Published:Updated:

"ஒரு நாய்க்குட்டிக்கு இவ்ளோ அக்கப்போறா?" - 'அய்யாரி' படம் எப்படி? #Aiyaary

"ஒரு நாய்க்குட்டிக்கு இவ்ளோ அக்கப்போறா?" - 'அய்யாரி' படம் எப்படி? #Aiyaary
"ஒரு நாய்க்குட்டிக்கு இவ்ளோ அக்கப்போறா?" - 'அய்யாரி' படம் எப்படி? #Aiyaary

இந்திய ராணுவத்தில் நடக்கும் ஊழல்களைக் கண்டிக்கிறார்களா, பங்கெடுக்கிறார்களா எனப் புரிந்துகொள்ள முடியாத இரண்டு நாயகர்களைப் பற்றிய த்ரில்லர் கதையாக இருந்திருக்க வேண்டிய படம்தான் 'அய்யாரி'

பொருப்பு துறப்பு

கீழே வரும் கருத்துகள் அரசாங்கத்தையோ அதிகாரத்தையோ, அரசியல் தலைவர்களையோ, அதிகாரிகளையோ குறிப்பிடுவன இல்லை.

ஒரு படத்தை ஆரம்பிக்கும் முன்" இந்த கதை யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டதல்ல. முழுதும் கற்பனையே, நாட்டின் ராணுவத்தினர், தேசிய மற்றும் அரசியல் தலைவர்களை மதிக்கின்றோம் " என்று கூறி ஒரு திரைப்படத்தை ஆரம்பிப்பது ஜனநாயகமா என்ற கேள்வியை உண்டாக்குகிறது. நாட்டில் தயாரிக்கும் எந்தப் பொருளுக்கும் இந்த மாதிரி டிஸ்கிளைமர்கள் வருவதில்லை. வெஜிட்டேரியன் உணவு பொருள்களில் நான் வெஜ் உணவாளர்களைப் புண்படுத்தும் நோக்கில் தயாரிக்கப்பட்டதல்ல, பற்பொடியில் பேஸ்ட் பயன்பாட்டாளர்களைப் புண்படுத்தும் நோக்கில்  தயாரிக்கப்பட்டதல்ல, செல்போன் கம்பெனிகள் குருவிகளைப் புண்படுத்தும் நோக்கில் தயாரிக்கப்பட்டதல்ல எனக் குறிப்பிட்டுச் சொல்லவில்லையே.. ஒரு படம் என்பது பின்பம் எனத் தெரிந்தேதான் பார்க்கிறோம் அதில் ஆயிரம் டிஸ்க்ளைமர்கள் இருக்கும் வகையில் பார்த்துகொள்வதில் என்ன நியாயம்.     

அபே சிங் (மனோஜ் பாஜ்பாயி), ஜெய் பக்‌ஷி (சித்தார்த் மல்ஹோத்ரா) இந்திய ராணுவத்தின் சிறப்பு ரகசிய உளவுப்படையில் வேலை செய்து வருகின்றனர். அமெரிக்காவின் சிஐஏ, மொசாட், கேஜீபி போன்ற சர்வதேச ரகசியப் படைகளைப் போன்று  தேச விரோத ஆட்களைக் களை எடுக்க உயர் ராணுவ அதிகாரிகளால்  களமிறக்கப்பட்ட ரகசிய உளவுப் படை இது எனப் புரிந்துகொள்ளப்பட வேண்டும்.  ராணுவ ஆயுத சப்ளையர் முகேஷ் கபூர் (ஆதில் ஹுசைன்) தலைமை ராணுவ அதிகாரியிடம்(விக்ரம் கோகலே) தனது ஆயுதங்களை வாங்கச் சொல்லி ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி குரிந்தர் சிங்கை வைத்து  லஞ்ச பேரத்தைப் பேசுகிறான். அப்படி வாங்கவில்லையென்றால் இந்த ரகசியப் படை விஷயத்தை அம்பலமாக்குவேன் என்று மிரட்டுகிறான். அவன் வெளியே கூறினால் தன் வேலை போகும் என்று சொல்கிறார் விக்ரம் கோகலே. அதற்காக இவர்களைத் தேடச் செல்கிறார். 


இதில் அவ்வப்போது மும்பை நகரின் கொலாபா சீமா லாட்ஜில் ஒரு நாய் என்று அபே சிங்கின் அணியினர் கூறி வருவார்கள். ஒரு கட்டத்தில் இந்த ரகசியப் படையிலிருந்து அவர்களைப் பிடிக்க ஜெய் பக்‌ஷி விலகிச் செல்கிறான். பின்னர், பொய்யான அடையாளத்தில்  ஒரு  ஹேக்கரை ( ரகுல் ப்ரீத் சிங்) சந்திக்கிறான் அவர்களுக்குள் காதல் மலரும் வரையில் அவர்கள் ஹாக் செய்துகொண்டிருக்கிறார்கள். இந்த ஆயுத ஊழல் கும்பலில் யார் யார் கூட்டு எனக் கண்டுபிடித்து அவர்களையே மிரட்டி பணம் வாங்குகிறான். பத்திரிகையாளர் ஆம்னா('பொன்னர் சங்கர்' புகழ் பூஜா சோப்ரா ) அபேவிற்கு  உதவி செய்கிறாள். 


