Published:Updated:

எது தீவிரவாதம்... யார் தீவிரவாதி? ஒரு சாட்டையடி ட்ராமா..! #Mulk

எது தீவிரவாதம்... யார் தீவிரவாதி? ஒரு சாட்டையடி ட்ராமா..! #Mulk
எது தீவிரவாதம்... யார் தீவிரவாதி? ஒரு சாட்டையடி ட்ராமா..! #Mulk

'Anti-Nationals' என்ற வார்த்தை பிரபலமாக இருக்கும் இந்தக் காலகட்டத்தில், Mulk போன்ற ஒரு படம் வருவது சவாலான விஷயம்!

`கோர்ட் ரூம் ட்ராமா' வகை படங்கள் எப்போதும் எல்லாராலும் கவனிக்கப்படுபவை. எடுத்துக்கொண்ட விஷயத்தை மட்டும் அலசும் விதமாக, நீதிமன்ற வளாகத்துக்குள்ளாகவே பெரும்பாலான காட்சிகள் கோக்கப்பட்டிருக்கும். இவ்வகை படங்களின் வெற்றிக்குத் தேவை மூன்றே மூன்று விஷயங்கள்தான். சரியான கதைக் கரு, தெறிக்கும் வசனங்கள், அதற்குத் தேவையான நடிப்பு ஆளுமைகள். இது மட்டும் இருந்துவிட்டால் போதும். திரைக்கதை கொஞ்சம் பலவீனமானதாக இருந்தாலும் கவலைப்படத் தேவையில்லை. ரிஷி கபூர் மற்றும் டாப்ஸி நடிப்பில் வெளிவந்துள்ள 'Mulk' (நாடு) அப்படிப்பட்ட ஒரு கோர்ட் ரூம் ட்ராமாதான்.

இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் இணைந்து ஒற்றுமையாக வாழும் பனாரஸ் பகுதியில் வாழ்கிறது வக்கீலான முரத் அலி முகமதின் (ரிஷி கபூர்) கூட்டுக் குடும்பம். அவரின் தம்பி மகன் ஒரு தீவிரவாத செயலில் ஈடுபட்டு இறந்துவிட, இவர்கள் மொத்த குடும்பத்தையும் குற்றவாளியாகப் பார்க்கத் தொடங்குகிறார்கள் அதிகாரிகள். ரிஷி கபூரின் தம்பியைக் குற்றவாளி எனக் கைது செய்துவிட, பிறப்பால் இந்துவான தன் வக்கீல் மருமகள் ஆர்த்தியின் (டாப்ஸி) உதவியுடன் தாங்கள் நிரபராதிகள் என்பதை நிரூபித்தாரா ரிஷி கபூர்?

'Anti-Nationals' என்ற வார்த்தை பிரபலமாக இருக்கும் இந்தக் காலகட்டத்தில், Mulk போன்ற ஒரு படம் வருவது சவாலான விஷயம்! கொஞ்சம் பிசகினாலும் ஒருதலைப்பட்சமான படம் என்ற விமர்சனம் வரக்கூடிய கதை. (அவ்வாறான விமர்சனங்கள் எப்படியிருந்தாலும் வரும் என்பது வேறு விஷயம்!) உயரமான கம்பியின் மேல் நடக்கும்போது சமநிலையைக் கடைப்பிடிக்க வேண்டிய நிலைமை இயக்குநர் அனுபவ் சின்ஹாவுக்கு! அதைச் சரியாகவும் செய்திருக்கிறார். இவர் இதற்கு முன்பு ஷாருக்கான் நடிப்பில் வெளியான சயின்ஸ் ஃபிக்ஷன் படமான 'ரா-ஒன்' படத்தை எடுத்தவர்.  

இரு மதத்தைச் சேர்ந்தவர்கள் நண்பர்களாக வாழும் பகுதியில், எப்படி ஒருவனின் குற்றச் செயல் அந்த ஒற்றுமையைச் சிதைக்கிறது என்பதைப் படம் இயல்பாக நம் கண் முன்னே விரிக்கிறது. அதுவரை நண்பராகக் கருதப்பட்ட ரிஷிகபூரை மொத்த தெருவில் இருப்பவர்களும் தீவிரவாதியாகப் பார்ப்பது மனிதர்களின் ஆழ்மனதில் பதிந்திருக்கும் வன்மத்தை வெளிக்கொணர மதம் எப்படி ஒரு கருவியாகப் பயன்படுகிறது என்பதை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது. படம், கோர்ட் ரூம் ட்ராமாதான். ஆனால், எடுத்தவுடன் அந்த ஜானரில் நுழையாமல், சம்பந்தப்பட்ட கூட்டுக்குடும்பத்தின் பாசப் பிணைப்பு, சமூகத்துடனான நட்பு என முன் கதைகளைக் கூறிவிட்டு, இவர்கள் தீவிரவாதியா இல்லையா என்ற ட்ராமாவில் நுழைந்தது படத்தின் பெரிய பலம். இதனாலேயே இந்தக் குடும்பம் நிச்சயமாகத் தவறு செய்திருக்காது என்பதை நாம் உணர்ந்துகொண்டு நம்மை அறியாமல், நீதிமன்றத்தில் அனிச்சையாக அவர்கள் பக்கம் அமர்ந்து விடுகிறோம்.

