Published:Updated:

அனில் கபூர், ஐஸ்வர்யா ராய், ராஜ்குமார் ராவ், ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட கதை... #FanneyKhan படம் எப்படி ?

அனில் கபூர், ஐஸ்வர்யா ராய், ராஜ்குமார் ராவ், ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட கதை... #FanneyKhan படம் எப்படி ?
அனில் கபூர், ஐஸ்வர்யா ராய், ராஜ்குமார் ராவ், ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட கதை... #FanneyKhan படம் எப்படி ?

‘Everybody’s Famous’ என்ற பெயரில் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட பெல்ஜியப் படத்தின் ரீமேக்! எப்படியிருக்கிறது #FanneyKhan?

ரன் ஜோஹரின் ‘ஏ தில் ஹை முஷ்கில்’ படத்தில் வசீகரித்த ஐஸ்வர்யா ராய், அதன் பிறகு 2 வருடங்கள் பாலிவுட்டில் தலை காட்டவில்லை. அவரின் கம்பேக் படமாகக் கருதப்பட்ட இதில், அனில் கபூர், ராஜ்குமார் ராவ், திவ்யா தத்தா என நட்சத்திரப் பட்டாளமே சேர்ந்து கொள்ள, #FanneyKhan இந்த வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்கள் வரிசையில் இருந்தது. அதற்கு மற்றுமொரு காரணம், படம் ‘Everybody’s Famous’ என்ற பெயரில் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட பெல்ஜியப் படத்தின் ரீமேக்! எப்படியிருக்கிறது #FanneyKhan?

பெரிய பாடகராகும் லட்சியத்தில் தோல்வியுறும் ஃபன்னே கான் என்கிற பிரஷாந்த் குமார் ஷர்மா (அனில் கபூர்), தன் மகள் லதாவை (பிஹு சேன்ட்) எப்படியேனும் ஒரு பெரிய பாடகியாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் உழைக்கிறார். ஆனால், லதா உடல் பருமனாக இருப்பதால், போதிய திறமையிருந்தும் புறம் தள்ளப்படுகிறாள். டீன் ஏஜ் மகளைப் பாடகியாக்க அவளின் ஆதர்சப் பாடகி பேபி சிங்கை (ஐஸ்வர்யா ராய்) கடத்துகிறார் அனில். அதற்கு அனிலின் நண்பர் அதிர் (ராஜ்குமார் ராவ்) உதவுகிறார். ஐஸ்வர்யா ராயை பிணைக் கைதியாக வைத்துக்கொண்டு அவரின் மேனேஜரையும், இயக்குநரையும் லதாவின் பாடல் ஆல்பத்தை வெளியிடச் சொல்லி மிரட்டுகிறார் அனில். சொதப்பலாக இவர் போட்ட கடத்தல் டிராமாவை TRP கன்டென்ட்டாக மாற்றி காசு பார்க்க நினைக்கிறது டிவி சேனல். இதில் யார் வெற்றி அடைந்தார்கள்? லதா பாடகியானாளா?

தன் மகள் பிறப்பதற்கு முன், மேடை நாடக கலைஞனாக ரெட்ரோ ஸ்டைலில் தோன்றிப் பாடி ஆடும் அனில் கபூரின் அந்த அறிமுகக் காட்சி அசத்தல். ஆனால், மேடையை விட்டு கீழே இறங்கி இயல்பான காட்சிகளில் நடிக்கும்போதும் அப்படியே ஓவர் ஆக்டிங் செய்து கொண்டிருந்தால் எப்படி பாஸ்? அழுதாலும் ஓவர் ஆக்டிங், நடந்தாலும் ஓவர் ஆக்டிங்... இவ்வளவு ஏன்? முகமூடியை மாட்டிக்கொண்டு கடத்தல்காரனாக வரும்போதும் அதே உடல் மொழி! முடியல கபூர் சார்! அவரின் அப்பாவி நண்பனாக வரும் ராஜ்குமார் ராவ் பல இடங்களில் சிரிக்க வைக்கிறார். முக்கியமாக, ஐஸ்வர்யா ராயை கடத்தி கொண்டு வந்தவுடன், முகத்தில் கர்சீப்பை கட்டிக்கொண்டு “பிக் ஃபேன்!” என்று அவரிடமே தன்னை அறிமுகப்படுத்தி கொள்ளும் காட்சி குபீர் சிரிப்பு ரகம். அந்தக் கடத்தல் காட்சியில் வந்த இயல்பான நகைச்சுவை, ஏனோ மற்ற காட்சிகளில் வலிந்து திணிக்கப்பட்டதாகவே தெரிகிறது. அதனாலேயே படத்தின் கதையோடு ஒன்ற முடியவில்லை.

