Published:Updated:

``கமலுக்கு 29,000, ரஜினிக்கு 3,000, ஸ்ரீதேவிக்கு எவ்ளோ சம்பளம்?" `16 வயதினிலே' பட்ஜெட் சொல்லும் பாரதிராஜா #VikatanExclusive

``கமலுக்கு 29,000, ரஜினிக்கு 3,000, ஸ்ரீதேவிக்கு எவ்ளோ சம்பளம்?" `16 வயதினிலே' பட்ஜெட் சொல்லும் பாரதிராஜா #VikatanExclusive

``கமலுக்கு 29,000, ரஜினிக்கு 3,000, ஸ்ரீதேவிக்கு எவ்ளோ சம்பளம்?" `16 வயதினிலே' பட்ஜெட் சொல்லும் பாரதிராஜா #VikatanExclusive

``கமலுக்கு 29,000, ரஜினிக்கு 3,000, ஸ்ரீதேவிக்கு எவ்ளோ சம்பளம்?" `16 வயதினிலே' பட்ஜெட் சொல்லும் பாரதிராஜா #VikatanExclusive

``கமலுக்கு 29,000, ரஜினிக்கு 3,000, ஸ்ரீதேவிக்கு எவ்ளோ சம்பளம்?" `16 வயதினிலே' பட்ஜெட் சொல்லும் பாரதிராஜா #VikatanExclusive

Published:Updated:
``கமலுக்கு 29,000, ரஜினிக்கு 3,000, ஸ்ரீதேவிக்கு எவ்ளோ சம்பளம்?" `16 வயதினிலே' பட்ஜெட் சொல்லும் பாரதிராஜா #VikatanExclusive

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் '16 வயதினிலே' திரைப்படம்தான் ஸ்ரீதேவி முழு நடிப்புத் திறனையும் வெளிக்கொண்டு வந்தது. தமிழ்சினிமா மட்டுமல்ல, இந்தி திரைப்பட உலகில் உச்சாணிக் கொம்பில் ஜொலித்த ஸ்ரீதேவி இந்திபட உலகத்துக்கு முதன்முதலாக அறிமுகம் செய்தவர், பாரதிராஜா. ஸ்ரீதேவியை இழந்த பாதிப்பில் கலங்கியிருந்த இயக்குநர் பாரதிராஜாவை அவரது ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் சந்தித்துப் பேசினோம்.

''நான் ஒன்பதாம் வகுப்பு படித்தபோது எங்கள் பக்கத்து ஊர் பள்ளிக்கூடத்தில் ஒரு மாணவி படித்தாள். அவள்தான் என் கனவுலக் பிரதேசத்தின்  'மயில்'.  அவளைத்தான் நான் உயிருக்கு உயிராகக் காதலித்தேன். என் நிஜவாழ்வில் நான் துரத்தித் துரத்தி காதலித்த அந்தப் பெண் பரிசுத்தமான என் காதலை நிராகரித்துவிட்டு, என்னை நிர்கதியாக நிற்கவிட்டுச் சென்றாள். உண்மையான வாழ்வில் சப்பாணியாக நானும், மயிலாக அவளும் இருந்தபோது என்னைவிட்டுப் பிரிந்து சென்றுவிட்டாள். அதனால்தான், சினிமாவில் சப்பாணி, மயிலின் காதலை நிறைவேற்றி வைத்தேன். திரைப்படத்தில் மயில் கதாபத்திரத்துக்கு ரோஜாரமணியையும், சப்பாணி வேடத்துக்கு நாகேஷையும் தேர்வு செய்யலாம் என்று முதலில் முடிவுசெய்தோம். எனக்கென்னவோ எங்கள் ஊரில் நான் காதலித்த மயிலின் சாயல் கொஞ்சம்கூட ரோஜாரமணிக்குப் பொருந்தாததால், யாரைத் தேர்வு செய்வது என்று தெரியாமல் நான் தவித்துக் கொண்டிருந்தேன். அப்போது மலையாளத்தில் ஐ.வி.சசி படத்தில் நடித்துக்கொண்டிருந்தார், ஸ்ரீதேவி. அடுத்து கே.பாலசந்தரின் 'மூன்று முடிச்சு' படத்திலும் ஒப்பந்தமாகி நடித்துக்கொண்டிருந்த ஸ்ரீதேவி புகைப்படத்தைப் பார்த்தவுடனேயே இவள்தான் நான் தேடிக்கொண்டிருக்கும் மயிலு என்று என் மனசுக்குள் நினைத்துக்கொண்டேன்.

