Published:Updated:

‘பத்மாவதி - அலாவுதீன் கில்ஜி கனவுக் காட்சிகள் இல்லை..!’ - சென்சார் டு சரண்டர் ‘பத்மாவத்’ பயணம்

‘பத்மாவதி - அலாவுதீன் கில்ஜி கனவுக் காட்சிகள் இல்லை..!’ - சென்சார் டு சரண்டர் ‘பத்மாவத்’ பயணம்
‘பத்மாவதி - அலாவுதீன் கில்ஜி கனவுக் காட்சிகள் இல்லை..!’ - சென்சார் டு சரண்டர் ‘பத்மாவத்’ பயணம்

‘பத்மாவதி - அலாவுதீன் கில்ஜி கனவுக் காட்சிகள் இல்லை..!’ - சென்சார் டு சரண்டர் ‘பத்மாவத்’ பயணம்

படப்பிடிப்பு தளம் எரிப்பு, நடிகர்களுக்கு கொலை மிரட்டல், இயக்குநர் மீது தாக்குதல்... இப்படி பல பிரச்னைகளை கடந்து, வரும் 25ம் தேதி வெளியாகிறது ‘பத்மாவத்’ திரைப்படம். தீபிகா படுகோன், ஷாஹித் கபூர், ரன்வீர் சிங் உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை சஞ்ஜய் லீலா பன்சாலி இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படம் இவ்வளவு எதிர்ப்புகளை சந்திக்க காரணம் என்ன?

சர்ச்சைகளும் சஞ்சய் லீலா பன்சாலியும்!

1942 - ஏ லவ் ஸ்டோரி, தேவ்தாஸ், ப்ளாக், சாவாரியா, பாஜிராவ் மஸ்தானி... இப்படி சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய திரைப்படங்களை பட்டியலிட்டாலே அவருடைய சினிமாக்களின் தன்மை நமக்கு பிடிபட்டுவிடும். வரலாற்று சம்பவங்கள், அதை மையமாகக்கொண்ட இலக்கியங்கள்... இவைதான் பன்சாலியின் டார்கெட். இவரின் முந்தைய படமான, ‘பாஜிராவ் மஸ்தானி’ படம் மராத்திய தளபதி பாஜிராவுக்கும் ராஜபுத்திரர்களின் அந்தப்புர இளவரசியான மஸ்தானிக்கும் இடையிலான காதலை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட படம். அதில் வரலாற்று தவறுகள் இருப்பாதாகக் கூறி மராத்திய பேஷ்வா அமைப்பினர் படத்துக்கு தடைக் கோரினர். பாஜிராவ் மஸ்தானி 'ராவ்' என்னும் நாவலை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. 

அந்த வரிசையில் பன்சாலி அடுத்து இயக்கியுள்ள படம்தான் ‘பத்மாவத்’. இதுவும் கொஞ்சம் வரலாறும் நிறைய புனைவுகளும் கலந்த கதைதான். 1540-ம் ஆண்டு மாலிக் முஹம்மது ஜயாசி எழுதியகவிதை தொகுப்பு  'பத்மாவத்'. அதில், ‘ராணி பத்மாவதியின் அழகை பற்றிக் கேட்டறிந்த டெல்லியை ஆண்டு கொண்டிருந்த துருக்கிய கில்ஜி வம்சத்தை சேர்ந்த அலாவுதீன் கில்ஜி அவளை வசமாக்கிக்கொள்ள திட்டமிட்டு ராஜா ரதன் சிங் ஆண்டு வந்த சித்தொர்கர் சாம்ராஜ்யத்தின் மீது படையெடுத்தான். வலுவிழந்த ராஜபுத்திர வீரர்கள் படை அலாவுதீன் கில்ஜியிடம் தோல்வியுற்றது. இதையறிந்த ராஜபுத்திர மகாராணி பத்மினியும் மற்ற பெண்களும் தங்களை தாங்களே தீக்கிரையாக்கி கொண்டனர்’ என்று அந்தக் கவிதை தொகுப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது. 

என்ன கதை?

வழக்கமாகவே வரலாறை படமாக்க வேண்டும் என்ற பேரார்வம் கொண்ட பன்சாலிக்கு, இந்த ‘பத்மாவத்’ கவிதைத் தொகுப்பை படித்ததும் அதை படமாக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. அவரின் அந்த ஆர்வம்தான் அவரையே படத்தை தயாரித்து, இயக்கி இசையமைக்கவும் வைத்துள்ளது. இதில் ராணி பத்மாவதியாகத் தீபிகா படுகோனும் ராணா ரத்தன் சிங்காக ஷாகித் கபூரும் அலாவுதீன் கில்ஜியாக ரன்வீர் சிங்கும் நடித்துள்ளனர்.

இந்தப்படம் எடுத்து முடிக்கப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டு வந்த நிலையில், ‘மன்னன் அலாவுதீன் கில்ஜி - ராஜபுத்திர ராணி பத்மாவதி இருவரும் காதலிப்பதுபோல கனவு காட்சிகள் அமைந்துள்ளன. இப்படி ராஜபுத்திரர்களின் வரலாற்றை திரித்தும், தவறாகவும் பன்சாலி கூறியுள்ளார்’ என்று கூறி கர்ணி சேனா அமைப்பினர் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், ‘ராஜபுத்திர மகாராணிகள் யார் முன்னரும் நடனம் ஆட மாட்டார்கள். படத்தில் உள்ள 'கூமார்' பாடலில் தீபிகா படுகோன் ஆடுவதுபோல் தவறாக சித்திரிக்கப்பட்டுள்ளது’ என்று சத்தீஸ்கர் மாநில ராஜ வம்சத்தை சேர்ந்த ஹீனா சிங் குறிப்பிட்டு இருந்தார். 