இந்த ஜெய் பக்‌ஷி ஜெயித்தானா, ரகுல் ப்ரீத் சிங் யார், அபே சிங் இந்த கும்பலைப் பிடித்தானா உயர் அதிகாரி வேலையைக் காப்பாற்றினாரா.  பூஜா சோப்ரா, அபேவிற்கு ஏன்  உதவி செய்கிறாள்? இதற்கு எல்லாம் மேலாக இவர்கள் அடிக்கடி குறிப்பிடும் அந்த கொலாபா லாட்ஜுக்கும் படத்திற்கும் என்ன சம்பந்தம் என இரண்டாம் பாதி நீள்கிறது.

இயக்குநர் நீரஜ் பாண்டே நேர்மையான ஒரு ராணுவ வீரன், சர்வதேச மாஃபியா கும்பல் , ஹாக்கிங் தெரிந்த ஹீரோயின் கெட்டதை வெல்ல கெட்டவழியைத் தெர்ந்தெடுக்கும் ஹீரோ என த்ரில்லருக்கான எல்லா எலமென்டுகளையும் கதையில் வைத்துக்கொண்டு திரைக் கதையில் நம்மை கதறவைக்கும் அளவுக்குத் தொய்வை தந்துள்ளார். ஒரு ஸ்பை த்ரில்லர் படத்தினில் வரைமுறையே இல்லாமல் வசனம் பேசுவது. படத்தில் வரும் 90 சதவிகிதக் காட்சிகள் பார்த்துப் பழக்கப்பட்டதாகவே இருப்பதால் அடுத்து என்ன என்பதை சுலபமாகக் கணிக்க முடிகிறது. இது படத்தின் ஓட்டத்திலிருந்து நம்மை விலக வைக்கிறது. தீவிரவாதிகளுக்கு துப்பு கொடுத்த இன்ஃபார்மரைப் பிடிக்க மாறு வேடத்தில் ஒரு மூன்று நாள், பிடித்து அவனுக்கு நூடுல்ஸ் வாங்கிக் கொடுத்து கொலை செய்ய ஒரு அரை நாள் என ஆறி அளந்து காட்சிப் படுத்தியவிதத்துக்கும் இத்தகைய காட்சிகளுக்கு சற்றும் ஒட்டாமல் இருக்கிறது சஞ்சை சவுத்ரியின் பின்னணி இசை. படத்தின் எடிட்டர் சுதாரிக்காமல் இருந்துவிட்டார்போலத் தெரிகிறது. ஒரு மெல்லிய கதையை 2 1/2 மணி நேரம் இழுக்க முடியாமல் இழுத்துப் பிடித்திருக்கிறார். கதை ஒரு ஃப்ளாஷ்பேக்கில் ஆரம்பிக்கிறது அந்தக் கதைக்குள் ஒரு ஃப்ளாஷ்பேக் அதை இரண்டு கதாபாத்திரங்கள் பகிர்ந்துகொண்டு சொல்வது. அதன் பிறகு இந்தக் கதாபாத்திரங்கள் எந்தக் காலத்தில்  இருக்கிறது என்றக் குழப்பத்துடனே தெளிவாய் கதை சொல்கிறர் இயக்குநர் நீரஜ் பாண்டே.


 

'அய்யாரி' என்ற அரபி வார்த்தைக்கு  'கொல்ல முடியாதவன்'  என்று பொருள்  அபே சிங் ஏதாவது மாயம் செய்து, மாறு வேடம் அணிந்து எதிரி  கும்பலிடம் இருந்து தப்பிப்பான் என்பதால் கஷ்மீரி பள்ளத்தாக்கில் இருக்கும் தீவிரவாதிகளே அவனுக்கு இட்டப் பெயர் என்கிறார்கள். சித்தார்த் மல்ஹோத்ரா, மனோஜ் பாஜ்பாயி, ரகுல் ப்ரீத் சிங்,  நஸ்ருத்தீன் ஷா, ஆதில் ஹுசைன் உள்ளிட்ட பல நடிகர்கள் இருந்தும் மனோஜ் பாஜ்பாயி மட்டுமே நம்மைக் கவர்கிறார். ரகுல் ப்ரீத் வரும் காட்சிகள் அவரது ப்ரெசன்ஸ் ரசிக்க வைக்கிறது. அதைத் தாண்டி அவரது கதாபாத்திரம் ஒன்றும் செய்யவில்லை.

இயக்குநரின் 'ஏ வெட்நெஸ்டே', 'ஸ்பெஷல் 26', 'பேபி', 'தோனி' உள்ளிட்ட தரமான படங்களைத் தொடர்ந்து ஒரு நம்பிக்கையில் இப்படத்திற்குப் போனால் நம்மை இயக்குநர் திருப்திப்படுத்தத் தவறியிருக்கிறார்.