Published:Updated:

பாலிவுட் சினிமாவின் தனி ஒருவன், நவாசுதீன் சித்திக்..! #HBDNawazuddinSiddiqui

பாலிவுட் சினிமாவின் தனி ஒருவன், நவாசுதீன் சித்திக்..! #HBDNawazuddinSiddiqui
பாலிவுட் சினிமாவின் தனி ஒருவன், நவாசுதீன் சித்திக்..! #HBDNawazuddinSiddiqui

“அவனை கேமரா விரும்புகிறது என்று நினைக்கிறேன். அது அவனை படம் பிடிக்கத் தொடங்கியவுடன், அவன் பார்வையாளர்களை தன் பக்கம் ஈர்த்து, திரையில் அவனது இருப்பை உறுதிசெய்துகொள்கிறான்...” தான் மிகவும் நேசிக்கும் நடிகர் நவாசுதீன் சித்திக் பற்றி பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் கூறிய பதில் இது. அனுராக் காஷ்யப் சொன்னது நூறு சதவிகிதம் உண்மை. நவாசுதீன் சித்திக் இன்று இந்தியாவின் மிகச் சிறந்த நடிகர்களுள் ஒருவராகப் பார்க்கப்படுகிறார்.

உத்தரப்பிரதேசத்தில் புதானா என்னும் குக்கிராமத்தில் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் நவாசுதீன். அவருடன் பிறந்தவர்கள் மொத்தம் 9 பேர். நவாசுதீனின் சொந்த ஊரான புதானாவில் சினிமா தியேட்டர்கள் கிடையாது. இன்று வரை ஒரே ஒரு டென்ட் கொட்டாய் மட்டும்தான் இயங்கிவருகிறது.

பள்ளிப்படிப்பை உள்ளூரில் முடித்த நவாசுதீன், கல்லூரிப் படிப்பை ஹரித்வாரில் முடித்துவிட்டு, சில ஆண்டுகள் வதோதராவில் உள்ள ஒரு பெட்ரோல் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அன்றைய காலகட்டத்தில் அவர் தன் மொத்த வாழ்நாளில் ஏறக்குறைய ஐந்து அல்லது ஆறு திரைப்படங்களை மட்டுமே பார்த்து இருந்தாராம். எனினும், அவரது கனவு முழுவதும் நடிகர் ஆக வேண்டும் என்பதிலேயே இருந்தது. தன் கனவை நிறைவேற்ற டெல்லி கிளம்பினார்.

ஆரம்பத்தில் நாடகக் குழுக்களில் வேடங்கள் தேடியலைந்தார் நவாசுதீன். சீனியர் நடிகர்களுக்கு டீ பரிமாறுவது, நாடகம் முடிந்த பின் மேடையைச் சுத்தம் செய்வது என வேலை செய்து வந்தார். வாய்ப்புகளுக்காக இந்த வேலைகளைச் செய்துவந்தாலும், தன் செலவுகளுக்காக வாட்ச்மேனாகப் பணியாற்றினார்.

மனோஜ் பாஜ்பாய், ஷெளரப் ஷுக்லா முதலான பெரிய நடிகர்கள் நடித்து வந்த சாக்‌ஷி நாடகக் குழுவில் சிறிய வேடங்கள் நடித்து, அதன்மூலம் தேசிய நாடகப் பள்ளியில் இணையும் வாய்ப்பைப் பெற்றுவிடலாம் என நம்பினார். மனோஜ் பாஜ்பாய் முன்னணி கதாபாத்திரமாக நடித்த ‘உல்ஜான்’ என்ற நாடகத்தில், நவாசுதீனுக்கு மரமாக நடிக்கும் வேடம் தரப்பட்டது. தொடர்ந்து இரண்டு மணி நேரம் கைகளை விரித்தபடி நின்ற நவாசுதீனுக்கு இந்த நாடகம் தேசிய நாடகப் பள்ளியில் நான்கு ஆண்டுகள் பயிலும் வாய்ப்பைப் பெற்றுத் தந்தது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது பயணம் சினிமா வாய்ப்புகளைத் தேடி மும்பையை நோக்கியிருந்தது.

