Published:Updated:

''இந்திய ரசிகர்களுக்கு நன்றி!" முதல் இந்திய சினிமா இயக்கும் இரானிய இயக்குநர் மஜீதி #BeyondTheClouds

''இந்திய ரசிகர்களுக்கு நன்றி!" முதல் இந்திய சினிமா இயக்கும் இரானிய இயக்குநர் மஜீதி #BeyondTheClouds
''இந்திய ரசிகர்களுக்கு நன்றி!" முதல் இந்திய சினிமா இயக்கும் இரானிய இயக்குநர் மஜீதி #BeyondTheClouds

'தி சாங் ஆஃப் தி ஸ்பேரோஸ்', 'சில்ட்ரன் ஆஃப் ஹெவன்' உள்ளிட்ட உலகளாவிய படைப்புகளால் பலகோடி ரசிகர்களைத் தன் வசம் வைத்திருப்பவர் இரானிய இயக்குநரான மஜித் மஜிதி.  'பியாண்டு  தி க்லௌட்ஸ்' என்ற இந்தி திரைப்படத்தை மஜிதி தற்போது இயக்கியுள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க, புதுமுக நடிகர் இஷான் கத்தார், மலையாள நடிகை மாளவிகா மோகனன் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று மும்பையில் நடந்தது. இரானிய மொழியில் இல்லாமல் மஜித் மஜிதி இயக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

பெரிய கனவுகளுடன் திரியும் 22 வயது அமிர், தவறான வழியில் செல்ல, அவனைக் காப்பாற்ற முற்படும் அவனது சகோதரி கதாநாயகி தாரா போலீசால் கைது செய்யப்படுகிறாள். இதைத் தொடர்ந்து என்ன நடக்கிறது என்பதாக 'பியாண்டு  தி க்லௌட்ஸ்' திரைப்படம் உள்ளது. அனைவரையும் டிரெய்லர் வெகுவாகக் கவர்ந்திருந்தது. ஏற்கெனவே, பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட இப்படம், வரும் மார்ச்  23-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.     

பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசிய இயக்குநர் மஜித் மஜிதி

"கிட்டத்தட்ட 8 வருடமாக இந்தியாவில் படம் எடுக்கவேண்டும் என்ற பேச்சுவார்த்தை நடந்துவந்தது. இந்தியா, இரான் இரு நாடுகளக்குமிடையே கலாசார ரீதியில் பல விஷயங்கள் ஒத்துப்போகும். உறவுகளுக்குள் இருக்கும் பாசமும் அதுபோல்தான். இந்திய நாட்டில் நிறைய இரானியர்கள் பல நூற்றாண்டுகளாக இங்கேயே வாழ்கிறார்கள். அவர்களில் எனக்குச் சில நண்பர்களும் இருக்கிறார்கள். அதனால், எனது முதல் வேற்று மொழிப் படத்தை இங்கு ஆரம்பித்தேன். நான் இந்தியாவைப் பற்றி படிக்க ஆரம்பித்தது, சத்யஜித் ரே படங்களைப் பார்த்துதான். அவரது நாட்டில் படம் எடுப்பது எனக்குப் பெருமிதமாகவும் இருந்தது. மேலும், எனக்கு இரானைவிட இந்தியாவில்தான் ரசிகர்கள் அதிகமாக இருப்பதாய் உணர்கிறேன், அவர்களுக்கு எனது நன்றி. 

இந்தியப் படக் குழுவினருடன் வேலை செய்தது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. இந்தியா பெரிய நடிகர்களைக் கொண்ட நாடு என்று எனக்குத் தெரியும். அவர்களுடன் இணைந்து பணிபுரிய ஆசையிருக்கிறது. நான் எனது படங்களில் அந்தக் கதைக்கேற்ற நடிகர்களை மட்டும்தான் பயன்படுத்தியுள்ளேன். இந்தப் படத்திற்கு உறுதுணையாக பல பாலிவுட் கலைஞர்கள் இருந்தனர். அவ்வகையில், தீபிகா படுகோனுக்கு நான் நன்றி கூறியே ஆகவேண்டும்.  இப்படத்தின் சூழலை அவருக்கு எடுத்துக்கூறவே, அவருக்கு இப்படத்தில் இருக்கும் 'தாரா' கதாபாத்திரத்தின் கெட்அப்பைக் கொடுத்தேன். படத்திற்கான ஆடிஷன் எதுவும் செய்யவில்லை. படத்தில், தீபிகாவால் நடிக்க இயலாத சூழல்.

எனது 'முஹம்மத்' படத்திற்கு இரண்டு வருடங்களாக நானும் ஏ.ஆர்.ரஹ்மானும் இணைந்து வேலை செய்தோம். தனது பிஸியான சூழலிலும் ரஹ்மான் மிக கவனத்துடன் இப்படத்தில் பணியாற்றினார்.  சில நேரங்களில் மதியம் இரண்டு மணிக்கு மீட்டிங் என்றால், இரவு பத்து மணிக்குதான் சந்திக்கமுடியும். ஏ.ஆர்.ரஹ்மான் மிகவும் தேர்ந்த மனிதர். இப்படத்தின் மூலம் அவருடன் மீண்டும் இணைந்ததில் பெருமைகொள்கிறேன். மிகவும் திறமை வாய்ந்த இசைக்குழுவை தன் வசம் வைத்துள்ளார் ரஹ்மான். இஷான் மற்றும் மாளவிகா மோகனன் இருவருமே மிகவும் திறமை மிக்கவர்கள். சிறு வயதிலே இவ்வளவு முதிர்ந்த அனுபவமிக்க நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.