாபாத்திரமும் சமூக வரைவியலில் சேர்ந்துகொள்ள துடித்துக்கொண்டே இருக்கும்.

இர்ஃபான் கான் பால்கனியில் தனியே நின்றபடி சிகரெட் புகைக்கும் காட்சியும், அலுவலகத்தில் வேலைபார்க்கும் காட்சித் தொகுப்புகளும் எட்வர்டு ஹோப்பர் (Edward Hopper) ஓவியங்களான `சண்டே'(Sunday) , `ஆபீஸ் இன் எ ஸ்மால் சிட்டி' (Office in a Small City) போன்றவற்றின் காட்சிப் படிமங்களாகப் பதிந்துவிடுகின்றன.

படத்தின் நடுவில் ஷேக் சொல்லி, இறுதிக்காட்சியில் இலாவும் சொல்லி முடிக்கும் வசனம் ஒன்று உண்டு. `Sometimes the wrong train will get you to the right station.' உண்மையில் இந்த வசனத்தின் அடிநாதத்தில்தான் பிரபஞ்சம் முழுவதும் அடங்குவதாகத் தோன்றும்.

`லன்ச் பாக்ஸ்'ஸின் ஒவ்வொரு கதாபாத்திரமும் நவ - தத்துவார்த்த விசாரணைகளை வாழ்வில் அன்றாடம் நடத்திக்கொள்கிறது.