ஸ்ரீதேவி வீடுதேடி கதை சொல்லப் போனேன். '16 வயதினிலே' படத்தின் ஒவ்வொரு காட்சியையும் விளக்கிச் சொன்னேன். ஸ்ரீதேவியின் கண்கள் என்னை என்னவோ செய்தது கடைசிக் காட்சி சொல்லும்வரை அவர் கண்கள்மீது நிலைகுத்தி நின்ற என் கண்களை என்னால் கழற்றவே முடியவில்லை. திரைப்படத்தின் முழுக்கதையையும் சொன்னபிறகு, எனது நிபந்தனைகளை ஶ்ரீதேவியிடமும், அவரது அம்மாவிடமும் சொல்ல ஆரம்பித்தேன். என் மயிலு அச்சு அசலான கிராமத்து நாயகி... அதனால், தலையில் விக் வைக்கக் கூடாது என்று நான் சொன்னவுடனே 'என்ன சார் சொல்றீங்க...' என்று அதிர்ந்தார், ஶ்ரீதேவி. அடுத்து மேக்கப் வேண்டாம், காட்டன் துணியில் தைக்கப்பட்ட பாவாடையைத்தான் அணிய வேண்டும் என்று நான் சொல்லச் சொல்ல அம்மா, மகள் இருவர் முகத்திலும் அதிர்ச்சி ரேகைகள் அலைஅலையாய் தோன்றி மறைந்தன. அதன்பின் ஒரு வழியாக '16 வயதினிலே' படத்தில் நடிப்பதற்கு ஶ்ரீதேவி ஒப்புக்கொண்டார். கமல்ஹாசன், ரஜினிகாந்த, ஶ்ரீதேவி என்று நட்சத்திரங்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.           

என் முதலாளி ராஜ்கண்ணு  '16 வயதினிலே' படத்தை முதலில் கறுப்பு வெள்ளையில் எடுத்தால் போதும் என்று சொன்னார். அதன்பின் நட்சத்திரங்கள் ஒப்பந்தம் செய்தபிறகு வண்ணப்படமாக தயாரிக்க விரும்பினார். கர்நாடகத்தில் உள்ள ஒரு கிராமத்துக்குப் படப்பிடிப்புக்குப் போனோம். அங்கே தங்குவதற்கு எந்த வசதியும் இல்லை. கமல், ஶ்ரீதேவிக்கு மட்டும் தனித்தனி அறைகள் கிடைத்தன. நானும், ரஜினியும் வராண்டா ஒன்றில் பாய்விரித்துப் படுத்துக்கொண்டோம். அப்போது ரஜினிக்கு ஓய்வே கிடையாது 24 மணிநேரமும் ஏதாவது ஒரு படப்பிடிப்பில் இருப்பார். என்னுடைய ஃபேவரைட் ட்ரெஸ் வெள்ளைத் தாவணியில் 'செந்தூரப்பூவே...' பாடலைப் பாடும்போது அந்தப் பாடல் வரிகளுக்கு ஏற்ப ஶ்ரீதேவி உதட்டசைத்து நடித்தபோது மகிழ்ந்துபோனேன். அந்தப் பாடலை பாடியதற்காக ஜானகிக்கு தேசிய விருது கிடைத்தது தனிக்கதை. பொதுவாக படப்பிடிப்புக்கு நடிக்க வரும் நடிகைகள், எப்போது பேக்கப் சொல்வார்கள் என்று எதிர்பார்த்து காத்து இருப்பார்கள். அதன்பின், அவசர அவசரமாக காரை எடுத்துக்கொண்டு தங்கள் வீட்டுக்குப் பறந்து விடுவார்கள்.