மும்பையில் பெரிதாக எந்த வாய்ப்புகளும் அவருக்கு கிடைக்கவில்லை. சொந்த ஊருக்குப் போனால், அங்கு இருக்கும் நண்பர்கள், “நீ எப்படி ஹீரோ ஆக முடியும்? நீ ஒல்லியாகவும் கறுப்பாகவும் இருக்கிறாய்” எனக் கேலி செய்திருக்கிறார்கள். அதனால் ஊருக்குத் திரும்பிப் போக முடியாத சூழ்நிலையில், செலவுகளுக்காக சின்ன வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். சச்சின் டெண்டுல்கர் நடித்த ஒரு குளிர்பான விளம்பரம், மம்மூட்டி நடித்த `பாபாசாகேப் அம்பேத்கர்’ முதலானவற்றில் நவாசுதீன் சித்திக்கை நம்மால் அடையாளம் காண முடியும்.

1999-ம் ஆண்டு அமிர் கான் நடித்த ‘சர்ஃபரோஷ்’ திரைப்படத்தில் காவல்துறையினரிடம் அடிவாங்கும் துணை நடிகர் வேடத்தில் 50 நொடிகள் வந்தார் நவாசுதீன். அதன் பிறகு, வசூல்ராஜா திரைப்படத்தின் ஒரிஜினல் பதிப்பான ‘முன்னாபாய் MBBS’-ல் திருடன் வேடத்தில் நடித்தார். ”இவன் பார்ப்பதற்கு ஏழை மாதிரி இருக்கிறான். இவனுக்கு ஏழை வேடங்கள் ஏதாவது கொடுங்கள்” என்று அப்போதைய இயக்குநர்கள் சொல்வார்களாம். திருடன், பிச்சைக்காரன், பிக் பாக்கெட் - இதுதான் அவருக்கு அப்போது கொடுக்கப்பட்ட ரோல்கள்.

`சத்யா’ திரைப்படத்தை ராம் கோபால் வர்மா இயக்கியபோது, அதன் துணை இயக்குநர்களில் ஒருவரான அனுராக் காஷ்யப்பின் அறிமுகம் நவாசுதீனுக்கு கிடைத்திருக்கிறது. அந்த அறிமுகத்தால் அனுராக் காஷ்யப் இயக்கிய ‘பிளாக் பிரைடே’ திரைப்படத்தில் நவாசுதீனுக்கு கொஞ்சம் பெரிய ரோல் அளிக்கப்பட, வாய்ப்பை மிகச் சிறப்பாகப் பயன்படுத்திக்கொண்டார் நவாசுதீன்.

2010-ம் ஆண்டு வெளிவந்த ‘பீப்ளி லைவ்’ திரைப்படத்தில் நவாசுதீனுக்கு பத்திரிகையாளர் வேடம் கிடைத்தது. அது எல்லோராலும் பேசப்பட, வித்யா பாலன் நடித்த ‘கஹானி’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரமான போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடம் அவருக்குத் தரப்பட்டது. “40 கிலோமீட்டர் பயணம் செய்து, முசாபர்நகர் சென்று, ‘கஹானி’யில் போலீஸ் உடையணிந்த என்னைப் பார்த்து என் தாய் தந்தையர் மகிழ்ந்தனர்” என்று அதை நினைவுகூர்கிறார் நவாசுதீன்.

மீண்டும் அனுராக் காஷ்யப் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. ஆனால், இந்த முறை முன்னணி கதாபாத்திரம் அவர்தான். படத்தின் பெயர் ‘கேங்க்ஸ் ஆஃப் வாசேபூர்’. எந்த மனோஜ் பாஜ்பாய் நாடகத்தில் மரமாக இரண்டு மணி நேரம் நின்றாரோ, அதே மனோஜ் பாஜ்பாய்க்கு மகனாக நடித்தார். பைஜல் கான் என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் ஹீரோவாக நடித்த நவாசுதீன் அதற்காகப் பெரும் வரவேற்பைப் பெற்றார்.

