Published:Updated:

டாப்-5 பாலிவுட் படங்கள் 2017

டாப்-5 பாலிவுட் படங்கள் 2017
டாப்-5 பாலிவுட் படங்கள் 2017

5.சிம்ரன்

சிம்ரன் மிக சுதந்திரமான கைதி. கைதி என்பதற்கு காரணம், தானாக என்னென்னவோ செய்ய நினைத்து அது சொதப்பியதும் வீட்டுக்கு வந்து சரண்டர் ஆகிவிடுவார் என்பது. சிக்கல் ஒன்றில் மாட்டிக் கொண்ட பின் அதை சரி செய்ய எடுக்கும் முடிவும், செய்யும் வேலையும் படு சுவாரஸ்யம். கூடவே இது நிஜமாக நடந்த சம்பவம் என்பதால் சிம்ரன் மேல் சின்ன பரிதாபம் கூட வரலாம். ஆனால், பரிதாபத்தை மீறி அந்த கதாபாத்திரத்தில் நிலை உங்களை சிரிக்க வைக்கும் படி கதை சொல்லியிருப்பார் இயக்குநர் ஹன்சல் மெஹ்தா. அப்பறம், கங்கனா பற்றி சொல்ல வேண்டும் என்றால் தனி கட்டுரை தேவைப்படும். 

4.ஹிந்தி மீடியம்

பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ரிசர்வேஷனில் நடக்கும் குளறுபடிகள், கல்வி நிலை போன்றவற்றை ஒரு குடும்பப் பின்னணியை வைத்து கூறியிருந்தது ஹிந்தி மீடியம். ராஜ் மற்றும் மீட்டா தங்கள் மகளை நகரத்தில் டாப் பள்ளியில் சேர்க்க செய்யும் வேலைகளை காமெடி கலந்து கொஞ்சம் யோசிக்க வைக்கும் விஷயங்களையும் சொல்லியிருந்தார் இயக்குநர் சகேத் சௌத்ரி. க்ளைமாக்ஸில் இர்ஃபான் கான் மேடை ஏறி பேசும் பேச்சு உட்பட படம் முழுக்க நடிப்பில் அசத்தியிருப்பார்.

3.சீக்ரெட் சூப்பர்ஸ்டார்

மகள் படிக்காததற்கு அவளுடைய கிடார் பொழுது போக்குதான் காரணம் என கிட்டார் ஸ்ட்ரிங்ஸை அறுத்தெறியும் அப்பா, "யூட்யூப்-லயாவது பாட்டுப் பாடறேனே" என சொன்னால், "பர்தா அணிந்து பாடு" என சொல்லும் அம்மா இப்படியான குடும்பத்திலிருக்கும் இன்ஸியா மாலிக் எப்படி தன் கனவை அடைகிறாள் என்பதுதான் `சீக்ரெட் சூப்பர்ஸ்டார்' படம். கொஞ்சம் நாடகத்தன்மை இருந்தாலும், எத்தனை முறை விவாதித்தாலும் முற்றுப் பெறாத, பெண்களின் கனவுகள், அதை அவர்கள் நிறைவேற்றிக் கொள்வதில் இருக்கும் சிக்கல்கள் பற்றி பேசியிருப்பதால் குறிப்பிட வேண்டியதாகிறது. 

2.லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா

கணவனுக்குத் தெரியாமல் வேலைக்கு சென்று கொண்டிருப்பவர் ஷிரின். கூடவே பதவி உயர்வு கிடைத்ததும் கணவரிடம் சம்மதம் வாங்கி செல்லலாம் எனக் காத்திருக்கிறார். மைலி சைரஸ் போல மேடையை அதிரடிக்கும் பாடகியாக ஆசை ரெஹனாவுக்கு. ஆனால், குடும்பத்தில் பர்தா போடாமல் வெளியில் செல்லக் கூட அனுமதி கிடையாது. லீலாவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்திருக்கிறது. அவளது காதலனுடன் பாலியல் தொடர்பு வைத்திருந்த வீடியோவைப் பார்த்துவிடுகிறான் வருங்காலக் கணவர். உஷா வெளியில் மிகக் கரடுமுரடாகக் காட்டிக் கொண்டாலும், சிலிர்ப்புக் கதைகள் படிப்பதில் ஆர்வம் கொண்டவர். 50 வயது தாண்டிய இவரது வாழ்வில் ஒரு காதலன் வருகிறான். இந்த நான்கு பேரை சுற்றி நகரும் கதை, இறுதியில் இந்த நால்வரும் ஒரு அறையில் சந்திப்பதில் முடியும். பெண்களில் பாலியல் சுதந்திரம் குறித்து மிக வெளிப்படையாகப் பேசியதற்காக சர்ச்சைகளை சந்தித்தது படம்.  

1.டெத் இன் த கன்ஜ்

முகுல் ஷர்மா எழுதிய சிறுகதையைத் திரைப்படமாக்கி `டெத் இன் த கன்ஜ்' ஆக இயக்கியிருந்தார் கொங்கனா சென் ஷர்மா. படமும் மிகப் பொறுமையகா ஒரு சிறுகதை படித்த உணர்வைக் கொடுத்தது. நம்மை சுற்றி நிறைய பேர் இருப்பார்கள். ஆனால், அவர்களுக்கு நாம் இருப்பது, இல்லாமல் போவது இரண்டுமே ஒன்றுதான் என்ற உணர்வு. அப்படி ஒரு மனநிலை வந்தால் அது எப்படி இருக்கும்? அவன் என்னவெல்லாம் செய்வான்? இப்படியான நிலையில் இருக்கும் ஷுட்டூ, புத்தாண்டைக் கொண்டாட அவனையும் அழைத்து வந்திருக்கும் அவனது குடும்பத்தினர்கள், இவர்களுக்குள் நிகழும் எல்லாமும்தான் படம். கண்டிப்பாக படம் மறக்க முடியாத அனுபவத்தைத் தரும்.