Published:Updated:

``பத்மாவதி, கூட்டுத் தீக்குளிப்பு, அலாவுதீன் கில்ஜி... `பத்மாவத்' சொன்னது என்ன... உண்மை வரலாறு என்ன?" #Padmaavat

``பத்மாவதி, கூட்டுத் தீக்குளிப்பு, அலாவுதீன் கில்ஜி... `பத்மாவத்' சொன்னது என்ன... உண்மை வரலாறு என்ன?" #Padmaavat
``பத்மாவதி, கூட்டுத் தீக்குளிப்பு, அலாவுதீன் கில்ஜி... `பத்மாவத்' சொன்னது என்ன... உண்மை வரலாறு என்ன?" #Padmaavat

உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்த பிறகும், ஓயவில்லை 'பத்மாவத்' படத்திற்கான எதிர்ப்பு. டிக்கெட் கவுன்டர்களை அடித்து நொறுக்குவதும், படத்தைத் தடை செய்யக்கோரி கோஷமிடுவதும் இன்னும் நின்ற பாடில்லை. அப்படியென்ன சிக்கல் இங்கே? உண்மையில் எதிர்த்தவர்கள் கருத்தின் கீழ் படம் மறுபரிசீலனைக்கு உட்படுத்திய பின்பும் இத்தனை தடைகள் ஏன்? என்பது பெரும் கேள்விக்குறியாகவே உள்ளது. மேலும், தணிக்கைக் குழு, தீபிகா படுகோனின் ஆடையிலிருந்து, கதாபாத்திரங்கள் பேசும் வசனங்கள் வரை அனைத்தையும் U/A சான்றிதழுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்துள்ளது.  

பத்மாவத் கதை என்ன? 

பத்மாவதி ஒரு சிங்கள இளவரசி. பார்ப்பவர்கள் மையல் கொள்ளும் அளவிற்கு அத்தனை அழகு. தன் மனைவியின் ஆசைக்கு இணங்க சிங்களத்திற்கு முத்துக்களைத் தேடிச்செல்கிறான் மேவாட் ராஜா ரத்தன் சிங். இங்குதான் அவர் இளவரசி பத்மாவதியைச் சந்திக்கிறார். அவர்களுக்குள் காதல் மலர, பத்மாவதியைத் தனது இரண்டாவது மனைவியாக மணந்து மேவாட்டுக்கு அழைத்து வருகிறார். அரண்மனையில் ராஜகுரு தான் இழைத்த ஒரு தவறுக்காக நாடு கடத்தப்படுகிறார். அந்தத் தண்டனையை அவருக்கு அளித்ததில் பத்மாவதிக்குப் பெரும்பங்கு இருந்தது. பத்மாவதியையும், மேவாட் சாம்ராஜ்யத்தையும் பழிவாங்குதலின் பொருட்டு, ராஜகுரு அலாவுதீன் கில்ஜியைச் சந்திக்கிறான். அலாவுதீன், 'அல்லாவின் அனைத்து அழகான படைப்புகளும் அலாவுதீனுக்கே சொந்தம்' என்று கூறுபவன். ராஜகுரு அலாவுதீனிடம், பத்மாவதியின் அழகையும், அவளைக் கைப்பற்றினால் மொத்த சாம்ராஜ்யமும் உங்களுக்கே சொந்தம் என்றும் கூறுகிறான். மண்ணாசையும், பெண்ணாசையும் கொண்ட அலாவுதீனின் பித்துநிலை இன்னும் அதிகமாகிறது. உடனே பத்மாவதியை நோக்கி மேவாட் மீது படையெடுத்துச் செல்கிறான். ஆனால், அவனுக்கு அங்கு கிடைத்ததோ ராஜபுத்திரப் பெண்களின் சாம்பல். இடையே என்ன நடந்தது? வீரத்திற்கும், கௌரவத்துக்கும் பெயர்போன அவர்கள் வென்றார்களா? பத்மாவதியுடன் சேர்ந்து ஏன் அத்தனை பெண்களும் நெருப்புக்கு இறையாகினர் என்பதுதான் மீதிக்கதை. 

உண்மையில் யார் இந்த ராணி பத்மாவதி?