2012-ம் ஆண்டு, நவாசுதீன் சித்திக் வாழ்க்கையை மாற்றியமைத்தது. அவர் நடித்த திரைப்படங்களான கேங்க்ஸ் ஆஃப் வாசேபூர், தலாஷ், தேக் இந்தியன் சர்க்கஸ் ஆகிய திரைப்படங்களுக்காக அவருக்கு தேசிய விருது அளிக்கப்பட்டது.

அதன் பிறகு, பாலிவுட் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக நவாசுதீன் சித்திக் மாறிப்போனார். சல்மான் கான், ஷாருக்கான் இருவருக்கும் வில்லனாக நடித்துவிட்டார். இதுவரை அவர் முக்கிய கதாபாத்திரங்கள் ஏற்று நடித்தவற்றில், ஒன்பது திரைப்படங்கள் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டுள்ளன.

நவாசுதீன் சித்திக் பாலிவுட் குடும்பப் பின்னணியிலிருந்து வந்தவரல்ல; சிக்ஸ் பேக், வெள்ளைத்தோல் எனப் பாலிவுட் ஹீரோக்களுக்கான பிரத்யேகத் தோற்றம் கொண்டவரும் அல்ல. ஆனால், மிகத்திறமையான நடிகர். அவரது நடிப்பு யதார்த்தம், மெதட் ஆக்டிங் முதலான பதங்களுக்கும் அப்பாற்பட்டது. சாதாரண வட இந்தியக் குடிமகனாக அவரை நம்மால் காண முடியும்; தான் ஏற்கும் பாத்திரமாக மாறிவிடும் திறமை அவருக்கு இருக்கிறது.

அதனால்தான் அவரை கஞ்சா புகைத்துக்கொண்டு, அடுத்த நொடி என்ன செய்வான் என அறிய முடியாத கேங்ஸ்டராக (கேங்க்ஸ் ஆஃப் வாசேபூர்) நம்மால் காண முடிகிறது. அடுத்தவர்களைப் பற்றியே எப்போதும் புறணி பேசும் அரசு அலுவலராகவும் (தி லஞ்ச்பாக்ஸ்), இறந்த மனைவிக்காக முழு மலையொன்றை உடைத்த தசரத் மாஞ்சியாகவும் (மாஞ்சி), தேசங்களுக்கு அப்பாற்பட்டு இந்திய குடிமகனுக்கு உதவும் பத்திரிகையாளனாகவும் (பஜ்ரங்கி பாய்ஜான்), கொடூரமான சைக்கோ கில்லராகவும் (ராமன் ராகவ் 2.0), நேர்மை தவறாத காவல்துறை அதிகாரியாகவும் (ரயீஸ்) நம்மால் ரசிக்க முடிகிறது.

நவாசுதீன் சித்திக் தற்போது கேன்ஸ் திரைப்பட விழாவில் நந்திதா தாஸ் இயக்கிய `மண்ட்டோ’ திரைப்படத்துக்காகப் பங்குபெற சென்றுள்ளார். நவாசுதீன் சித்திக்கால் மட்டுமே ஒரே நேரத்தில் மதங்களின் பெயரால் நடத்தப்படும் வன்முறைகளுக்கு எதிராகத் தன் வாழ்நாளெல்லாம் எழுதிய சாதத் ஹசன் மண்ட்டோவாகவும், மத வன்முறைகளைத் தூண்டியதாகப் பல முறை குற்றம்சாட்டப்பட்ட சிவசேனா தலைவரான பால் தாக்கரேவாகவும் நடிக்க முடியும்.

திரைக் கலைஞர்கள்மீது மதச்சாயம் பூசுவதை எதிர்த்து ஒரு வீடியோ பதிவில் நவாசுதீன் சித்திக், தன்னை அனைத்து மதங்களுக்கும் பொதுவானவன் எனவும், தான் 100 சதவிகிதம் கலைஞன் எனவும் கூறினார். ஆம், நவாசுதீன் சித்திக் நூறு சதவிகிதம் சிறப்பான கலைஞன் தான்!

பிறந்தநாள் வாழ்த்துகள் நவாசுதீன்!