Published:Updated:

``திவ்யா, ருக்கு, மைதிலி, மாலினி... இதைச் சொல்லியே ஆகணும் சிம்ரன், நீங்க அவ்ளோ ஆவ்ஸம்!" #HBDSimran

90'ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகை, சிம்ரன். டான்ஸ், ஃபெர்பாமன்ஸ் இரண்டிலும் முத்திரை பதித்து சினிமாவில் தனக்கென தனி இடம் பிடித்தவர். அவருடைய பிறந்தநாள் கட்டுரை.

``திவ்யா, ருக்கு, மைதிலி, மாலினி... இதைச் சொல்லியே ஆகணும் சிம்ரன், நீங்க அவ்ளோ ஆவ்ஸம்!" #HBDSimran
``திவ்யா, ருக்கு, மைதிலி, மாலினி... இதைச் சொல்லியே ஆகணும் சிம்ரன், நீங்க அவ்ளோ ஆவ்ஸம்!" #HBDSimran

சிம்ரன்... இந்த ஒரு வார்த்தையைச் சொன்னாலே 90'ஸ் கிட்ஸ்களின் மனதிற்குள் பட்டாம்பூச்சி பறக்கும். காரணம், அவர்களின் நடிப்பும் ஹீரோக்களுக்கு நிகராக இவர் ஆடும் நடனமும்தான்.

மும்பையில் உள்ள பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தவர், சிம்ரன். மாடலிங் துறையில் கால்பதித்த சிம்ரனுக்கு, `ஷனம் ஹர்ஜய்' என்ற இந்திப் படம் மூலமாகத் திரையில் தோன்ற வாய்ப்பு கிடைத்தது. அதில் இவரது நடிப்பையும் அழகையும் கண்டு வியந்த பாலிவுட் சினிமா அடுத்தடுத்து படங்கள், டிவி நிகழ்ச்சிகள் என வாய்ப்புகளை அள்ளிக்கொடுத்தது. அனைத்தையும் மிகச்சரியாகப் பயன்படுத்திய சிம்ரன் மீது, தென்னிந்திய சினிமாவின் பார்வை விழாமல் இருக்குமா என்ன... விழுந்தது. தன் முதல் மலையாளப் படத்திலேயே சூப்பர் ஸ்டார் மம்முட்டிக்கு ஜோடியாகும் வாய்ப்பு கிடைத்தது. பின் தெலுங்கு, கன்னடம் எனப் பல மொழிகளில் நடித்தாலும், பாலிவுட்டுக்கும் அடிக்கடி பறந்துகொண்டிருந்தார், சிம்ரன்.  

பல மொழி சினிமாவிலும் தன் என்ட்ரியைக் கொண்டாடும் விதத்தில் கொடுத்த சிம்ரனுக்கு, தமிழில் இரண்டு படங்கள் ஒப்பந்தமாகி பின்பு கைவிடப்பட்டது. பின்னர், 1997- ம் ஆண்டு வெளியான `நேருக்கு நேர்' படத்தின் மூலம் சிம்ரனை இயக்குநர் வஸந்த் தமிழில் அறிமுகப்படுத்தினார். பின், `வி.ஐ.பி', `நட்புக்காக' என சிம்ரனுக்கு அதிக படங்கள் கொடுத்து அவரை கோலிவுட் தன்வசமாக்கியது. `அவள் வருவாளா' படத்தில் அஜித்துடன் `திவ்யா'வாகவே வாழ்ந்த இவரது நடிப்பு, சிம்ரனை அடுத்த லெவலுக்கு அழைத்துச் சென்றது. அந்தப் படத்தில் `காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா?', `சேலையில வீடு கட்டவா?', 'ஓ... வந்தது பெண்ணா?' என்று கேள்விக்குறிகளோடு தொடங்கிய பாடல்களுக்கெல்லாம் சிம்ரனின் நடனம் ஆச்சர்யக்குறி.