ஶ்ரீதேவி இதற்கெல்லாம் விதி விலக்கானவர், '16 வயதினிலே' படப்பிடிப்பு நடந்த இடங்களைப் பார்த்துவிட்டு நகராமல் 'எனக்கு இந்த இடமெல்லாம் ரொம்பப் பிடிச்சுப் போச்சு சார், என்னால பிரியிறதுக்கு மனசே வரலியே...' என்றபடி ஸ்தம்பித்துப்போய் கதறி அழ ஆரம்பித்துவிட்டார். அவருடைய அம்மா எவ்வளவோ ஆறுதல் சொல்லியும் அவரை ஆசுவாசப்படுத்த முடியாமல் தவித்துப்போனார். எனக்கும் அதே மனநிலை நிறைய படங்களில் ஏற்பட்டிருக்கிறது. இப்போதுகூட துருக்கியில் முப்பது நாள்கள் 'ஓம்' படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு அந்த இடங்களைவிட்டு அகல முடியாமல் கண்ணீர்மல்க சென்னைக்குத் திரும்பினேன். கர்நாடகாவில் உள்ள ஒரு கிராமத்தில் இருக்கும் ஒரு சின்ன வீட்டில் படமாக்கப்பட்ட காட்சி. 'மயிலு ஆத்தா ஆடு வளர்த்தா, கோழி வளர்த்தா, நாயி மட்டும் வளர்க்கல, இந்தச் சப்பாணியத்தானே வளர்த்தா...' என்று  வசனம் எழுதிய கலைமணி, கமல்ஹாசனோடு பிரமாதமாக நடித்த மயிலு  இப்போது உயிரோடு இல்லை. நான் மட்டும் உயிரோடு இருக்கிறேன், மனசு கஷ்டமாக இருக்கிறது. '16 வயதினிலே' படத்தை இயக்கும்போது கமல்ஹாசன் பெரிய நடிகர். அவருக்குச் சம்பளம் 29,000 ரூபாய், ஶ்ரீதேவிக்கு 9,000 ரூபாய், ரஜினிக்கு 3,000 ரூபாய் கொடுத்தோம். மொத்தம் 5 லட்சத்தில் தயாரித்து முடிக்கப்பட்ட திரைப்படம் '16 வயதினிலே'.  

தமிழ்மொழியில் பெரிதாகப் பேசப்பட்ட '16 வயதினிலே' படத்தைப் பார்த்து வியந்துபோன பிரபல தெலுங்குப் பட தயாரிப்பாளர் ஒருவர் இந்தியில் ரீமேக் செய்ய ஆசைப்பட்டு என்னிடம் கேட்டார். எனக்கு பம்பாய் பழக்கம் இல்லை, இந்தி மொழியில் பெரிய பரிச்சயமும் இல்லை என்று கூறி மறுத்துவிட்டேன். பலமுறை வற்புறுத்தவே ஒப்புக்கொண்டேன். ஹீரோவாக அமல்பலேகர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். மயில் வேடத்தில் நடிக்க இந்தியில் பிரபலமான நடிகைகளை சிபாரிசு செய்தனர். ஆனால், நான் அவர்கள் சொன்ன எல்லோரையும் மறுத்து, ஶ்ரீதேவி நாயகியாக நடித்தால் இயக்குகிறேன் என்று கறாராகச் சொல்லிவிட்டேன். இறுதியாக ஒப்புக்கொண்டனர். சென்னைக்குவந்து ஶ்ரீதேவியை இந்தி ரீமேக் படத்தில் நடிப்பதற்கு அழைத்தேன் 'சார் நான் பம்பாய் பார்த்ததே இல்லை, இந்தி எனக்கு வரவே வராது, எல்லாத்துக்கும்மேல எனக்கு பயமா இருக்கு, பேசாம என்னை விட்டுவிடுங்க ஃப்ளீஸ்...' என்று கெஞ்ச ஆரம்பித்துவிட்டார். 'நான் இருக்கிறேன் தைரியமாக நடி...' என்று சொல்லி நடிக்க வைத்தேன். இந்தி படப்பிடிப்பில் அமல்பலேகர் ஶ்ரீதேவிக்கு இந்தி கற்றுக்கொடுத்தார். மூன்று படங்களுக்குப் பிறகு தானே சொந்தக்குரலில் இந்தியில் டப்பிங் பேசும் அளவுக்குக் கற்பூரபுத்தி கொண்ட திறமைசாலியான நடிகை ஶ்ரீதேவி.       

