Published:Updated:

"ஒன்மேன் ஆர்மின்னா என்னனு காட்டிட்டீங்க பாஸ்!" - 'பாகி 2' படம் எப்படி? #Baaghi2

ப.சூரியராஜ்
அலாவுதின் ஹுசைன்

டைகர் ஷ்ராஃஃப், திஷா பத்தானி, ரந்தீப் ஹூடா, மனோஜ் பாஜ்பாயீ நடிப்பில் இந்தியில் வெளியாகியிருக்கும் பாகி 2

"ஒன்மேன் ஆர்மின்னா என்னனு காட்டிட்டீங்க பாஸ்!" - 'பாகி 2' படம் எப்படி? #Baaghi2
"ஒன்மேன் ஆர்மின்னா என்னனு காட்டிட்டீங்க பாஸ்!" - 'பாகி 2' படம் எப்படி? #Baaghi2

தன் முன்னாள் காதலியின் தொலைந்துபோன மகளைக் கண்டுபிடிக்கக் களமிறங்கும் ராணுவ வீரர். அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கும் சில திருப்பங்களை பல ஆக்‌ஷன் காட்சிகளோடு சொல்கிறது, 'பாகி 2'.

2016-ஆம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த ‘க்‌ஷனம்’ திரைப்படம், சிபிராஜ் - ரம்யா நம்பீசன் நடிப்பில்  'சத்யா' என்ற பெயரில் தமிழில் ரீமேக் ஆனது. இப்போது 'பாகி 2' என்ற பெயரில் ஹிந்தியில் ரீமேக் ஆகியிருக்கிறது.

ரோனி என்ற ரன்வீர் பிரதாப் சிங் (டைகர் ஷெராஃப்) காஷ்மீரில் பணிபுரியும் ராணுவ வீரர். 'குழந்தையைக் காணவில்லை; கண்டுபிடித்துக்கொடு' எனக் கெஞ்சும் முன்னாள் காதலி நேஹாவுக்காக (திஷா பதானி) கோவா வருகிறார். லோக்கல் மெக்கானிக் உஸ்மானின் (தீபக் தேப்ரீயல்) உதவியோடு பல இடங்களில் குழந்தையைத் தேடுகிறார். இப்படி ஒரு கடத்தல் சம்பவம் நடந்ததாகவும், கடத்தப்பட்டதாகச் சொல்லப்படும் ரியா என்றொரு குழந்தை இருந்ததாகவும் யாருக்கும் தெரியவில்லை. குழப்பங்கள் தொடர்ந்தாலும் தேடலைத் தொடர்கிறார், ரோனி. குழந்தையைக் கடத்தியவர்கள் யார், குழந்தை உண்மையிலேயே இருக்கிறதா, இல்லையா... போன்ற கேள்விகளுக்கான விடைகள்தான், மீதிக்கதை. 

'பாகி' படத்தின் இரண்டாம் பாகமாக வந்திருக்கும் இப்படத்தில் மாறாமல் இருப்பது ரோனி மற்றும் அவனது அதிரடி ஆக்‌ஷன் மட்டும் தான். பனைமர உயரம், பழனி படிக்கட்டு சிக்ஸ் பேக் என இராணுவ வீரன் லுக்கிற்கு நம்பும்படியாக இருக்கிறார், டைகர் ஷெராஃப். காதல் காட்சிகளில் உருகுவது, சண்டைக் காட்சிகளில் உருக்குலைப்பது, நடனக் காட்சிகளில் அசரடிப்பது... எனத் தாறுமாறாய் விளையாடியிருக்கிறார், டைகர். என்ன... எமோஷன் காட்சிகள்தான் டபுள் புரமோஷன் வாங்கவிடாமல் தடுக்கிறது. இளமையான அம்மாவாக திஷா பதானி அழகு!. தாய், மகள் பாசப் போராட்டம் படம் முழுக்க இருப்பினும் அந்த உணர்வை ரசிகர்களுக்குக் கடத்த மிகவும் சிரமப்பட்டுள்ளார். இயக்குநர் சொன்னதைச் செய்திருக்கிறார்கள் என்றாலும், ரந்தீப் ஹூடா, மனோஜ் பாஜ்பாய் போன்ற சிறந்த நடிகர்களுக்கு இலகுவான, மேம்போக்கான கதாபாத்திரங்களைக் கொடுத்திருப்பது கொஞ்சம் ஏமாற்றமே. நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு படத்தின் இறுதி கட்டத்தில் குத்தாட்டப் பாடல். 80'களின் புகழ்பெற்ற இந்திப் பாடலான `ஏக் தோ தீன்' பாடலை ரீமேக்கி, ஜாக்குலின் ஃபெர்னான்டஸை நடனமாட வைத்திருக்கிறார்கள். டிங்கு டாங்கு டிங்!

