Published:Updated:

ஆங்கிலேயர்களுடனான 200 வருடப் பகையை எப்படி வென்றது இந்திய ஹாக்கி அணி... ‘கோல்ட்’ படம் எப்படி?

ர.முகமது இல்யாஸ்

இந்தியாவும் பாகிஸ்தானும் இரண்டு நாடுகளாகப் பிரிய, ஹாக்கி அணியும் இரண்டாக உடைகிறது. தடைகளை மீறி, எப்படி தபன் தாஸ், 200 வருட பகையை வென்றார் என்பதே ‘கோல்ட்’.

ஆங்கிலேயர்களுடனான 200 வருடப் பகையை எப்படி வென்றது இந்திய ஹாக்கி அணி... ‘கோல்ட்’ படம் எப்படி?
ஆங்கிலேயர்களுடனான 200 வருடப் பகையை எப்படி வென்றது இந்திய ஹாக்கி அணி... ‘கோல்ட்’ படம் எப்படி?

1936-ம் ஆண்டு. இந்தியர்கள் விடுதலைக்காக ஆங்கிலேயர்களுக்கு எதிராக, மிகக் கடுமையாகப் போராடிக்கொண்டிருந்த காலகட்டம். அன்றைய நாஜி ஜெர்மனியில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகின்றன. ஒலிம்பிக் போட்டிகளில், ஹாக்கி விளையாட்டின் இறுதிப் போட்டியில் பிரிட்டிஷ் இந்தியாவும் ஜெர்மனியும் மோதுகின்றன. ஹிட்லர் கண்ணெதிரே நடைபெற்ற இந்தப் போட்டியில் பிரிட்டிஷ் இந்தியா வெல்கிறது. பிரிட்டிஷ் கொடி ஏற்றப்பட்டு, ‘லாங் லிவ் தி கிங்!’ என்ற பிரித்தானிய தேசிய கீதம் பாடப்படுகிறது. இந்திய ஹாக்கி அணியின் மேனஜராக இருக்கிறார் தபன் தாஸ் (அக்‌ஷய் குமார்). அப்போது தன் அணியினரிடம், “அடுத்த ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்காகத் தங்கப் பதக்கம் வென்று, ஆங்கிலேயர்களுடனான 200 வருடப் பகையை வெல்ல வேண்டும். இந்திய தேசியக் கொடி பறக்க, இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும்” எனச் சூளுரைக்கிறார். இரண்டாம் உலகப் போர் நடைபெற, ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த 12 ஆண்டுகளுக்கு நடக்காமல் போகின்றன. இடையில், இந்தியாவும் பாகிஸ்தானும் இரண்டு நாடுகளாகப் பிரிய, ஹாக்கி அணியும் இரண்டாக உடைகிறது. இடைப்பட்ட காலத்தில், தபன் தாஸ் குடிபோதைக்கு அடிமையாகிறார். தடைகளை மீறி, எப்படி தபன் தாஸ் புதிய ஹாக்கி அணியைக் கட்டமைத்து, இருநூறு வருடப் பகையை வென்றார் என்பதே ‘கோல்ட்’.  

1948-ம் ஆண்டின் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா பிரிட்டன் அணியை வென்று, தங்கப் பதக்கம் பெற்றது என்ற ஒன் லைனை மட்டும் வைத்துக்கொண்டு அபாரமான கற்பனைக் கதை ஒன்றை உருவாக்கி, சிறப்பாக இயக்கியுள்ளார் ரீமா கக்தி. ஆகஸ்ட் 15-ம் தேதி ரிலீஸ் எனத் திட்டமிட்டு, படம் முழுவதும் தேச பக்தியைத் தூவியிருக்கிறார்கள்.

1936-ம் ஆண்டு நடக்கும் போட்டியை இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் குழந்தைகளாக இருக்கும்போதே கேட்டு, வளர்ந்வர்கள் 1948-ம் ஆண்டு ஒரே ஹாக்கி அணியில் இணைந்து விளையாடும்போது, மோதிக்கொள்வதாக அமைந்திருக்கும் துணைக் கதை அன்றைய இந்தியாவின் யதார்த்தத்தை உணர்த்துவதாக அமைந்திருக்கிறது.