அடுத்து ராகவேந்திரராவ் டைரக்‌ஷனில் தெலுங்கில் நடிக்க ஆரம்பித்த பிறகு தென்னிந்தியாவின் முடிசூடா ராணியாகத் திகழ்ந்தார், ஶ்ரீதேவி. நான் எத்தனையோ நாயகிகளை தமிழ்சினிமாவில் அறிமுகம் செய்திருக்கிறேன், ஶ்ரீதேவிக்கும் சின்னச்சின்ன எக்ஸ்பிரஷனை சொல்லிக் கொடுத்திருக்கிறேன். யாரோடும் ஒப்பிடமுடியாத அபூர்வமான திறமை கொண்டவர். இந்திய சினிமா உலகத்திலேயே வைஜெயந்தி மாலாவுக்குக் கிடைக்காத புகழ், பத்மினிக்குக் கிடைக்காத புகழ், சாவித்திரிக்குக் கிடைக்காத புகழ் அனைத்தையும் பெற்ற ஶ்ரீதேவி என்னைப்பற்றி பேசும்போது எனக்கு ஏற்பட்ட பெருமித உணர்வுகளை என்னால் வார்த்தைகளில் வடிக்க இயலாது. ஒருமுறை ஒரு கல்யாண நிகழ்ச்சியில் ஶ்ரீதேவியையும், போனி கபூரையும் பார்த்தேன் அப்போது என்னை போனிகபூரிடம் காட்டி ' எங்க டைரக்டரைப் பார்த்தீங்களா? எவ்ளோ ஸ்லிம்மா உடம்பை வெச்சிருக்கார். நீங்களும்தான் இப்படி குண்டா இருக்கீங்களே?' என்று கேலிசெய்தார்.          

அடுத்து மதுரைக்குப் போகும் விமானத்தில் ஏறினேன் அப்போது கூலிங்கிளாஸ் போட்ட ஒரு பெண் தன் இருக்கையில் இருந்து எழுந்து வணக்கம் வைத்தார். நானும் பேசாமல் கடைசியில் உள்ள என் சீட்டில்போய் அமர்ந்துவிட்டேன். மதுரை விமான நிலையத்தில் இறங்கியபோது 'சார் மதுரையில ஒரு ஜவுளிக்கடையைத் திறக்க இதே ஃபிளைட்டுல ஶ்ரீதேவி மேடம் வந்தாங்களே பார்த்திங்களா?' என்று கேட்டனர்,  நான் அதிர்ந்துபோனேன். அப்புறம் எனக்காக மதுரை ஏர்போர்ட் வாசலில் காத்திருந்த ஶ்ரீதேவியிடம் 'ஸாரி' கேட்டேன். அவரும், 'போங்க சார்..  உங்ககிட்ட பேசணும்னு எழுந்து வணக்கம் வெச்சேன், நீங்க கண்டுக்கவே இல்லை' என்று செல்லமாக கோபித்துக் கொண்டார். தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும், தென்னிந்திய வர்த்தகத் திரைப்பட அமைப்பும், தென்னிந்திய நடிகர் சங்கமும் இணைந்து ஶ்ரீதேவி மரணத்துக்கு மிகப்பெரிய மரியாதையை, அஞ்சலியைச் செலுத்த வேண்டும். ஶ்ரீதேவியின் அஸ்தியைக் கொண்டுவந்து சிவகாசிக்கு அருகிலுள்ள அவர் பிறந்த ஊரில் சமாதி கட்டி நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் அதுதான் சிறுவயதிலிருந்து, இன்றுவரை சினிமாவில் உச்சாணிக் கொம்பில் இருந்துவந்த ஶ்ரீதேவிக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலி'' என்று கலங்கினார்.