Published:Updated:

கங்குலி, தோனிகளைவிட அதிகம் கொண்டாடப்பட வேண்டிய ஹாக்கி கேப்டன் சந்தீப்! - 'சூர்மா' படம் எப்படி? #Soorma

இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் சிங் வாழ்க்கை வரலாறாக வெளியாகியிருக்கும், 'சூர்மா' திரைப்படத்தின் விமர்சனம்.

கங்குலி, தோனிகளைவிட அதிகம் கொண்டாடப்பட வேண்டிய ஹாக்கி கேப்டன் சந்தீப்! - 'சூர்மா' படம் எப்படி? #Soorma
கங்குலி, தோனிகளைவிட அதிகம் கொண்டாடப்பட வேண்டிய ஹாக்கி கேப்டன் சந்தீப்! - 'சூர்மா' படம் எப்படி? #Soorma

'தங்கல்', 'மேரி கோம்', 'எம்.எஸ்.தோனி' போன்ற பல ஸ்போர்ட்ஸ் பயோ-பிக் படங்களைத் தொடர்ந்து, இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் சிங்கின் வாழ்க்கை வரலாற்றை சினிமாவாகச் சொல்கிறது, 'சூர்மா' திரைப்படம். ஹரியானாவில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர், சந்தீப் சிங். குடும்பமே ஹாக்கி விளையாட்டில் ஆர்வமாக இருக்கிறது. இவரின் அண்ணன் பிக்ரம்ஜித் சிங்கும் ஒரு ஹாக்கி வீரர். சந்தீப் தான் காதலிக்கும் பெண்ணுக்காக ஹாக்கி போட்டியில் களமிறங்குகிறார். பிறகு, ஒரு விபத்தில் சிக்கி கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கால்கள் செயலிழந்த நிலையில் சக்கர நாற்காலியில் முடக்கப்படுகிறார். எப்படி அதிலிருந்து மீண்டு வந்து இந்திய ஹாக்கி அணியை வெற்றிபெறச் செய்கிறார் என்பதே 'சூர்மா' சொல்லும் கதை. 

தடங்கல், அவமானம், ஆதரவின்மை இப்படிப் பல எதிர்வினைகளை சந்தித்தாலும், 'தொடந்து முயற்சி செய்' என்ற ஒற்றைக் குறிக்கோளுடன் செயல்படும் கதாபாத்திரமாக, சந்தீப் சிங் (தில்ஜித் தோசாஞ்), இந்தியப் பெண்கள் ஹாக்கி அணியின் பிளேயராகவும், சந்தீப் சிங்கின் காதலியாகவும் ஹர்ப்ரீத் சிங் (டாப்ஸி) நடித்திருக்கிறார்கள். இவர்கள் இருவரைச் சுற்றியே கதை முழுவதும் பயணிக்கிறது. ஹாக்கி பிளேயரான ஹர்ப்ரீத் மீது காதல் கொண்ட பிறகே, சந்தீப் தன்னை ஒரு ஹாக்கி பிளேயராக உருமாற்றிக்கொள்ள முயற்சி செய்கிறார். முயற்சிகள் பலன் தர ஹாக்கி மீதும் காதல் கொள்ள ஆரம்பிக்கிறார்.

2004-ம் ஆண்டு கோலாலம்பூரில் நடந்த 'சுல்தான் அஸ்லான் ஷா' ஹாக்கி போட்டி மூலமாக சர்வதேச ஹாக்கிப் போட்டிகளில் பங்கேற்க ஆரம்பித்து, 2009-ம் ஆண்டு இந்திய அணியின் கேப்டனாக மாறுகிறார். இதற்கிடையில்தான் வாழ்கையையே திருப்பிப்போடும் அந்தக் கொடூர விபத்து நிகழ்கிறது. விடா முயற்சியால் தன்னை குணப்படுத்திக்கொண்டு மைதானத்தில் களமிறங்குகிறார். இட்ஸ் வெரி இன்ஸ்பைரிங்!

மென்மையான ஹீரோ என்ற பெயரை உடைத்து அசாதாரண ஹாக்கி வீரராகக் களமிறங்கியிருக்கும் தில்ஜித்துக்கு அவரது கரியரில் இது மிக முக்கியமான படம். ஹாக்கியில் அர்ப்பணிப்பும், காதலில் குறும்புத்தனமும், குடும்பத்தில் பாசமும் என வெரைட்டி காட்டி நடித்திருக்கிறார். இருப்பினும், படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை ஒரேமாதிரியான தோற்றத்திலேயே இருக்கிறார். வயதுக்கான முதிர்ச்சியை உடல் மொழியில்கூட கட்டாமலிருப்பது, மிகப்பெரிய மைனஸ்.