ராஜ்குமார் ராவிற்கு பிறகு படத்தில் ஈர்ப்பது ஐஸ்வர்யா ராய். உயர் மேடை நட்சத்திரமாக ரசிகர்கள் முன் தோன்றும்போது தன் நடனத் திறமையால் உள்ளத்தைக் கொள்ளையடிக்கிறார். உங்கள் Wardrobe Malfunction ஆவது போல நடிக்க வேண்டும் என்று ப்ரொடியூசர் விரும்புகிறார் என்று கூறும் மேனேஜரின் காரை விட்டு கோபத்துடன் இறங்கிச் செல்லும்போதும், தன்னைக் கடத்திவிட்டார்கள் என்றவுடன் பதற்றமடையாமல் செயல்படுவதும், அதே கடத்தல்காரர்கள் நல்லவர்கள் என்று தெரிந்தவுடன் அமைதியாகி அவர்களுக்கு ஒத்துபோவதும் என லைக்ஸ் அள்ளுகிறார். வெல்கம் பேக் ஐஸ்! படத்தின் மற்றொரு முக்கியக் கதாபாத்திரமான லதா ஷர்மவாக வரும் பிஹு கவனம் ஈர்க்கிறார். பருமனான உடலை வைத்து இருந்தாலும், பாடல் காட்சிகளில் அற்புதமாக நடனமாடி, பாடல்களுக்குச் சரியான உச்சரிப்பு கொடுத்து தான் ஒரு தேர்ந்த நடிகைதான் என்று பறைசாற்றுகிறார். அதிலும் இடையே கட்டே இல்லாமல் செல்லும் பாடல் காட்சி ஒன்றில் சலனமின்றி நடித்து ஸ்கோர் செய்கிறார். அவரின் தாயாக வரும் திவ்யா தத்தாவிற்கு பெரும்பாலான காட்சிகளில் சீரியலில் அழும் அம்மா ரோல்தான் என்றாலும், சில காட்சிகளில் அவர் மட்டும்தான் தெளிவாக இருக்கிறாரோ என்ற எண்ணத் தோன்றுகிறது. முழுக்க முழுக்க அந்தத் தெளிவான கதாபாத்திரமாகவே அவரை வைத்திருக்கலாமே?

சட்டையர் (Satire) வகை காமெடி படமான ‘Everybody’s Famous’ படத்தின் கதையில் பெரிய மாற்றங்கள் எதுவும் செய்யாமல், ஒன்றரை மணி நேரம் மட்டும் ஓடும் அந்தப் படத்தை இரண்டு மணி நேரத்திற்கும் அதிகமாக ஓட வைக்க இழுத்திருக்கிறார்கள். அதற்கு திரைக்கதையில் செய்த மாற்றங்கள், கதாபாத்திரங்களின் ஆழத்தைக் கேலி கூத்தாக ஆக்கியிருக்கிறது. படத்தின் நாடகத் தன்மையை கூட்டியிருக்கிறது. பெல்ஜியமில் வேண்டுமானால் மேடை பாடகர்களை பெரிய ஸ்டாராக கொண்டாடலாம். இங்கே இந்தியாவில் அதே நிலைமையா என்ன? பேபி சிங்காக தோன்றும் ஐஸ்வர்யா ராய் கதாபாத்திரத்தை ஒரு பாலிவுட் சூப்பர்ஸ்டார் ரேஞ்சிற்கு படத்தில் கொண்டாடியிருக்கிறார்கள். இங்கே அவ்வகை பாடகர்களுக்கு அத்தகைய வரவேற்பு நிஜத்திலும் இருந்திருந்தால் நன்றாகவிருக்கும்.

திறமையுள்ள அதே சமயம் உடல் பருமனான பெண் என்றால் ஸ்டார் ஆகக் கூடாதா? நாடு முழுவதும் ரசிகர்களைக் கொண்டு, தன் புனைப் பெயரில் வலம் வரும் ஒரு லேடி ஸ்டார், தன் சொந்த விருப்பு வெறுப்புக்காக எப்போதுதான் வாழப் போகிறாள்? என்றுமே அவளை ஒரு TRP கன்டென்டாக, ஒரு பொருளாகத்தான் டிவி சேனல்கள் பார்க்குமா? ஏழைத் தந்தை, தான் அடைய முடியாத இலக்கை தன் பெண் அடைய வேண்டும் என்று ஆசைப்படக் கூடாதா? வாய்ப்புக் கதவுகள் ஏழைக்குத் திறக்காதா? இத்தனை கேள்விகளை உள்ளடக்கிய படம் எப்படியிருக்க வேண்டும்? டெவலப் செய்ய இத்தனை கிளைக்கதைகள் இருந்தும், படம் முழுக்க அனில் கபூரை மட்டும் சுற்றி வருவது எரிச்சல். அதிலும் படத்தின் முக்கியக் கதாபாத்திரம், அடிநாதம் எனப்படும் அவரின் மகள் இல்லாமலே பல காட்சிகள் நகர்கின்றன. இதனாலேயே அவர் ஸ்டார் ஆக வேண்டுமென்ற எதிர்பார்ப்பை இந்த காமாசோமா திரைக்கதை நமக்கு இறுதிவரை கடத்தவே இல்லை. என்னதான் உணர்வுப்பூர்வமான காட்சியாக இருந்தாகும், குற்றவாளியை பிடிக்க வந்த இடத்தில் அதை செய்யாமல், போலீஸும் நின்றுகொண்டு ரியாலிட்டி ஷோ பார்ப்பதெல்லாம் டூ மச்!

படத்தைத் தூக்கி நிறுத்த முயற்சி செய்திருப்பது ஒளிப்பதிவாளர் திருவும், இசையமைப்பாளர் அமித் திரிவேதியும்தான். மேடை நிகழ்ச்சி என்று வரும்போது பிரமாண்ட அரங்குகள் மற்றும் விளக்குகளுக்கு இடையில் ஆச்சரியமூட்டும் கேமரா அப்படியே ஓடாத தொழிற்சாலை கேன்டீன், அடுக்கக குடியிருப்பு எனச் சுற்றி சுழன்றிருக்கிறது. சாதாரண நடத்தர வர்க்கம் வேலை இழந்தவுடன் படும் இன்னல்களைப் பதிவு செய்த ‘அச்சே தின்’ (Achche Din) பாடலும், இறுதி காட்சியில் லதா பாடும் ‘Tere Jaisa Tu Hai’ பாடலும் நெகிழச் செய்கின்றன. படத்தின் நாடகத் தன்மை, ஓவர் ஆக்டிங் போன்றவற்றை குறைத்து, திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் ஈர்த்திருப்பான் இந்த #FanneyKhan!

அடுத்த கட்டுரைக்கு