உண்மையில் சித்தூர் கோட்டைக்கு எதிராக கில்ஜி புரிந்த போருக்கு மட்டும்தான் வரலாற்றுச் சான்று இருக்கிறது. பத்மாவதி அழகி என்பதற்கோ, அதற்காகத்தான் கில்ஜி போர் புரிந்தார் என்பதற்கோ யாதொரு சான்றும் இல்லை.

இது 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த 'மாலிக் முகமது ஜெய்சி' எனும் புகழ்பெற்ற கவிஞரால் எழுதப்பட்ட புனைவு என்று கூறப்படுகிறது.

வட இந்தியாவில் முகமது பேரரசு உருவாகி வளர்ந்துகொண்டிருந்த காலத்தில் சித்தூர் ராணி பத்மாவதியின் அழகின் புகழ் உலகெங்கும் பரவியது. இவரது அழகைப்பற்றி கேள்விப்பட்ட அலாவுதீன் கில்ஜி, அவளைத் தனது அந்தப்புரத்துக்கு அனுப்புமாறு கடிதம் அனுப்புகிறான். அதன் காரணமாக மேவாட் மன்னனுக்கும், கில்ஜிக்கும் மாபெரும் போர் மூண்டது. இதில், சுல்தான்களுக்கு எதிராகப் போரிட முடியாத சூழ்நிலையில், ராஜ புத்திரர்கள் தங்களது வாளால் தங்களையே வெட்டிக்கொண்டு மாய்ந்தனர். அந்தப்புரத்துப் பெண்கள் தீக்குளித்து இறந்தனர். வீரர்கள் இறந்தபின் நகரத்துக்குள் நுழைந்த கில்ஜி, மாபெரும் நெருப்பு எரிவதைக் கண்டான். ராணி பத்மாவதியின் தலைமையில் ஏராளமான பெண்கள் நெருப்பைச் சுற்றிவருவதைக் கண்ட கில்ஜி, அவர்களது நோக்கத்தைப் புரிந்துகொண்டான். அவர்களைத் தடுக்க முற்படும்போது, 'இதுதான் ராஜபுத்திரப் பெண்கள் உனக்குக் கொடுக்கும் வரவேற்பு' என்றுகூறி அனைவரும் உயிர் துறந்தனர். கில்ஜியிடமிருந்து தங்களது கற்பைக் காப்பாற்ற அன்று 74,500 பெண்கள் தீயில் விழுந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும் ராஜஸ்தானின் சிறுதெய்வ வழிபாட்டில் ராணி பத்மாவதி முக்கியப்பங்கு வகிக்கிறாள். 

கூட்டுத் தீக்குளிப்பான ஜெளஹர் விழா : 

கூட்டுத் தீக்குளிப்பான ஜெளஹர் விழா, ராஜபுத்திர குலப்பெண்கள் நடத்தும் திருவிழாவாக அக்காலத்தில் இருந்துவந்தது. இதில் திருமணமான பெண்கள் அனைவரும் தங்களது திருமண ஆடையை அணிந்துகொண்டு 'ஜெய் பவானி' என்ற வீர முழக்கத்துடன் கூட்டாகத் தீக்குளிப்பர். இந்நிகழ்வுக்கு அடுத்தநாள் இறந்த பெண்களின் சாம்பலைப் பூசிக்கொண்டு எதிரியை எதிர்த்துப் போரிடுவார்கள் ராஜபுத்திரர்கள். 

கோரி முகமது போரில் தில்லியின் இருந்து இந்து மன்னரான பிரித்விராஜ் சௌஹானைக் கொன்ற செய்தி அறிந்த ராணி சம்யுக்தா, ராஜபுத்திர பெண்களுடன் கூட்டாகத் தீக்குளித்து இறந்தார். 1303, 1532, 1568 ஆகிய மூன்று ஆண்டுகளிலும் மேவாட் நாட்டில் மூன்று முறை கூட்டுத் தீக்குளிப்பு நிகழ்ந்துள்ளது. இக்கூட்டுத் தீக்குளிப்பு நிகழ்வுகள் 'அபுல் பசல்' எழுதிய 'அக்பர் நாமா'வில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அலாவுதீன் கில்ஜி யார் :

12-ஆம் நூற்றாண்டில் டெல்லியை ஆட்சி செய்த ஜலாலுதீன் கில்ஜியைச் சதி செய்து திட்டமிட்டுக் கொலை செய்து, அலாவுதீன் கில்ஜி அரசனானான். 