இந்த நிலையில் உத்திர பிரதேசம் மாநில முதல்வர் யோகி ஆத்யாநாத், ‘படத்தை வெளியிட்டால் சட்ட ஒழுங்கு பிரச்சனை வரும்’ என்று உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதினார். இதேபோல், ‘ராஜபுத்திர மகாராணிகள் வீரத்தின் அடையாளமாகத் திகழ்ந்தவர்கள். அவர்கள் மீது களங்கம் உண்டாக்கும் வகையில் தவறாக சித்தரிப்பது தவறு’ என்று ராஜஸ்தான் மாநில அரசும் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தது. இப்படி பல வாடமாநிலத்தை சார்ந்த இந்து அமைப்புகளும் பா,ஜ.க உறுப்பினர்களும் படத்துக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். படம் வெளியாவதற்கு முன் அதிருப்தியாளர்களுக்கு படத்தை திரையிட்டு காட்டி ஆட்சேபனைக்குரிய காட்சிகளை நீக்கியபிறகே படத்தை வெளியிட வேண்டும் என்றும் அறிவுறுத்தி வருகின்றனர். 

சிறப்புக் குழு தணிக்கை

இந்த நிலையில் கடந்த டிசம்பர் ஒன்றாம் தேதி வெளியீடு என அறிவிக்கப்பட்டு நவம்பர் மாதம் தணிக்கைக்கு அனுப்பப்பட்ட 'பத்மாவதி' (படத்தின் முந்தைய பெயர்)  திரைப்படம் தொழில்நுட்பக் கோளாறு காரணங்களால் திருப்பி அனுப்பப்பட்டது. பின்னர், மத்திய தணிக்கைக் வாரியத்தால் நியமிக்கப்பட்ட வரலாற்று ஆய்வாளர்களை உள்ளடக்கிய சிறப்பு குழு படத்தை தணிக்கை செய்து ‘பத்மாவத்’ என பெயர் மாற்றம், காட்சிகளில், வசனங்களில் சில மாற்றங்களை செய்ய பரிந்துரைத்தது. 

அந்த மாற்றங்கள் செய்யப்பட்டு படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்ட பிறகும் ஹரியானா, ராஜஸ்தான், ஹிமாச்சல பிரதேசம், குஜராத், மத்திய பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் 'பத்மாவத்' படத்தை திரையிட தடை செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் பி.ஜே.பி ஆளும் மாநிலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நாளேடுகளில் சிறப்பு விளம்பரங்கள்

இந்த நிலையில் தணிக்கைகுழு பரிந்துரைத்த பின்வரும் அனைத்து உள்ளடங்களுக்கும் நாளேடுகளில் முழுப்பக்க சிறப்பு விளம்பரமாக இடம்பெற்று வருகிறது. அவை வருமாறு:

* மாலிக் முகம்மது ஜயாஸி எழுதிய ‘பத்மாவத்’ என்னும் சூஃபி கவிதை;j தொகுப்பை அடிப்படையாய் கொண்டது 'பத்மாவத்'.

* படத்தில் ராணி பத்மாவதி - மன்னர் அலாவுதீன் கில்ஜி இருவருக்கும் இடையே எந்த கனவு காட்சியும் இல்லை. முன்னதாகவும் இடம்பெறவில்லை,

* ராஜபுத்திரர்களின் வீரத்திற்கும் பாரம்பர்யத்திற்கும் இப்படம் பரைசாற்றலாக உருவாக்கப்பட்டுள்ளது.

* மிக்க மதிப்புடன் ராணி பத்மாவதி கதாப்பாத்திரம் சித்திரிக்கப்பட்டுள்ளது. ராணி பத்மாவதி பெயருக்கும் புகழுக்கும் களங்கமில்லா வகையில் ‘பதமாவத்’ படமாக்கப்பட்டுள்ளது.

* படத்தில் ஐந்து காட்சிகள் மட்டுமே தணிக்கைக் குழுவால் மாற்றம் செய்யப்பட்டவுள்ளன. இந்தியா முழுவதும் யு/ஏ சான்றிதழுடன் வெளியிட அதிகாரப்பூர்வமாக உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது.

* படத்தில் தணிக்கைக் குழு பரிந்துரைத்ததைத் தவிர வேறு எந்வொரு காட்சியும் நீக்கவோ, மாற்றப்படவோ இல்லை.

இப்படி டிஸ்கிலைமருடன் விளம்பரங்கள் வருவது புதுமையே. ஆனால் இதற்கு திரைத்துறையை சார்ந்த பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஐமாக்ஸ் 3டி தொழில்நுட்பம்

‘பத்மாவத்’, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ஐமாக்ஸ் 3டி படம். இது, தமிழிலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தைப் பற்றி இதன் இயக்குநர் சஞ்ஜய் லீலா பன்சாலி குறிப்பிடுகையில், “நீண்ட நாள் கனவுகளில் ஒன்றான 'பத்மாவத்' நிஜமாகும் தருணம் இது. நமது இலக்கியங்களில் கூறப்பட்ட ராஜபுத்திரர்களின் வீரத்தையும் பெருமிதத்தை யும் பறைசாற்றும் படைப்புதான் 'பத்மாவத்'. அத்தகைய ராஜபுத்திர இலக்கியங்களுக்கு ஒரு சமர்ப்பணம் இந்தத் திரைப்படம்" என்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு