Published:Updated:

மராத்திய கிளாசிக் #Sairat ரீமேக்... ஸ்ரீதேவி மகளின் முதல் படம்... எதிர்பார்ப்புகளை கிளப்பிய #Dhadak படம் எப்படி?

ர.சீனிவாசன்

ஆணவப் படுகொலையின் தோலுரித்த #Sairat படத்தின் ரீமேக்... ஸ்ரீதேவி மகளின் அறிமுகப் படம்! #Dhadak படம் எப்படி?

மராத்திய கிளாசிக் #Sairat ரீமேக்... ஸ்ரீதேவி மகளின் முதல் படம்... எதிர்பார்ப்புகளை கிளப்பிய #Dhadak படம் எப்படி?
மராத்திய கிளாசிக் #Sairat ரீமேக்... ஸ்ரீதேவி மகளின் முதல் படம்... எதிர்பார்ப்புகளை கிளப்பிய #Dhadak படம் எப்படி?

சாதிய கொடுமைகளால் இறந்து போன காதல்கள், காதலர்களின் கதைகள் சினிமாவுக்கும் புதிதல்ல, நிஜ வாழ்க்கைக்கும் புதிதல்ல. செல்லுலாய்டில் இத்தகைய கதைகளுக்கு உயிர் கொடுக்கும்போது, வியாபார சமரசமின்றி, இயல்பு வாழ்க்கையின் பிரதிபலிப்பாக ஆணவப் படுகொலைகள், கௌரவப் படுகொலைகள் அதன் காரணிகள் மற்றும் அதன் கோரத்தைப் பதிவு செய்யும்போது, அத்தகைய படங்கள் கிளாசிக் அந்தஸ்தைப் பெற்றுவிடும். 2015-ம் ஆண்டு வெளிவந்த மராத்தியப் படமான சாய்ராட் (Sairat) இதற்கு ஒரு சிறந்த உதாரணம். பல்வேறு விருதுகள், மற்ற மொழிகளில் ரீ-மேக்குகள் என இப்படத்துக்குக் கிடைத்த வரவேற்பு ஏராளம். அதன் ஹிந்தி ரீ-மேக்கான ‘Dhadak’ (இதயத் துடிப்பு) மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரை நாயகியாகவும், ‘Beyond the Clouds’ படத்தில் கவனம் ஈர்த்த இஷான் கத்தரை நாயகனாகவும் கொண்டு வெளிவந்துள்ளது. எதிர்பார்ப்புகளைக் கிளப்பிய #Dhadak படம் எப்படி?

பார்த்தவி சிங்க் (ஜான்வி கபூர்) உயர் சாதி பெண். அவளின் தந்தை ரத்தன் சிங்க் அரசியல் செல்வாக்கு மிக்கவர். அதே ஊரில் ஒரு ஹோட்டல் வைத்து நடத்துபவரின் மகன் மதுகர் பாக்லாவிற்கு (இஷான் கத்தர்) பார்த்தவியின் மீது காதல். பார்த்தவிக்கும் அந்தக் காதல் மலர்ந்துவிட விஷயம் வெளியே கசிகிறது. தன் மகள் வேறு சாதி பையனைக் காதலிப்பதா என அவனையும் அவன் நண்பர்களையும் காவல்துறை உதவியுடன் முடிக்க நினைக்கிறார் பார்த்தவியின் தந்தை. கடைசி நேரத்தில் பார்த்தவி அவர்களைக் காப்பாற்றிவிட ஊரை விட்டு ஓடுகிறது காதல் ஜோடி. காதல் வாழ்க்கையில் இருந்த அன்பு திருமண வாழ்க்கையிலும் இருந்ததா? சில வருடங்கள் கழித்து இந்த ஜோடியை மீண்டும் சந்திக்கும் பார்த்தவியின் குடும்பம் இவர்களை ஏற்றுக் கொண்டதா?

‘சாய்ராட்’ படத்தின் கதையை மட்டும் வைத்துக் கொண்டு, பாலிவுட்டுக்கு ஏற்றவாறு படத்தை மாற்றுகிறேன் என்று தன் இஷ்டத்துக்கு துவம்சம் செய்திருக்கிறார்கள். ‘சாய்ராட்’ படத்தின் வெற்றிக்கு மிக முக்கியக் காரணம், அது ஒரு பின்தங்கிய கிராமத்தின் இயல்பு வாழ்க்கையை அப்படியே பிரதிபலித்தது. அந்த ஊரில் நிலவும் சாதிய ஏற்றத்தாழ்வு, கிரிக்கெட் கலாசாரம், பெண்களை அடக்கி ஆளும் தன்மை என அந்தப் படம் பேசிய அரசியல் ஏராளம். அந்தக் காரத்தில் எல்லாம் உப்பைக் கொட்டி சப்பென ஆக்கியிருக்கிறது தடக். இருவருக்கும் இடையேயான காதல் காட்சிகளை அத்தனை சிரத்தையுடன் காட்டிய தடக், சமுதாய கட்டமைப்பு, சாதிய, வர்க்க சண்டைகள் போன்றவற்றைக் கண்டுகொள்ளாமல் தடம் புரண்டிருக்கிறது. இதனாலேயே இவர்களின் காதலுக்கு எதிரியாக நிற்பது ஜாதிதான் என்பதை எளிதாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. ஒருவேளை ஹிந்திக்கு இது போதும் என்று நினைத்து விட்டார்களோ என்னவோ?

ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரின் முதல் படம். அறிமுகப் படத்தை சரியாகத் தேர்ந்தெடுத்தவர், நடிப்பிலும் பாஸ் மார்க் பெறுகிறார். மிடுக்குடன் திரியும் பெண் கதாபாத்திரம் என்பது இவருக்குச் சரியாக பொருந்தியிருக்கிறது. சினிமாத்தனத்துடன், உருகி உருகிக் காதலித்து, தன் பின்னால் சுற்றும் நாயகனை ஜஸ்ட் லைக் தட் டீல் செய்வது, எவ்வித சலனமும், நாடகத் தன்மையும் இன்றி, “ஐ லவ் யூ” சொல்லிவிட்டு, நாயகனையும் சொல்ல சொல்லி மிரட்டுவது, காதலனையும், அவன் நண்பர்களையும் போலீசிடம் இருந்து காப்பாற்றுவது போன்ற காட்சிகளில் கைதட்டல் பெறுகிறார். அடுத்தடுத்து நல்ல படங்களைத் தேர்ந்தெடுத்தால் குட்டி மயிலும் ஒரு ரவுண்டு வரலாம்.

இஷான் கதாபாத்திரத்தை பொறுத்தவரை, இதுவரை காதல் அமரகாவியங்களில் நாயகனுக்கு எல்லாம் எந்த வேலையோ அதுதான் இவருக்கும். விடலைப் பருவக்காதல் கணக்காக ஜான்வி செல்லும் இடமெல்லாம் பின்னாலே ஓடுவது, பெற்றோர்கள் பேச்சை கேட்காமல் நண்பர்களுடன் கனவு கண்டுகொண்டு திரிவது எனப் பார்த்து பழகிய பாத்திரம்தான். ஆனால், அதைச் சிரத்தையுடன் செய்திருக்கிறார். தன் காதலி வந்திருக்கிறாள் என்ற செய்தி தெரிந்தவுடன், டிப்டாப்பாக ட்ரெஸ் செய்து கொண்டு, துள்ளல் நடை, நடனத்துடன் அவர் ஓடும் காட்சி ஒன்றுபோதும்... இது மாதிரி சரியான கதாபாத்திரங்களை பண்ணுங்க பாஸ்! அவரின் நண்பர்களாகத் தோன்றும் கோகுல் மற்றும் புருஷோத்தின் கதாபாத்திரங்கள்தான் முதல் பாதிக்கு கூடுதல் பலம் சேர்கிறார்கள். ஆனால், உருவத்தையும், உயரத்தையும் வைத்துக் கிண்டல் செய்யும் நகைச்சுவை (?) காட்சிகள் இதில் தேவையா பாஸ்?

முதல் ஒரு மணி நேரம் காதல் காட்சிகள், காமெடி, பாடல்கள் எனத் திருவிழாவாக நகர்கிறது. அந்த நேர்த்தியைத் தேங்கி நிற்கும் இரண்டாம் பாதியிலும் சேர்த்திருக்கலாம். சாய்ராட்டிற்கு கமர்ஷியல் சாயம் பூசப் போகிறேன் என்று முடிவு எடுத்த பிறகு, இரண்டாம் பாதியை மட்டும் ஏன் நாடகமாக மாற்றினார்கள் என்பது புரியவில்லை. 