இயக்குநர் அஹமத் கான், நடன அமைப்பாளர், தயாரிப்பாளர், கதாசிரியர் எனப் பல்வேறு துறைகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். எனவே, தொழில்நுட்ப ரீதியாக சிறப்பான படத்தையே தந்திருக்கிறார். ராம்போ சீரிஸ் படங்கள், கான்ட்ரோ வீடியோ கேம் சீரிஸின் வெறித்தன ரசிகராக இருப்பார்போல... இறுதிக்காட்சிகளைப் பார்த்தால் நீங்களே உணர்வீர்கள்!. ஒளிப்பதிவு கலர்ஃபுல்லாக இருக்கிறது.  கதையின் ஓட்டத்திற்கேற்ற பின்னணி இசையைத் தந்திருக்கிறார், ஜூலியஸ் பாக்கியம். நான்-லீனியர் திரைக்கதையில் பயணிக்கும் கதையைக் குழப்பாமல் கத்தரித்துத் தொகுத்திருக்கிறார், எடிட்டர் ராமேஷ்வர் பகத்.  ராம்-லக்‌ஷ்மன், கேச்சா கெம்பாடே மற்றும் ஷம்ஷீர் கான் அமைத்திருக்கும் சண்டைக் காட்சிகள் படத்தின் அசுர பலம். டைகர் ஷெராஃபின் ஸ்டண்ட், ஜிம்னாஸ்டிக் திறமைகளுக்கு ஏற்றமாதிரி உட்சபட்ச ரிஸ்குடன் சண்டைக்காட்சிகளை  அமைத்திருக்கிறார்கள்.

`க்‌ஷனம்',`சத்யா' படம் பார்த்தவர்கள், `பாகி 2' பார்த்தால், `அந்தப் படத்தையா இப்படி யூ-டர்ன் போட்டு, டேபிளை உடைத்து எடுத்து வைத்திருக்கிறீர்கள்' என்ற பதற்றம் வருகிறது. படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் யூ-டர்ன் போட்டு, போலீஸ் ஸ்டேஷன் டேபிளை உடைக்கிறார், டைகர். அடப் போங்கய்யா...

ஒற்றை ஆளாய் ஒரு காட்டுக்குள் புகுந்து ஒட்டுமொத்த ராணுவத் தளவாடங்களையும் பொட்டு பொட்டென வீழ்த்துவது, தடதடவென ஓடிவந்து ஒரு ஹெலிகாப்டருக்குள் தாவிக் குதித்து... அந்த ஹெலிகாப்டரை வைத்தே இன்னொரு ஹெலிகாப்டரைப் பொசுக்குவது என விஞ்ஞானத்தோடு வீம்பாக விளையாடியிருக்கிறார்கள். 'ஒன்மேன் ஆர்மி'க்கு இதான் அர்த்தமா பாஸ்?!. லாஜிக் மிஸ்டேக் இருக்கலாம், லாஜிக்கே மிஸ்டேக்கா இருக்கலாமா? படத்தில் சென்டிமென்ட்டுக்கு அத்தனை ஸ்கோப் இருந்தும் சாதாரண ஒரு ஆக்‌ஷன் படமாக எடுக்க ஏன் இவ்வளவு மெனக்கெடல்கள்?.

தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் இப்படத்தின் வெற்றிக்குக் காரணமாக இருந்தது, படத்தின் பட்ஜெட் மற்றும் கதாப்பாத்திரங்களின் யதார்த்தம். இந்தியில் கதைக்களத்தையும் கதாபாத்திரங்களையும் அப்படியே வைத்துக் கொண்டு, ஹை வோல்டேஜ் சண்டைக் காட்சிகளைச் சேர்த்து உணர்வுகளுக்கும், யதார்த்தத்திற்கும் டாடா... பை பை... சொல்லியிருக்கிறார், இயக்குநர் அஹமத் கான். 

`பாகி -3' வேறு வரவிருக்கிறதாம். அதிலாவது இந்த ஆக்‌ஷன் அட்ராசிட்டிகளுக்கு போகி கொண்டாடினால் நன்றாக இருக்கும்!