மெலிதான உடல், நீளமான முடி, எண்ணெய் வழியும் சருமம் என அச்சு அசல் ஹாக்கி பிளேயராக டாப்ஸி. 'ஆடுகளம்' படத்துக்குப் பிறகு டாப்ஸியைப் பார்ப்பவர்களுக்கு, டாப்ஸியின் டிரான்ஸ்ஃபர்மேஷன் புரியும். மணிரத்னம் இயக்கிய 'தில் சே' படத்தில் உதவி இயக்குநராக இருந்த ஷாத் அலி, இப்படத்தின் இயக்குநர். மணிரத்னத்தின் பெரும்பாலான படங்களை இந்தியில் ரீமேக்கியவர். ஆனால், இவர் இதுவரை வேலை பார்த்த படங்களின் சாயல் 'சூர்மா'வில் துளிகூட இல்லை.

ஒரு ஹாக்கி விளையாட்டு தொடர்பான படத்துக்கு எப்படியான மெனக்கெடல்கள் இருக்கவேண்டுமோ, அப்படியாக தேடித் தேடி காட்சிகளைப் படத்தில் சேர்த்திருக்கிறார். கமர்ஷியல் யுக்திக்குக் கொஞ்சம்கூட இடம்கொடுக்காமலிருப்பதும், படத்தின் தரத்தைக் கூட்டுகிறது. படம் பார்த்து வெளியில் வருபவர்களுக்கு அந்த இடைவேளைக் காட்சி கண்ணை விட்டு அகலாது!

சந்தீப் குண்டடிபட்டுக் கிடப்பதையும், மருத்துவமனையில் அவர் படும் அவஸ்தையையும் வலியோடு சேர்த்து கேமராவில் கடத்தியிருக்கிறார், ஒளிப்பதிவாளர் சிரந்தன் தாஸ். ஆனால், இரண்டு கால்களும் செயலிழந்து, இரண்டு வருடம் சந்தீப் அனுபவித்த வலிகளை ஒரே பாடலில் முடித்திருப்பதுதான் கொஞ்சம் நெருடல். அதுவரை சீரியஸாக போய்க்கொண்டிருந்த கதை, திடீரென்று பதர்த்துப் போகிறது. இதற்கு முன் வெளிவந்த 'எம்.எஸ்.தோனி', 'மேரி கோம்' போன்ற படங்களின் கதை நமக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தாலும், அதற்கான திருப்புமுனைகளும், போட்டிகளின் கடைசி நேரப் பரபரப்பையும் ஆடியன்ஸுக்குக் அத்தனை நேர்த்தியாகக் கடத்தியிருப்பார்கள். ஆனால், சந்தீப் சிங்கின் கதை பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லாதபோது, திரைக்கதையை இன்னும் சுவாரஸ்யமாக அமைத்திருக்கலாம். ஏனெனில், கிரிக்கெட் வீரர்களான கங்குலி, தோனியைவிட அதிகம் கொண்டாடவேண்டிய ஹாக்கி வீரர், சந்தீப் சிங்.

வழக்கமாக பயோபிக் படங்களில் மிஸ்ஸாகும் காமெடி இப்படத்தில் கொஞ்சம் ஹைலைட்டாக இருக்கிறது. குறிப்பாக, இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளராக வரும் விஜய் ராஸின் காமெடி அட்டகாசம். பாகிஸ்தான் அணிக்கு தடாலடி கொடுக்கும் காட்சிகளும், சந்தீப் சிங்கை 'ஃப்ளிக்கர் சிங்' எனப் பெருமைப்படுத்தும் காட்சிகளும் ஆஸம்! சங்கர்-இஷான்-லாயின் இசை படத்துக்கு மிகப்பெரிய பலம். அத்தனை பாடல்களும் தன்னம்பிக்கை ஊட்டுகிறது.

'A Champion died, But the legend was born' என்ற படத்தின் வரி பல தாக்கங்களுக்கு நம்மை ஆளாக்குகிறது. 'காதலுக்காக ஓடித்தான் ஹாக்கியில் ஜெயிக்கிறார்' என்ற பாணியிலேயே திரைக்கதை எழுதப்பட்டுள்ளது. அதைத் தவிர்த்து, பல விஷயங்கள் சந்தீப் சிங் வாழ்க்கையில் இருக்கின்றன. குறிப்பாக, வலியோடு கடந்த அந்த இரண்டு ஆண்டு அனுபவம்.

எனவே, காதல் - ஸ்போர்ட்ஸ் இவை இரண்டையும் இன்னும் கொஞ்சம் கவனத்துடன் சமன் செய்திருந்தால், 'சூர்மா' கூடுதல் அப்ளாஸ் அள்ளியிருக்கும்.