சாதியப் பிரச்னைகள் தவிர்த்து சாய்ராட் செய்த மற்றுமொரு சாதனை, லூசு பெண்களாக வரும் நாயகி கதாபாத்திரங்களை உடைத்து எரிந்தது. கிட்டத்தட்ட அதில், ஒரு ஹீரோ என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதை ஹீரோயின் செய்வாள். அதை இங்கேயும் அப்படியே வைத்தது மிகப்பெரிய ஆறுதல். நாயகி, போலீசிடம் இருந்து காப்பாற்றுகிறாள், தப்பித்து ஓடும்போது பயத்தில் நடங்கும் ஹீரோவுக்கு தைரியம் கொடுக்கிறாள். ஊரை விட்டு ஊரு வந்து கஷ்டத்தில் இருக்கும்போது தைரியமாக முடிவுகள் எடுக்கிறாள்.

ராஜஸ்தானின் உதய்பூர்தான் கதைக்களம் என்று முடிவு செய்தவுடன் அதன் வாழ்வியலை இன்னமும் ஆழமாகப் பதிவு செய்திருக்கலாம். சாதிக் கொடுமைகள் இன்னமும் அங்கு நிகழ்கின்றன என்பதை இன்னமும் அழுத்தம் திருத்தமாக காட்டியிருக்கலாம். அது படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்குக் கூடுதல் வலு சேர்த்திருக்கும். ஆனால், அதுவரை, சாதி பிரச்னைகள் குறித்து ஒன்றிரண்டு காட்சிகளில் மட்டும் கடந்துவிட்டு, இறுதியில் மட்டும் ஆணவப் படுகொலை குறித்துப் பேசுவது படத்தை மொத்தமாக காலி செய்கிறது. அதன் கோரத்தை நமக்குக் கடத்த முடியாமல் திரைக்கதை திணறியிருக்கிறது. படத்தின் கருவே அதுதான் என்றானபின், அதற்கு வேண்டிய முக்கியத்துவத்தை முதல் காட்சியிலிருந்தே கொடுத்திருக்கலாமே? எல்லாவற்றிற்கும் மேலாக, பல்வேறு பாராட்டுகளை வாங்கிக் குவித்த சாய்ராட்டின் இறுதிக் காட்சியை இப்படியா மாற்றி வைப்பது? அடப்போங்க பாஸ்!

உதய்பூரின் அழகை அப்படியே அள்ளி வந்திருக்கும் விஷ்ணு ராவின் கேமரா, நெரிசலான கொல்கத்தாவிலும் புகுந்து விளையாடியிருக்கிறது. படத்தின் மற்றொரு பெரிய பலம் அஜய்-அதுல் சகோதரர்களின் பாடல்கள். அதே சாய்ராட் படத்தின் இசையமைப்பாளர்கள்.

‘சாய்ராட்’ படத்தை முற்றிலுமாக மறந்துவிட்டு ‘தடக்’ படத்தைப் பார்த்தால் முதல் பாதி நிச்சயம் ரசிக்க வைக்கும். ஏனென்றால் அது எல்லாப் பெட்டிகளிலும் டிக் செய்யும் பிளாக்பஸ்டர் பாலிவுட் திரைக்கதை. ஆனால், இரண்டாம் பாதியில் அப்பட்டமாக சாய்ராட் நோக்கி நகரும் காட்சிகளில் நிறையத் தடுமாறி இருக்கிறார்கள். ஒரே பாட்டில் முன்னேறுவது, சண்டை போட்டு பின் சேருவது போன்ற இடங்களில் ஆங்காங்கே நாடகத்தன்மை எட்டிப் பார்க்கிறது. ஆனால், பேசவேண்டிய சாதிய பிரச்னைகளை இன்னமும் தெளிவாக போட்டு உடைத்திருந்தால், சாய்ராட்டின் அந்த பதைபதைக்க வைக்கும் கிளைமாக்ஸ் காட்சியை அப்படியே வைத்திருந்தால் ‘தடக்’ நம் மனதில் தடம் பதித்திருக்குமோ என்னவோ?