படத்தின் இரண்டு தூண்கள் ரிஷிகபூரும் டாப்ஸியும்தான். அதில் ரிஷிகபூருக்கு பார்த்தவுடன் ஈர்க்கும் ஆளுமை கொண்ட ஒரு பாத்திரம். அதுவரை தன்னை மதித்தவர்கள், ஒரு சந்தேகம், ஒரு குற்றச்சாட்டு என்றவுடன் எப்படி அவரின் மதத்தைக் காரணம் காட்டி விலகிக் கொள்கிறார்கள் என்பதைக் கண்டு வருத்தம் கொள்வதும், தன் இயலாமையை நினைத்துத் தவிப்பதும், தன் வீட்டில் கற்கள் வீசப்படும்போது ஓடாமல் தைரியமாகத் தன் மனைவியைப் பாதுகாக்க நிற்பதும் என நடிப்பில் பல பரிணாமங்களைக் காட்டுகிறார். அதிலும், தன் தம்பி எந்தத் தவறும் தான் செய்யவில்லை என்று உறுதி கூறியவுடன், "உன்னை எப்படியாவது நான் வெளியே கொண்டு வருவேன்!" என்று அவர் கோபத்துடன் கூறும் அந்த 'இன்டர்வல் ப்ளாக்' கைதட்டல் ரகம். 

மற்றொரு வக்கீல் கதாபாத்திரத்தில் வரும் டாப்ஸிதான் படத்தின் ஹீரோ என்றால் நிச்சயமாகப் படம் பார்த்த யாரும் மறுக்க மாட்டார்கள். இதுவரை கிளாமர் ஹீரோயினாக மட்டும் அவரைப் பார்த்தவர்கள் இந்தப் படத்திலிருந்து அவரை வேறு மாதிரி பார்க்கக்கூடும். அவரின் மதத்தையும் சாதியையும் தெரிந்துகொள்ள பெயர் என்ன என்று கேட்கும் அதிகாரியிடம், "ஆர்த்தி முகமது" என்று அவர் பதில் கூறும் இடம், இரண்டு மதத்தைச் சேர்ந்தவளாகவும் தான் இருக்கக் கூடாதா என்ற கேள்வியை முன் வைக்கிறது. டாப்ஸியின் முந்தைய கோர்ட் ரூம் ட்ராமா படமான 'Pink' பேசியது 'பெண்ணியம்' என்றால், இந்தப் படம் "எது தீவிரவாதம்... யார் தீவிரவாதி?" போன்ற கேள்விகளை முன்வைக்கிறது. ரிஷிகபூரையும் குற்றவாளி லிஸ்டில் சேர்த்துவிட, வாதாடும் முழுப் பொறுப்பும் டாப்ஸி மேல் விழுகிறது. அதன் பிறகு, அதுவரை சீறிக்கொண்டிருந்த, ஒரு கை ஓங்கியிருந்த எதிர் தரப்பு வக்கீலை டாப்ஸி தன் வாதங்கள் மூலம் துளைத்து எடுக்கும் அந்தக் 'கவுன்டர் அட்டாக்' வாதங்கள் மிகச் சிறப்பு! போதிய ஆதாரமின்றி சந்தேகத்தின் பேரில் மட்டும் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை அசால்டாகத் தகர்க்கும் டாப்ஸியின் அந்த இறுதி வாதம் விசில் பாராட்டுகளை வாரிக் குவிக்கிறது. அந்த ஒரு காட்சி போதும் டாப்ஸியின் கிளாமர் டால் இமேஜை தகர்க்க!

ஒரு தரப்பை மட்டுமே குறிவைத்து பேசாமல், "பாகிஸ்தான் ஜெயிச்சா ஒரு சாரர் கொண்டாடறாங்க. அதை நிறுத்தணும்!" என்று அந்த மதத்தைச் சார்ந்த ஒருவரை வைத்தே ஒரு கருத்தை முன் வைத்திருப்பது கவனிக்கத்தக்கது. அதே சமயம், "ஒரு மதத்தைச் சேர்ந்த அனைவரையும் குற்றவாளியாகவும் தீவிரவாதியாகவும் பார்ப்பது என்ன நியாயம்" என்ற கேள்வியையும், இன்னமும் எத்தனை நாள்களுக்கு மதத்தின் பெயரால் "நீயா, நானா?" விளையாடப்போகிறோம்? எப்போது இணைந்து ஒரு நாடாக வாழப்போகிறோம் என்ற கேள்வியையும் Mulk முன்வைக்கிறது. ஆனால், இந்தப் படம் எழுப்பியிருக்கும் கேள்விகள், நியாயத் தராசை சரியான சமநிலையில்தான் வைத்திருக்கிறதா என்பதற்கான விடை அவரவர் மனநிலையைப் பொறுத்ததே!

அடுத்த கட்டுரைக்கு