விஜயுடன் `துள்ளாத மனமும் துள்ளும்' படத்தில் `ருக்கு' கேரக்டர் இன்றுவரை சிம்ரன் ரசிகர், ரசிகர்களுக்கான ஃபேவரைட். அந்த வருடத்தின் பிளாக் பஸ்டர் படமான இதற்கு, அரசு விருதுகளோடு பல விருதுகள் கிடைத்தன. எம்.ஜி.ஆர் விருதினை விஜயும், சிறந்த நடிகைக்கான விருதை சிம்ரனும் பெற்றுக்கொண்டார்கள். 

மீண்டும் அஜித்துடன் கைகோத்த சிம்ரன், `வாலி' படத்தில் `பிரியா'வாகத் தோன்றி, இளைஞர்களின் மனதில் பிரியமானவளாக மாறினார். `நிலவைக் கொண்டுவா?', `ஏப்ரல் மாதத்தில்...' ஆகிய பாடல்கள் இன்றும் டிவியில் பார்க்கும்போது, சிம்ரனுக்கான சில நிமிடம் கண்கள் இமைக்காது. மாடர்ன் கேரக்டர்களில் மட்டுமல்ல... `பிரியமானவள்', `ஜோடி', `கண்ணுப் பட போகுதய்யா' என ஹோம்லி லுக்கிலும் கேரக்டரிலும் தனக்கென தனி இடத்தைப் பிடித்தார், சிம்ரன். ஆரம்பத்திலிருந்து தமிழ் சினிமாவில் இருந்துவந்த நடிகைகளுக்கான ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷனை மாற்றி ஒல்லியான உடல், மெல்லிய இடை, அழகிய நடை, அசத்தும் நடனம் எனப் புது ட்ரெண்டை உருவாக்கியவர், சிம்ரன். சிட்டி முதல் சின்னாளப்பட்டி வரை... 90'களில் இளைஞர்களின் கனவுக்கன்னியாகவும், `கல்யாணம் செய்தால் சிம்ரன் மாதிரி ஒரு பெண்ணைத்தான் கல்யாணம் பண்ணணும், முடிஞ்சா சிம்ரனையே கல்யாணம் பண்ணினாலும் ஓகேதான்' என சிம்ரனின் தாக்கத்தால் திளைத்திருந்தனர். 

`கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தில் 5 வயதுக் குழந்தைக்குத் தாயாக தன் யதார்த்த நடிப்பின் மூலம் `இந்திரா திருச்செல்வன்' கேரக்டராகவே வாழ்ந்திருப்பார், சிம்ரன். பிறகு, `ஏழுமலை', `ரமணா', `பஞ்ச தந்திரம்' எனப் பல படங்களில் நடித்தவர், தீபக் பகாவுடன் திருமணம் முடிந்தது. கல்யாணத்துக்குப் பிறகு தீவிர நடிப்புக்கு இடைவெளி விட்டிருந்தார். பிறகு சில படங்களில் கேமியோ கேரக்டரில் நடித்தவர், `மீண்டும் பெரிய கேரக்டர்களில் நடிக்கமாட்டாரா?' என்று ஏங்கிய ரசிகர்களின் குரல் இயக்குநர் கெளதம் மேனனின் காதில் கச்சிதமாக விழுந்திருக்கும். அதனால்தான், `வாரணம் ஆயிரம்' படத்தில் `மாலினி'யாக ரீஎன்ட்ரி கொடுத்து, வழக்கம்போல மனசை அள்ளினார். காதலி, மனைவி, தாய், மகள், மாமியார்... என அனைத்து உறவுகளிலும் தன்னை நிலைநிறுத்தி அசத்தினார். சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும், `துருவ நட்சத்திரம்', `வணங்காமுடி', `சீமராஜா' எனச் சில படங்களில் நடித்து வருகிறார்.

சிம்ரன் ஒரு கதாநாயகி மட்டுமல்ல... சிறந்த ஃபெர்பாமர். அதனால்தான், இன்றைய பல இளம் ஹீரோயின்களுக்கு `ரோல் மாடல்' என்ற உச்சத்தில் இருக்கிறார், சிம்ரன். மறுபடியும் உங்களின் மிரட்டலான நடிப்பைக் காண காத்திருக்கிறோம். கடைசியா... இதைச் சொல்லியே ஆகணும். சிம்ரன், சிம்ரன்தாங்க!

பிறந்தநாள் நல்வாழ்த்துகள் சிம்ரன்!