Published:Updated:

"ராணி முகர்ஜியின் ரீ-என்ட்ரியை அர்த்தமுள்ளதாக மாற்றியிருக்கிறதா 'ஹிச்கி'?" - 'ஹிச்கி' படம் எப்படி? #HichkiReview

"ராணி முகர்ஜியின் ரீ-என்ட்ரியை அர்த்தமுள்ளதாக மாற்றியிருக்கிறதா 'ஹிச்கி'?" - 'ஹிச்கி' படம் எப்படி? #HichkiReview
"ராணி முகர்ஜியின் ரீ-என்ட்ரியை அர்த்தமுள்ளதாக மாற்றியிருக்கிறதா 'ஹிச்கி'?" - 'ஹிச்கி' படம் எப்படி? #HichkiReview

"ராணி முகர்ஜியின் ரீ-என்ட்ரியை அர்த்தமுள்ளதாக மாற்றியிருக்கிறதா 'ஹிச்கி'?" - 'ஹிச்கி' படம் எப்படி? #HichkiReview

வாய்ப்புகள் மறுக்கப்படும் ஒரு ஆசிரியர். அன்றாட வாழ்க்கையில் போராடும் மாணவர்கள். இவர்கள் எப்படி கிடைத்த வாய்ப்பை உபயோகிக்கிறார்கள் என்பதை ஆசிரியர் - மாணவர்கள் உறவோடு எமோஷனல் டிராவலாய்ச் சொல்லும் திரைப்படம், 'ஹிச்கி'. #Hichki

சிறு வயதிலேயே, டோரட் சிண்ட்ரோம் (Tourette syndrome) என்கிற நரம்பியல் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டவர், நைனா. இந்த குறைபாட்டினால் பாதிக்கப்பட்டவர்கள் அடிக்கடி ஒருவித குரல் எழுப்புவார்கள். சிறு வயதில் பல்வேறு கேலி, கிண்டல்களை எதிர்கொண்டிருந்தாலும், தன் ஆசிரியரின் தூண்டுதலால் பள்ளியின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறுகிறார் நைனா. தன் ஆசிரியரை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு தானும் ஆசிரியராக விரும்புகிறார். இதில், பல்வேறு நிராகரிப்புகளைச் சந்திக்கும்போதும், நம்பிக்கையோடு ஒவ்வொரு பள்ளியாக வேலை தேடி அலைகிறார். 

நினைத்துபோல், தான் படித்த நோட்கர்ஸ் பள்ளியிலேயே ஆசிரியராகப் பணியில் சேர்கிறார். தனக்கு இருக்கும் இடையூறுகளைத் தாண்டி இந்த வேலையை செம்மையாகச் செய்யமுடியும் என நம்பிக்கை கொள்கிறார், நெய்னா. நோட்கர்ஸ் பள்ளியில் மாணவர்களின் படிப்புத் திறனுக்கு ஏற்றவாறு ஏ,பி,சி,டி வரிசைப்படுத்தி வகுப்புகளைப் பிரித்துள்ளனர். அப்படிப் பிரிக்கப்பட்டதில், ஒன்பதாம் வகுப்பு 'எஃப்' செக்ஷன் நெய்னாவுக்குத் தரப்படுகிறது. 'டி' வரைதானே வகுப்புகள் இருக்கும்? என நெய்னா கேள்வி கேட்க, அவளுக்குக் கிடைத்த பதில், "அரசின் கல்வி கற்கும் உரிமை சட்டத்தின்படி ஒதுக்கீடு செய்யப்பட்ட சீட்டில் படிக்கும் ஏழை, நடுத்தர குடும்பத்தைச் சார்ந்த குழந்தைகள் உள்ள வகுப்பு இது. பெரிதாய்ப் படிக்கமாட்டார்கள்" எனக் காரணம் கூறுகிறார், நெய்னாவின் சக அறிவியல் ஆசிரியர் வாடியா. தனக்கு உடலளவில் இருக்கும் சவால்களோடு இந்த சவாலையும் ஏற்றுக்கொண்டு வகுப்புக்குள் செல்கிறார், நெய்னா. மாணவர்கள் இவரை  கிண்டல் செய்கிறார்கள். இவர்களைத் தன் வழிக்குக் கொண்டுவந்து அவர்களை வழிநடத்தி, மாணவர்களின் திறமைகளை உணர வைத்து, தேர்வுகளில் வெற்றி பெறச் செய்து, வாடியா கையால் ஸ்கூல் டாப்பர்களுக்கு அளிக்கப்படும் 'ப்ரிஃபெக்ட்' பேஜ்' வாங்க வைக்கிறார், நெய்னா. இந்தப் பயணத்தில் இருக்கும் சிக்கல்களையும், சவால்களையும் எப்படி எதிர்கொண்டார்? என்பதுதான், படம் சொல்லும் பாடம். 