அக்‌ஷய் குமார் இந்திய ஹாக்கி அணியின் மேனஜராக நடித்து இருக்கிறார். ஹாக்கி வீரர்களைக் கண்டுபிடித்து, பயிற்சியளித்து, தேச பக்தி ஊட்டி, தங்கப் பதக்கம் வாங்க வைக்கும் வேலை அவருக்கு. கடந்த நான்கு ஆண்டுகளாகவே, அக்‌ஷய் குமார் இதே பணியைத்தான் செய்து வருகிறார். வெளிநாட்டில் தன்னுடன் மாட்டிக்கொண்ட இந்தியர்களைத் திரும்ப தாய்நாடு அழைத்து வருபவராக, இந்திய கடற்படை அதிகாரியாக, இந்தியாவைத் தீவிரவாதிகளிடம் இருந்து காப்பாற்றிய ராணுவ அதிகாரியாக, இந்தியா முழுவதும் கழிப்பிடங்கள் கட்டி ‘ஸ்வச் பாரத்’ திட்டத்தை நிறைவேற்றியவராக, இந்திய பெண்களுக்கு மாதவிடாய் பற்றிப் பாடம் எடுத்தவராக ஒவ்வொரு படத்திலும் தேச பக்தியின் திருவுருவமாக நிற்கிறார் அக்‌ஷய் குமார். தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கேப்டன் விஜயகாந்தும் ஆக்‌ஷன் கிங் அர்ஜுனும் செய்து வந்த பணி இது. வாழ்த்துகள் ஜி!

ஒரு ஸ்போர்ட்ஸ் திரைப்படமாக மட்டும் சுருங்கிவிடாமல் அன்றைய இந்தியாவின் தோற்றத்தை அழகாக மீண்டும் உருவாக்கி இருக்கிறது ‘கோல்ட்’. அல்வாரோ குடிரெஸின் (Álvaro Gutiérrez) கேமரா அதைச் சர்வசாதாரணமாகச் சாத்தியமாக்கியிருக்கிறது. க்ளைமாக்ஸ் இதுதான் எனத் தெரிந்தும், பார்வையாளர்களைச் சீட்டின் நுனிக்கு நகர்த்துகிறது ஆனந்த சுப்பையாவின் படத்தொகுப்பு.

கடந்த ஆண்டு வெளிவந்த அக்‌ஷய் குமாரின் ‘பேட் மேன்’ (Pad Man) திரைப்படம், தமிழ்நாட்டைச் சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் என்பவரின் கதையைத் தழுவி அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், அதை மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த லக்‌ஷ்மிகாந்த் சௌகான் என்பவரின் கதையாக மாற்றி சித்திரித்திருந்தார்கள். ‘கோல்ட்’ திரைப்படமும் அதே தவற்றைத்தான் செய்கிறது.

1948-ம் ஆண்டு இந்திய ஹாக்கி அணி தங்கம் வென்றபோது, அதன் கோல் கீப்பராக இருந்தவர் ரங்கநாதன் பிரான்சிஸ் என்கிற தமிழர். ஆனால், ‘கோல்ட்’ திரைப்படத்தின் ஹாக்கி அணியில் ஒரு தென்னிந்தியர்கூட இல்லை. விளையாட்டு வீரர்களைத் தேடும்போதுகூட, மஹாராஷ்ட்ராவுக்கு தெற்கில் செல்ல அக்‌ஷய் குமாரின் கதாபாத்திரம் முயல்வதாக காட்டப்படவே இல்லை. உண்மைக் கதையைத் தழுவி, தேச பக்திக்காக புனைவு செய்யப்பட்ட திரைப்படத்தில் தேசத்தின் ஒரு பகுதியே மறைக்கப்பட்டு இருப்பது மிகப்பெரிய பிழையாகவும் உறுத்தலாகவும் இருக்கிறது.

அரசியல் ரீதியாக இப்படியொரு பிழையை செய்து இருந்தாலும், படத்தில் ஒரு வரவேற்கத்தக்க விஷயமும் இருக்கிறது. இந்தியாவுக்கு எதிரியாகப் பாகிஸ்தானை முன்னிறுத்தப் பல காரணங்கள் இருப்பினும், இந்திய அணி வீரர்களும் பாகிஸ்தான் அணி வீரர்களும் பிரிட்டனை வெல்வதை மட்டும் லட்சியமாகக் கொண்டு இருப்பதாகச் சித்திரிக்கப்பட்டு இருக்கிறது. இந்திய அணி பாகிஸ்தானுக்காக வேண்டிக்கொள்கிறது; பாகிஸ்தான் அணியினர் இந்திய அணி வெல்ல வேண்டும் எனக் குரல் கொடுக்கிறது. இது போன்ற காட்சிகள் பாலிவுட் திரைப்படங்களில் தோன்றுவது இரண்டு நாடுகளின் தோழமைக்கும் எதிர்காலத்துக்கும் நல்லது.

சுதந்திர தினத்தன்று வெளியாகி, குடும்பத்தினரோடு பார்க்கக்கூடிய திரைப்படமாகத் தங்கப் பதக்கம் வென்றிருக்கிறது இந்த ‘கோல்ட்’!