டெல்லிக்கு வந்த அலாவுதீன் கில்ஜி, தம்மை வெறுத்த உயர்குடியினருக்கும், டெல்லி அமீர்களுக்கும் ஏராளமான செல்வத்தை வாரிக் கொடுத்து அவர்களைத் தன்பக்கம் சாய்த்துக்கொண்டார். எஞ்சிய எதிர்ப்பாளர்களை கடுமையாகத் தண்டித்தார். உயர்குடியினரின் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்கு, அவர் விதிமுறைகளை வகுத்தார். மங்கோலியருக்கெதிராக அலாவுதீன் கில்ஜி ஆறுமுறை படைகளை அனுப்பிவைத்தார். இருப்பினும் மங்கோலிய நாட்டைக் கைப்பற்ற இயலவில்லை. இவர் முகலாய வம்சத்தைச் சார்ந்தவராயினும், முகலாயப் பேரரசர்களின் வரிசையில் வரமாட்டார். ஏனெனில், கில்ஜி வம்சத்தினர் மத்திய ஆசியாவைச் சேர்ந்த துருக்கியர்கள். டெல்லியைக் கைப்பற்றுபவதற்கு முன்பு தற்போதைய ஆப்கானிஸ்தானில் வாழ்ந்து வந்தார்கள். எல்லா மன்னர்களுக்கும் இருந்ததைப்போலவே கில்ஜிக்கும் பல மனைவிகள் இருந்தனர். பல போர்களில் வெற்றிபெற்று ஒட்டுமொத்த வடஇந்தியாவையும் ஆண்ட புகழ்பெற்ற கில்ஜியாக அலாவுதீன் கருதப்படுகிறார். 

முஸ்லிம்களுக்கு எதிரானதா பத்மாவதி :  

இப்படம் எந்தமாதிரியான கருத்தினை வெளிக்கொணருகிறது என்பது பார்பவர்களைப் பொறுத்தே அமைகிறது. 

போரில் ரத்தன் சிங் இறக்கும் தருவாயில் கில்ஜியைப் பார்த்து, 'நீ நேர்மையான முறையில் போர் செய்திருக்கலாமே கில்ஜி' என்று கூறுகிறார். உண்மையில் முஸ்லிம்களின் வரலாற்றில் போர்நெறிமுறை இல்லையா? என்பது கேள்விக்குறியது. அதேசமயம், 'வடக்கிருந்து நோன்பிருத்தல்' மற்றும் 'புறம் குத்தாமை' ஆகிய இரண்டு பழக்கங்களும் இந்தியாவில் மட்டுமே நிலவியாதா என்பதையும் ஆராய வேண்டும்.சரித்திரத்தில் தீக்குளிப்பதைப் புனிதமான ஒன்றாகத்தான் கருதியிருக்கின்றனர். எதிரி நாட்டு மன்னனிடம் சிக்கி பாலியல் அடிமையாக மாறுவதற்குப் பதில், தன் கௌரவத்தின் நலன்கருதி தீக்குளிப்பதே மேல் என்று எண்ணும் நிலை இருந்திருக்கிறது. அதை வீரமரணம் என்றும் பறைசாற்றினர். இதேபோல, இந்திய வம்சாவழியைச் சேர்ந்த அனைத்து அரசர்களும் கலாசாரம், பண்பாடு மற்றும் நெறிமுறைகளைப் பின்பற்றியே வாழ்ந்தனர் என்பதையும், முஸ்லிம் அரசர்கள் மிகக்கொடூரமானவர்கள், மிருகத்தன்மை படைத்தவர்கள், ஒரேநேரத்தில் ஆயிரக்கணக்கான உயிர்களை எடுத்தவர்கள் என்று செங்கிஸ்கான், அவுரங்கசீப் போலவே ஒட்டுமொத்த முஸ்லிம் அரசர்களையும் சித்திரிக்கும் வண்ணமே நம் வரலாறு பெட்டகம் அமைந்திருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.