டூரட் சிண்ட்ரோம் குறைபாட்டால் பாதிக்கப்பட்டு, ஆசிரியராகப் பணிபுரிந்த பிராட் ஹோகன் என்பவர் எழுதிய 'ஃப்ரெண்ட் ஆஃப் தி கிளாஸ்' என்ற சுயசரிதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட சினிமா. சுயசரிதை என்றாலும், படத்தை இந்திய சமூக நிலைக்கான ஒரு கதையாக மாற்றியமைத்து ரசிக்கும்படி உருவாக்கியிருக்கிறார்கள், கதாசிரியர்கள் சித்தார்த் மல்ஹோத்ரா - அன்கூர் சௌத்ரி. அம்பர் ஹதாப், கணேஷ் பண்டித், அன்கூர் என மூவரின் கைவண்ணத்தில் விறுவிறு திரைக்கதை, ஆங்காங்கே கதாபாத்திரங்களின் வாழ்க்கையை நின்று திருப்பிப் பார்க்க வைக்கிறது. அன்கூரின் வசனங்கள் சில ஆசிரியர்களின் மனநிலையைத் தோலுரித்துக் காட்டுகிறது. குறிப்பாக, வாடியா பின் தங்கிய சமூகத்தின் மாணவர்கள் கெட்டவர்கள் எனக் கூற, நெய்னாவோ 'இங்கு கெட்ட மாணவர்கள் யாரும் இல்லை. நல்ல ஆசிரியர், கெட்ட ஆசிரியர்கள் மட்டும்தான் உள்ளார்கள்' என்ற வசனம், 'படிப்பு என்பது வாழ்க்கையின் ஒரு அங்கம் மட்டும்தான், வெளியுலக வாழ்வு புத்தகங்களுக்கு அப்பாற்பட்டது' போன்ற வசனங்கள் அரங்கத்தைப் பளிச்சிடச் செய்கிறது. அவினாஷ் அருணின் ஓளிப்பதிவு ஒளியை மட்டுமல்ல, கதாபாத்திரங்களின் உணர்வையும் திரையில் காட்டுகிறது. ஷ்வேத்தா வெங்கட் மேத்யூவின் படத்தொகுப்பு படத்தை வேகமாக நகர்த்தி, சுவாரஸ்யத்தைக் கொடுக்கிறது. ஜல்லீன் ராயல் இசையில் பாடல்கள் நம்மை ஈர்க்கிறது. பின்னணி இசையமைத்திருக்கும் ஹிதேஷ் சோனிக்கும் கதையோடு நம்மைக் கடத்துகிறார்.  

ஒரு ஆசிரியர் தன் மாணவர்களுக்கு என்ன மாதிரியான விஷயங்களை, எப்படிப்பட்ட வகையில் புகட்ட வேண்டும் என்பதற்கு 'ஹிச்கி'யை சிறந்த உதாரணங்களில் ஒன்றாக மாற்றியுள்ளார், படத்தின் இயக்குநர் சித்தார்த் மல்ஹோத்ரா. பல கதாபாத்திரங்கள் நன்கு அமைந்திருந்தும் தன்னைப் பிரதானமாகப் பார்க்க வைக்கிறது, நரம்பியல் குறைபாடு உடைய பெண்ணாக வரும் ராணி முகர்ஜியின் நடிப்பு. நான்கு வருடம் கழித்து ராணி முகர்ஜி நடிக்கும் படம் என்ற எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்கிறது. அதனாலேயே, 'ஹிச்கி' படம் 'ரிட்டன் ஆஃப் தி ராணி'யை அர்த்தமுள்ளதாக மாற்றியுள்ளது.

சாதிப்பதற்கு நம்மிடம் குறை, நம்மைச் சுற்றியிருக்கும் குறை... இதெல்லாம் குறைகளே இல்லை எனப் படம் முழுக்க பாசிட்டிவ் விஷயங்களைத் திக்கி, விக்கிச் சொல்கிறது, இந்த 'ஹிச்கி'. 

அடுத்த கட்டுரைக்கு